அண்மையில் நான் ஒரு முதியவரை சந்தித்தபோது, "எனது பிள்ளைகள் என்னைமதிப்பதில்லை, என் தேவைகள் எதையும் பூர்த்தி செய்வதில்லை. வீட்டையும், பேரப் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ளவே என்னை வைத்திருக்கின்றனர்' என்று வருத்தத்துடன் கூறினார்.
அன்றைக்கு, தங்களது பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் கேட்காமலேயே வாங்கி கொடுத்தவர்கள், அவர்களுக்கு கல்வியை வழங்கியவர்கள், அவர்களுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்து அவர்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருப்பவர்களை, அவர்களுடைய பிள்ளைகள் துச்சமாக நினைக்கின்றனர்.
குடும்பத்தில் முக்கிய முடிவெடுப்பதற்காக கூட அவர்களுடைய பிள்ளைகள் அவர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை. அந்த குடும்பத்தை காப்பாற்றவும், தன்னுடைய பிள்ளைகளை படித்து ஆளாக்கி வேலை பெற்றுத் தரவும் அந்த தந்தை தனது இளமைக் காலத்தில் எவ்வளவு உழைத்திருப்பார், கஷ்டப்பட்டிருப்பார் என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அதனை பெரிதாக நினைக்காமல் பிள்ளைகள் மறந்து போய்விடுகின்றனர். முதியவர்களை பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் முள்வேலியைப் போன்று நினைக்கின்றனர்.
முதியோர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுகளையும், துணிகளையும்கூட வாங்கிக் கொள்ள முடியாமல் அதற்கும் தங்களுடைய பிள்ளைகளின் கையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவர்களுடைய அனுபவம் கூட பயன்படுத்தப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகிறது. அதனால் அவர்கள் தங்களுக்குள்ளேயே புழுங்கிக்கொள்கின்றனர். தங்களுடைய பிரச்னைகளை எடுத்துக் கூற ஒரு வடிகால் இல்லையே என்று மனதுக்குள் அழுது கொண்டிருக்கிறார்கள்.
தங்களுடைய வயதுக்கு ஏற்றவராக இல்லாதபோதிலும் தங்களுடைய மனக்குமுறல்களை பேரப்பிள்ளைகளிடம் பகிர்ந்துகொள்கின்றனர். அந்த பேரப்பிள்ளைகள் தங்களுடைய தாத்தா, பாட்டிக்களுக்காக பெற்றோர்களிடத்தில் பரிந்து பேசும் பொழுது அவர்களுக்கு பெற்றோரிடமிருந்து கிடைப்பது வசவுகள் மட்டுமே.
தங்களுக்கென்று எந்தவித பற்றுதலும் இல்லாவிட்டாலும் தங்களுடைய பேரப்பிள்ளைகளுக்காகவே முதியோர்கள் வாழ்கின்றனர். பேரப்பிள்ளைகளுடன் பேசுவதையும், விளையாடுவதையும், கதைகள் கூறுவதையும் மன வேதனைகளுக்கு வடிகாலாக கருதுகின்றனர். அதனால் அவர்களும் முதுமை பருவத்தில் சிறுகுழந்தைகளாகவே மாறிவிடுகின்றனர்.
வயதில் முதுமையாக இருந்தாலும், மனதளவில் அவர்களும் சிறு குழந்தைகளே. அதனால் அவர்களுக்கு அந்த வயதில் எந்தவித மனவேதனைகளும் இருக்கக் கூடாது. மேலும் அவர்களுடைய வயதிற்கு தகுந்த மரியாதையை பிள்ளைகள் அளிக்க வேண்டும். அவருடைய அனுபவத்தையும், அறிவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகள் தாங்களும் முதுமையடைவோம் என்பதை உணரவேண்டும். முதியவர்களை சரியாக கவனிக்காத பிள்ளைகளை தண்டிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட முதியவர்கள் 99 சதவீதத்தினர் தங்கள் பிள்ளைகள் குறித்து புகார் தருவதேயில்லை. ஏனெனில் தங்களுடைய பிள்ளைகள் மீது அவர்கள் காட்டும் பாசம்தான் காரணம்.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி தங்களை வளர்த்து, ஆளாக்கி, வேலை பெற்றுத் தருவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தி தரும் தங்களுடைய வயதான பெற்றோர்களின் தியாகத்தை உணர்ந்து பிள்ளைகள் செயல்பட்டால் முதியவர்கள் முள்வேலியாக அல்ல; பூவேலியாக இருந்து குடும்பத்தை பாதுகாப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.