பாரதிராஜா மறைவு! ராகவா லாரன்ஸின் முக்கிய அறிவிப்பு ஒத்திவைப்பு!
ஜூன் 11-ல் திட்டமிடப்பட்டிருந்த நடிகர் ராகவா லாரன்ஸின் முக்கிய அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவையொட்டி, தனது முக்கிய அறிவிப்பை ஒத்திவைப்பதாக நடிகரும், ஆர்வலருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலை உடல்நலக் குறைவால் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே, வரும் ஜூன் 11 ஆம் தேதி தனது வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவை அறிவிப்பதாக, நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா மீதான மரியாதையாலும், அவரது மறைவால் திரையுலகினர் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் துயரத்தில் இருப்பதாலும், நாளை திட்டமிடப்பட்டிருந்த அறிவிப்பை ஒத்திவைப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“என் வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவை ஜூன் 11 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அறிவிப்பதாக நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
தற்போது பாரதிராஜா அவர்களின் மறைவால் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த இழப்பு, நம் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்றதொரு தனிப்பட்ட துயரமாக எனக்குத் தோன்றுகிறது. பாரதிராஜா சார் மீதும், திரைத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பின் மீதும் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன்.
இதனால், ஜூன் 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் எனக் கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.