யைஇயக்குநர் அதியன் ஆதிரை இயக்கிய தண்டகாரண்யம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தண்டகாரண்யம் என்பது ராமாயணத்தில் ராமரும், லட்சுமணனும் அலைந்த காடுகளையே குறிக்கிறது. அடர்ந்த காடுகளான இவை இன்றைய கிழக்குத் தொடர்ச்சி மலையிலிருந்து ஜார்க்ண்ட் வரை பல மாநிலங்களில் உள்ளது. எப்படி, ராமாயணத்தில் ராமரும் லட்சுமணனும் காட்டிற்குள் சிக்கல்களைச் சந்தித்தனரோ அதேபோல் இந்த தண்டகாரண்யத்தில் அண்ணன் தினேஷ், தம்பி கலையரசன் சந்திக்கும் இடர்களும் எழுச்சியுமே இப்படத்தின் கதை.
கிருஷ்ணகிரி மலைப்பகுதி ஒன்றில் நடிகர் தினேஷின் குடும்பம் வசித்து வருகிறது. இவரது தம்பி கலையரசன் வனத்துறையில் பணியாற்றி வருகிறார். அதிகாரத்திற்கு எதிரான தினேஷின் குரலால், கலையரசனுக்கு வேலை போகிறது. தொடர்ந்து, தன் தம்பியின் வாழ்க்கைக்காக நிலத்தை விற்று ராணுவத்தில் சேர்க்கலாம் என்கிற ஆசையில் கலையரசனை ஜார்கண்டிலுள்ள பயிற்சி முகாம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கிறார். அந்தக் காட்டில் கலையரசனும் இந்தக் காட்டில் தினேஷும் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் மூலம் உழைப்பவர்களின் வலியையும் அரசியலையும் பதிவு செய்த இயக்குநர் அதியன் ஆதிரை, தண்டகாரண்யத்தில் முக்கியமான விஷயமொன்றைப் இருவேறு கோணங்களில் அலசியிருக்கிறார். பழங்குடிகள் சந்திக்கும் அதிகார அடக்குமுறைகளும் அதிகாரத்திற்கு எதிராக எழும் சக்திகளையும் ஒன்றொன்று தொடர்புப்படுத்தி தினேஷையும் கலையரசனையும் இருவேறு துருவங்களில் நிற்க வைத்து வாழ்வையும் வலியையும் கதாபாத்திரங்கள் வழியே கடத்தியிருக்கிறார்.
உண்மையில், காடு அரசிற்கா இல்லை அங்கு பலநூறாண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்காக? இந்தக் கேள்விக்கு அறத்தில் ஒரு பதிலும் சட்டத்தில் ஒரு பதிலும் இருக்கின்றன. கலை எதை நோக்கி நகருமோ அதை அதியன் தொட்டிருக்கிறார்.
உருவாக்க ரீதியாக காட்டையும், ஜார்கண்டில் நடக்கும் பயிற்சிகளையும் காட்சிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தன. திரைக்கதை முடிச்சுகள் அரசியலை முன்வைக்க வேண்டுமென்பதில் இயக்குநருக்கு கவனம் இருந்திருக்கிறது.
ஆனால், பழங்குடியினரின் வலிகள் நன்றாக பதிவாகிக்கொண்டிருந்தபோது திடீரென தினேஷ் கதாபாத்திரம் அதிரடியாக மாறுவதுடன் பின்னணி இசையில் பெரிய நாயக பிம்பத்தையும் வழங்குவதால் இப்படத்தின் மையம் வன்முறைக்கு வன்முறை பதில் என்பதை நோக்கியே திரும்புவது குறையாகத் தெரிகிறது. இயல்பான எழுச்சியைக் காட்டியிருந்தாலே ரசிகர்களுக்கு உணர்வுகள் சரியாகக் கடத்தப்பட்டிருக்குமே?
வழக்கமாக, மலைப்பகுதிகளில் அதிகார அத்துமீறல்கள் என்றாலே பெண்கள் மீதான பாலியல் வன்முறைதான் என்பது இப்படத்தில் இல்லாதது பெரிய ஆறுதலையே கொடுக்கிறது. சில உண்மைச் சம்பவங்கள் நடந்திருந்தாலும் விடுதலை போன்ற சில திரைப்படங்கள் அதனை கையாண்டுவிட்டன என்பதால் தண்டகாரண்யம் அப்பகுதியைத் தொடாமலேயே வலியைச் சொல்கிறது.
நடிகர்கள் தினேஷ், கலையரசன் இருவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். மெட்ராஸ் படத்திலிருந்து தண்டகாரண்யம் வரை பா. இரஞ்சித் திரைப்படங்களில் இருப்பதால் கலையரசனுக்கு அதிகாரத்தைத் தட்டிக்கேட்கும் கதாபாத்திரங்களை இயல்பாகக் கையாளவும் முடிகிறது. இரண்டாம்பாதியில் தினேஷின் கதாபாத்திர வார்ப்பு நன்றாக வந்திருக்கிறது. நாயகி வின்ஷு சாம் காதல் வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சபீர் கல்லரக்கல் தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவு. உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களையும் வழங்கலாம். நடிகர்கள் ரித்விகா, அருள் தாஸ், முத்துக்குமார் என பலரும் கதைக்குத் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர்.
காட்டின் கதையைச் சொல்ல முற்படும்போது முன்நிற்கும் பெரிய சவாலே ஒளிப்பதிவுதான். இப்படத்தில் வன விலங்களுகள், வனச்செரிவுகள் நன்றாக காட்சிப்படுதப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, நாயகன் கலையரசனும் நாயகியும் ஆடையில்லாமல் நடப்பதுபோன்ற காட்சியும் அதன் வசனங்களும் கவித்துவமாகவும் அதேநேரம் படம் பேச வருகிற அரசியலையும் மையமிட்டு நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.
கலை இயக்குநரின் பணியும் கவனிக்கும்படி இருந்தாலும் கிளைமேக்ஸில் கலையரசன் குழுவினர் வைத்திருக்கும் ஏகே - 47 ரக துப்பாக்கிகள் டம்மி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால், உணர்வுப்பூர்வமாக மாறவேண்டிய காட்சியிலிருந்து விலகல் உருவாகிறது. இதைக் கொஞ்சம் கவனத்தில் வைத்திருக்கலாம்.
ஆண்டாடு காலமாக பல பழங்குடிகளை எவ்வளவோ அதிகார அமைப்புகள், அரசியல்வாதிகள் தங்கள் சக்திகள் மூலம் அம்மக்களின் வாழ்விற்கே விலங்கிட்டுள்ளனர். அதனைக் கேள்வி கேட்கும் விதமாக அதியன் ஆதிரை அந்த அதிகாரங்களுக்கு கைவிலங்கிடும் முயற்சியில் ஒரு வெற்றியைக் கண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வாழ்வியலுடன் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் தண்டகாரண்யம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.