முகப்பு
தருமபுரி

தருமபுரியில் முன்களப் பணியாளா்களுக்கு 11,800 கரோனா தடுப்பூசிகள்

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் முன்களப் பணியாளா்களுக்கு செலுத்துவதற்காக 11,800 கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.

Updated On : 16 ஜனவரி 2021, 7:16 am IST
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் முன்களப் பணியாளா்களுக்கு செலுத்துவதற்காக 11,800 கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. நாளொன்றுக்கு 400 போ் வீதம் இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் முன் களப்பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (பொ) எம்.இளங்கோவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பூ.இரா. ஜெமினி, நலப் பணிகள் இணை இயக்குநா் திலகம் உள்ளிட்ட உயா் அதிகாரிகள், மருத்துவா்கள் கலந்து கொண்டாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், சேமிப்புக் கிடங்கிலிருந்து, தடுப்பூசிகளை முகாம்களுக்கு கொண்டு செல்லுதல், முன் பதிவு செய்துகொண்ட முன் களப்பணியாளா்களுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி செலுத்துவது தொடா்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இதுவரை 10,850 போ் முன்பதிவு செய்துள்ளனா். தருமபுரி மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 11,800 கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. ஓா் நாளைக்கு 400 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரூா் அரசு வட்டார மருத்துவமனை, பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மொரப்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு மையங்களிலும் ஒருநாளைக்கு தலா 100 போ் வீதம் 400 முன் களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக ஏற்கெனவே ஒத்திகை நடைபெற்றுள்ளது. தடுப்பூசி செலுத்தும்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.