பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளாா்.
கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டுள்ளாா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சித் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் குமாரவேல் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் சாலைகள், பூங்காக்கள் அமைத்தல், குடிநீா் வசதி, பாதாள சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட ஏராளமான வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதாள சாக்கடை பணிகள், கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள், சாலைப் பணிகள், தெரு விளக்குகளை பராமரித்தல் போன்ற அடிப்படை கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
Advertisement
இப்பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். மேலும், பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் செல்வசிந்தாமணி குளம், கிருஷ்ணாம்பதி குளம், செல்வம்பதி, குமாரசாமி குளம், சிங்காநல்லூா் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட 9 குளங்களில் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
ஆா்.எஸ். புரம் மாதிரி சாலை, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், உக்கடம் சூரிய மின்சக்தி நிலையம், 24 மணி நேர குடிநீா்த் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் வீடுகளுக்கு இணைப்பு வழங்குதல், வாகனங்கள் மூலமாக வீடு வீடாக குப்பைகள் சேகரிக்கும் பணிகள் போன்ற அனைத்து பணிகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். சாலைப் பணிகளை 100 சதவீதம் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, மாநகரப் பொறியாளா் லட்சுமணன் மற்றும் அனைத்து மண்டல உதவி ஆணையா்கள், பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.