கட்டுரைகள்

உண்மை ஒருநாள் வெல்லும்

இலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது நாடெங்கும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் தலைநகர் தில்லி, முக்கிய நகரமான மும்பை மற்றும் கடல் கடந்த நாடுகளிலும் தமிழ் மக்களின் எழுச்சி, பல்வேறு போராட்ட வடிவங்களைப் பெற்றுள்ளது.

உதயை மு. வீரையன்

இலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது நாடெங்கும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் தலைநகர் தில்லி, முக்கிய நகரமான மும்பை மற்றும் கடல் கடந்த நாடுகளிலும் தமிழ் மக்களின் எழுச்சி, பல்வேறு போராட்ட வடிவங்களைப் பெற்றுள்ளது.

இங்கெல்லாம் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், மனிதச் சங்கிலிகள், பேரணிகள், ஊர்வலங்கள், கடையடைப்பு, வேலை நிறுத்தங்கள் எனத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்திய நாடாளுமன்றத்திலும் முறையான விவாதங்களும், முறையற்ற ஆர்ப்பாட்ட அமளிகளும் தமிழக அரசியல் கட்சிகளால் நடத்தப்பட்டன. எனினும் மத்திய அரசு எதற்கும் செவி சாய்க்கவில்லை.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை கோருவதற்கு இந்தியா தயக்கம் காட்டி வருகிறது. குதிரை குப்புறத் தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்ததுபோல அமெரிக்கத் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ததோடு, "படிப்பினை நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்பதாக இலங்கை அரசு கூறியதற்குப் பாராட்டும்' தெரிவித்துக் கொண்டுள்ளது.

இதனால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக அரசிலிருந்து விலகுவதாக அறிவித்தது. இலங்கையில் தமிழர்கள் மேல் நடைபெற்ற தாக்குதல்களைப் போர்க்குற்றமாகவும், இனப் படுகொலையாகவும் அறிவித்து நாடாளுமன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைக் குழுவிலும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்பது திமுக மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளாகும்; மாணவர் மற்றும் தமிழ் அமைப்புகளின் கோரிக்கையும் இதுவே.

இவ்வளவு நெருக்கடிகளுக்குப் பிறகு மத்திய அரசும், ஆளும் காங்கிரஸ் கட்சியும் அசைந்து கொடுக்க ஆரம்பித்தன; அவசரம் அவசரமாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. "இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகமான விசாரணை வேண்டும்' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாய் திறந்து பேசியுள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அவையின் இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா அவசரமாகத் தில்லிக்கு அழைக்கப்பட்டார். அவருடனும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாய் ஆகியோருடனும் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானம் கொண்டுவர மற்ற எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டதால், ஐ.நா. மனித உரிமைக் குழுவில் திருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 21 அன்று வாக்கெடுப்புக்கு முன் இந்தியத் தரப்பில் 7 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்; வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்த வேண்டும்; போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், அப்பாவி பொதுமக்கள் உயிர் இழந்தது தொடர்பாக உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் "சுதந்திரமான' விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை இந்தியா எழுத்து மூலம் தெரிவித்திருந்தது. ஆனால், இந்தத் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் மொத்தம் 47 நாடுகள் இருக்கின்றன. இதில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தன. தீர்மானம் வெற்றி பெற்றது. இதற்கு எதிராக 13 நாடுகள் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்தியா வேறு வழியில்லாமல், தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் இறுதித் தீர்மானம் கடந்த 18.3.2013 அன்று தாக்கல் செய்யப்பட்டது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மனித உரிமைக் கவுன்சில் மிகுந்த பரபரப்போடு இதனை ஏற்றுப் பரிசீலித்தது.

அதில், போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் (எல்.எல்.ஆர்.சி.) அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும், அனைத்து இலங்கைக் குடிமக்களுக்கும் நீதி, உரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்த தனது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் இலங்கை அரசை இந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டது. தீவிரவாதத்தை ஒடுக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதாக இருப்பதை நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உள்ளாட்சிக் கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என்ற அந்நாட்டு அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்தத் தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், சிறப்புப் பிரதிநிதிகள் தங்கு தடையின்றி இலங்கைக்குச் சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கைவிடப்பட்டன. இவை இரண்டும் வரைவுத் தீர்மானத்தில் இருந்த கோரிக்கைகளாகும். இப்போது இறுதித் தீர்மானத்தில் இவை நீக்கப்பட்டுவிட்டன.

இறுதித் தீர்மானத்தில் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு மாற்றங்களும் இந்தியாவின் தீவிர முயற்சி காரணமாக அமெரிக்கா எடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. நாடுகளின் இறையாண்மை தொடர்பான இந்தியாவின் கருத்தையொட்டியே இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றிருப்பதை வரவேற்றும், எதிர்த்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் இருவிதக் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. மனித உரிமை அமைப்புகளும் குறை கூறியுள்ளன.

இலங்கையில் நடந்த திட்டமிட்ட ஓர் இனப் படுகொலையை வெறும் மனித உரிமை மீறலாகத் தீர்மானம் குறைத்துக் காட்டுவது வேதனையானது; அத்துடன் இதற்குச் சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்தாதது பற்றி பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், குற்றம் செய்த ஒரு நாட்டைக் கூண்டில் ஏற்றியதற்குச் சமமாகவே இந்தத் தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்; இது ஒரு தொடக்கம்தான்; இன்னும் பல படிகள் இருக்கின்றன; இது ஓர் ஆறுதல் வெற்றிதான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

எப்படியிருப்பினும் இலங்கையில் நடந்த இனப் படுகொலை உலகின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அந்தத் தீவின் மீது கரும்புள்ளி குத்தப்பட்டுள்ளது. போர்க்குற்றம் இழைத்த இலங்கை அரசாங்கம் உலகத்துக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது. அதற்குத் துணைபோன இந்தியாவும் எத்தனை காலத்துக்கு இரட்டை வேடம் போட முடியும்?

கேரள மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இத்தாலியின் மீது அவசர நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு, தமிழ்நாட்டு மீனவர்கள் நாள்தோறும் தாக்கப்படுவது பற்றி மெüனம் சாதிப்பது ஏன்? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா?

அன்றாடம் அவர்களது வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. படகுகள் உடைக்கப்படுகின்றன; வலைகள் அறுக்கப்படுகின்றன. பிடித்து வைத்த மீன்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன; சுடப்படுதல், தாக்கப்படுதல், வெட்டப்படுதல், கைது, சிறை, விடுதலை - இப்படியிருந்தால் அவர்கள் வாழ்வது எப்போது?

தமிழ்நாட்டு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்; தமிழ்நாட்டைச் சேர்ந்த பாவப்பட்ட மத்திய அமைச்சர்கள் வெற்று வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றனர். இந்த மீனவர்கள் எத்தனை காலத்துக்கு இதனைச் சகித்துக் கொண்டிருப்பார்கள்? பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா!

"இலங்கை நட்பு நாடு' என்று இந்தியா அடிக்கடி கூறி வருகிறது. அப்படியானால் தமிழ்நாட்டு மீனவர்கள் அன்னியர்களா என்ற கேள்வி எழுகிறது. சொந்த நாட்டு மக்களையும், இந்திய மீனவர்களையும் தொடர்ந்து வேட்டையாடும் நாடு நட்பு நாடாகுமா?

அமெரிக்காவின் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தை விமர்சிக்கிற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், தமிழ் அமைப்புகளும், மாணவர்களும் நம் நாட்டு நிலையைக் கவனத்தில் கொள்ளுவது நல்லது. இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்குக்கூட செயலற்ற நிலையில் இந்திய அரசியல் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆனால், உலகமெங்கும் அகதிகளாக ஓடிப்போய் வாழும் ஈழத் தமிழ் மக்கள் தங்களது இடைவிடாத முயற்சியால் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றச் செய்திருக்கிறார்கள். இதற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

விடுதலை பெற்ற நாட்டில் அடிமைகளாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்; அடிமைப்பட்ட நாட்டில் சுதந்திரமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களால் முடிந்தது; நம்மால் முடியவில்லை. இந்த ஆதங்கம் இந்திய நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் இருக்கிறது.

""நாம் தோற்றுப் போகலாம்; அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோற்றவர்கள் எத்தனையோ பேருண்டு. ஆனால், இறுதியில் எவரெஸ்ட் சிகரம் வெல்லப்பட்டது'' என்றான் விடுதலை வீரன் சே குவேரா.

""தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

 மெய்வருத்தக் கூலி தரும்''

என்றார் வள்ளுவர்.

உள்ளத்தில் உறுதியும், செயலிலே உண்மையும் இருக்குமானால் வெற்றிக்கான கதவுகள் ஒருநாள் திறக்கும். விடுதலைப் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை.

கட்டுரையாளர்: பணி நிறைவுற்ற ஆசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT