ஜுங்கா ஜுங்கா ஜுங்கா ஜுங்கா: மீண்டெழுவாரா விஜய் சேதுபதி?
விஜய் சேதுபதி தயாரிக்கும் படம் வெளியாகும்போதா இப்படியொரு அசாதாரண சூழல் நிலவவேண்டும்?
ஜுங்கா ஜுங்கா ஜுங்கா ஜுங்கா ஜுங்கா ஜுங்கா ஜுங்கா ஜுங்கா
டீசரில் யோகி பாபு இதை பலமுறைச் சொல்லிப் பார்க்கிற காட்சி, உண்மையிலேயே இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையை உருவாக்கியது. இந்தப் படம் இப்படித்தான் என்பதற்கு உதாரணமாகவும் அமைந்தது அக்காட்சி.
இதுவொரு ஜாலியான ஒரு டான் படம் என்கின்றன டீசர், டிரெய்லர்கள். பாரிஸில் எடுக்கப்பட்ட டான் படம் என்பது படத்துக்குப் புதுப் பிரமாண்டத்தைத் தந்துள்ளது. ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா ஆகிய படங்களை இயக்கிய கோகுலின் நான்காம் படம். இதற்குத்தானே... கோகுலுக்கு நல்ல அடையாளம் கொடுத்தது. விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணைந்துள்ளதால் இதுவும் மற்றொரு எதிர்பார்ப்புக்குக் காரணம்.
Advertisement
கவனிக்க வேண்டிய அம்சங்கள்
யோகி பாபு
ஆண்டவன் கட்டளை படம் யோகி பாபுவை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. அதே விஜய் சேதுபதி - யோகி பாபு கூட்டணி மீண்டும் தொடர்ந்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் இன்னொரு அம்சம். சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியபிறகு அது யோகி பாபுவுக்குப் பல வாய்ப்புகளை அள்ளித் தரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதனால் குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராகிவிட்டார். இந்தப் படம் யோகி பாபுவுக்கு இன்னொரு திருப்புமுனையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மடோனா
காதலும் கடந்து போகும், கவண் படங்களுக்குப் பிறகும் மடோனாவைத் தமிழ் சினிமாவில் அவ்வளவாகக் காணமுடியவில்லை. ப. பாண்டி படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததுபோல இதிலும் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இது. மடோனாவுக்கு மேலும் பல வாய்ப்புகளைத் தரும் படமாக ஜுங்கா அமையுமா?
தயாரிப்பாளர் விஜய் சேதுபதி
பாரிஸில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்குமளவுக்குப் பெரிய பட்ஜெட் படமாக உருவாக்கியிருக்கிறார் இப்படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ள விஜய் சேதுபதி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரண்யா, விஜய் சேதுபதியுடன் நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்தபோது, என்னிடம் வந்து இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா? எனக் கேட்டார். அதற்கு நான், உனக்கென்னப்பா குறை? பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய் என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன் என்றார். விஜய் சேதுபதியின் வெற்றியில் மகிழ்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். வெற்றித் தருணங்கள் மீண்டும் தொடரவேண்டும் என்பதே பலருடைய விருப்பம்.
திரைக்கதை
விஜய் சேதுபதியின் படங்களில் கதைக்கும் வலுவான காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. அதன்படி வித்தியாசமான டான் கதையாக இது எடுக்கப்பட்டுள்ளதால் இதன் திரைக்கதை குறித்த ஆர்வம் பலருக்கும் உண்டு. ஜாலியான டானுக்கு ஏற்ற வகையில் திரைக்கதையும் வசனங்களும் எப்படி உருவாக்கப்பட்டிருக்கும்?
படக்குழு
நடிப்பு - விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், மடோனா, யோகி பாபு
இயக்கம் - கோகுல்
இசை - சித்தார்த் விபின்
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கவண், விக்ரம் வேதா போன்ற ஹிட் படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து வெளியான புரியாத புதிர், கருப்பன், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. விஜய் சேதுபதி தயாரிக்கும் படம் வெளியாகும்போதா இப்படியொரு அசாதாரண சூழல் நிலவவேண்டும்? எனினும் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளதால் முதல் மூன்று நாள்களில் நல்ல வசூல் கிடைக்கும் எனத் தெரிகிறது. இன்று மலேசியாவில் இப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. மற்ற படங்களை விடவும் இந்தப் படத்தைப் பெரிய அளவில் விளம்பரம் செய்துவருகிறார் விஜய் சேதுபதி.
விஸ்வரூபம் ஆகஸ்ட் 10-ல் வெளியாகிறது. மேலும் இரு வாரங்களுக்கு முன்பு வெளியான கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப்படம் 2 படங்கள் இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன. எனவே இதற்கு மத்தியில் வெளியாகவுள்ளது ஜுங்கா. நாளை த்ரிஷா நடித்த மோகினி படமும் வெளியாகிறது. எனினும் ரசிகர்களிடம் விஜய் சேதுபதிக்கு உள்ள வரவேற்பை முன்னிட்டு பெரிய திரையரங்குகள் இப்படத்துக்குக் கிடைத்துள்ளன.
*
செக்கச் சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, 96 என அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் ஏராளமான படங்கள் வெளிவரவுள்ளன. ஜுங்கா படம் வெற்றியடைந்தால் அந்தப் படங்களின் வர்த்தகமே மாறக்கூடும். எனவே யோகி பாபு போல ரசிகர்களும் ஜுங்கா ஜுங்கா ஜுங்கா ஜுங்கா என ஓயாது உச்சரித்தால் விஜய் சேதுபதியின் சமீபத்திய சறுக்கல்களுக்கு ஒரு முற்றுபுள்ளி கிடைக்கும்.