கட்டுரைகள்

கூடங்குள மக்களின் கொதிப்பு அடங்கவேண்டும்!

ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டம். அணுஉலை மூலம் ஏற்படும் ஆபத்தைப்பற்றி அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு

தி. இன்பராஜ்

ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கப் போராட்டம். அணுஉலை மூலம் ஏற்படும் ஆபத்தைப்பற்றி அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை இருந்துவருவதால் இந்தப் போராட்டத்துக்கு இருக்கும் ஆதரவைவிட எதிர்ப்பு சற்று அதிகம்.

செர்னோபில் மற்றும் புகுஷிமா அணுஉலை விபத்துகள் அனைத்தும் வெளிநாட்டில்தானே நடைபெற்றன என கேள்வி எழுப்பும் சில அறிவுஜீவிகளால் 30 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் இருக்கும் அணுஉலையால் எந்த சிறு விபத்தேனும் நடைபெற்றதுண்டா என்ற கேள்வி எழுப்பப்படத்தான் செய்கிறது.

தாங்கள் கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நோக்கில் இருக்கும் மத்திய அரசிடமிருந்து எதிர்ப்பாளர்களை ஒடுக்கும் பணியை மட்டுமே எதிர்பார்க்க முடியுமே தவிர, வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, "இன்னும் 20 நாள்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கும்' என்று மட்டுமே அவர்களால் எப்படித்தான் சலிக்காமல் கூற முடிகிறதோ? நீதிமன்றம் கண்டித்த பிறகும் இதே பதில் வந்து கொண்டுதான் இருக்கிறது.

இதுதவிர, "கூடங்குளம் அணுமின் நிலையம் மூன்றாம் தலைமுறை பாதுகாப்பு கொண்டது, வெளிநாட்டு சக்திகளின் நிதியுதவியோடு தேவையில்லாத போராட்டம் நடைபெறுகிறது' என்ற குற்றச்சாட்டுகளையும் அவ்வப்போது ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.

"இத்தனை நாள்கள் எங்கிருந்தார்கள்? என்ற கேள்வியை போராட்டக்காரர்களை நோக்கி எழுப்புவது நியாயம்தான். ஆனால், என்ன பிரச்னை, எதற்காகப் போராட்டம், போராட்டத்தின் நோக்கம் என்ன என்ற கேள்விகள், "இத்தனை நாள்கள் எங்கிருந்தார்கள்?' என்ற ஒற்றைக் கேள்விக்குள் முடங்கிவிடுகிறது.

அணுஉலை வேண்டுமா, வேண்டாமா என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும் கூடங்குளத்தில் அணுஉலை வேண்டாம் என்பது மட்டுமே அவர்களது போராட்டத்தின் நோக்கமல்ல என்ற கருத்து மக்கள் மத்தியில் இதுவரை பதிய வைக்கப்படவில்லை. இது போராட்டக்களத்தில் இருப்பவர்களுக்கு பலவீனமானதே.

இந்தப் போராட்டம் மூலம் உலகுக்குத் தெரியவரும் ஒரே உண்மை, அரசியலுக்காக சில அபாண்டங்களை அள்ளி வீசும் ஆட்சியாளர்களின் மாய வலையில் மக்கள் எப்போதும் விழுந்து கிடக்கிறார்கள் என்பதே.

வெளிநாட்டில் இருந்து நிதியுதவி வருகிறது எனக் கூறும் ஆட்சியாளர்களால் இதுவரை ஏன் அதை நிரூபிக்க முடியவில்லை என்ற கேள்விக்குப் பதில் கூற ஆளில்லை.

வெளிநாட்டு நிதி என்ற ஆட்சியாளர்களின் மந்திரத்தை ஏற்றுக்கொள்ளும் பொதுமக்கள், ஒரு அரசு நினைத்தால் அதனை கண்டுபிடிக்க முடியாதா என்ற கேள்வியைத் திருப்பி எழுப்புவதில்லை.

கூடங்குளம் போராட்டக்களம் தற்போது சில மாறுபட்ட சூழலை உருவாக்கி உள்ளது. வெளிப்படையாக போராட்டத்தை நடத்தியவர்களில் சிலர் அடக்குமுறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். ஜாதி, மதச் சாயம் என்ற பல பிரிவினைகளுக்கு மத்தியில், மக்கள் போராட்டம் என்ற நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது அவர்களுக்கு பலமானதே.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் லாபத்துக்காக புறம் பேசியவர்கள் எல்லாம் அறம் பேசத் தொடங்கியுள்ளனர். இடையில் காணாமல் போனவர்களெல்லாம் தேடி ஆதரவு தெரிவிக்கும் நிலை உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த தங்களது சில பிடிவாதமான கருத்துகளில் இருந்து போராட்டக்காரர்கள் சற்று இறங்கி வரவேண்டும்.

ஏனென்றால், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இப்படியொரு மக்கள் போராட்டம் தங்களது இலக்கை அடையவில்லை என்றால் ஆட்சியாளர்கள் நினைக்கும் எந்தக் காரியமும் எதிர்ப்பே இல்லாமல் நிறைவேற்றப்படும் நிலையை உருவாக்கிவிடும்.

எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் போராட்டம் தொடருவது சமூக ஆர்வம் கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியையே கொடுக்கும். ஆனால், இதுபோன்ற போராட்டங்கள் மற்ற இடங்களிலும் நடைபெறத் தொடங்கினால் ஆட்சியாளர்களுக்கு அது கசப்பான அனுபவமாக மாறிவிடும்.

மக்கள் போராட்டத்துக்கு செவிசாய்த்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அடக்குமுறை ஒருபோதும் தீர்வாகாது என்பதை உணர்ந்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நிரந்தரமான முடிவுகளை எடுக்க வேண்டும். கூடங்குளம் பகுதியில் வளர்ச்சித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அணு மின் நிலையம் அங்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்தப் பகுதியின் பின் தங்கிய நிலைமையைப் போக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. அணு மின் நிலையத்தை ஏற்றால்தான் அடிப்படை வசதிகளைச் செய்து தருவோம் என்பது மக்களை மிரட்டிப் பணியவைப்பதைப் போலாகும். அதை யாரும் செய்யக்கூடாது. உயிர், உடைமைகளுக்கான பாதுகாப்பை விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் நேரில்போய் உறுதி செய்தால் மக்கள் அதை ஏற்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT