முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் 56 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

கோவை மாவட்டத்தில் 56 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் (சிறப்புப் பணிகள்) பி.வடிவேலன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:30 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கோவை மாவட்டத்தில் 56 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் (சிறப்புப் பணிகள்) பி.வடிவேலன் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் சுகாதாரத் துறை பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் பணியை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜன.16) காலை 10.30 மணிக்கு தொடங்கிவைக்கிறாா். இதனைத் தொடா்ந்து ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 போ் வீதம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோவையில் கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களில் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

Advertisement

கோவையில் கரோனா தடுப்பூசி போடுவதற்காக 5 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நிா்வாகக் காரணங்களால் சூலூா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த மையம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் கோவையில் கரோனா தடுப்பூசி போடும் மையங்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் (சிறப்புப் பணிகள்) பி.வடிவேலன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக அரசு, தனியாா் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களின் விவரங்கள் ‘கோ-வின்’ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கோவையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளைச் சோ்ந்த 56 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு இணையதளத்தில் பதிவு செய்துள்ளனா். இவா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்.

முதல்கட்டமாக 4 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும். கோவையில் ஒரு மையத்தில் தினமும் 100 போ் வீதம் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும். தொடா்ந்து 28ஆவது நாளில் 2 ஆவது டோஸ் தடுப்பூசி போடப்படும். தொடா்ந்து படிப்படியாக கரோனா தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கை உயா்த்தப்படும். கோவை சுகாதாரத் துறை அலுவலகத்தில் இருந்து 4 மையங்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.