குடிநீர்த் தட்டுப்பாடு, மின் தடை, பழுதடைந்த சாலைகள், குப்பைகள் குவிந்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குறைகளுக்கு அரசுப் பணியாளர்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள், ஆட்சியாளர்கள் போன்றோரைக் குறை கூறுவது பொதுமக்களின் இயல்பு. அவர்கள், மக்களுக்கான பணிகளை செய்யாமல் பொறுப்பின்றிச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், இவ்வாறு கோபம் கொண்டு குற்றச்சாட்டு கூறும் பொதுமக்கள் முதலில் நியாயமாக நடந்து கொள்கின்றனரா என்பது முக்கியமான கேள்வி.
பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள், குறிப்பாக, வெளியூர் செல்லும் பேருந்துப் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொட்டலங்களின் கழிவுகள், வழியில் விற்கப்படும் தின்பண்டங்களை உண்ட பின் போடும் கழிவுகள், தேநீர், காபி பருகிவிட்டு தூக்கி எறியும் காகித மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள், கவர்கள், டின்கள், குடிநீர் வாங்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றின் பல்வேறு கழிவுகள் போன்றவை குப்பைகளாக பொது மக்களால் வீசப்படுகின்றன. அவை பேருந்துக்கு உள்ளேயே போடப்படும். அல்லது பேருந்துக்கு வெளியே வீசப்பட்டு விடும்.
இதனால் பேருந்துகளிலும், சாலைகளிலும் குப்பை சேர்கின்றன. நாள்தோறும் இதேநிலை தொடர்வதால் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளின் இருபுறமும் ஏராளமான குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன. பேருந்துகளில் பயணம் செய்யும் பொது மக்களின் இதுபோன்ற செயலால் குடியிருப்புகளே இல்லாத பகுதிகளும்கூடக் குப்பை மயமாகி வருகின்றன.
பேருந்துகள் மட்டுமின்றி வேன்கள், கார்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள், சொந்த வேலையாக பல்வேறு வாகனங்களில் செல்வோர் என பல தரப்பினரும் தாங்கள் பயன்படுத்திய திட, திரவ ஆகாரங்களின் கழிவுப் பொருள்களை சாலைகளிலேயே வீசியெறிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, ரயில் போக்குவரத்திலும் இதே நிலைதான். ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், ரயில் பாதைகள் என பல இடங்களிலும் பொதுமக்களால் போடப்படும் குப்பைக் கழிவுகள் ஏராளம். ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் போடப்படும் கழிவுகளை துப்புரவுப் பணியாளர்கள் சீர்படுத்தி விடுவர். ரயில் செல்லும் பாதையெங்கும் பயணிகளால் வீசியெறியப்படும் கழிவுகளை சீர்படுத்துவதென்பது சாத்தியமா?
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தெருக்களில் பட்டாசுகளை வெடிக்கச் செய்கின்றனர். அதுபோல் போகிப்பண்டிகையின்போது பழையன கழிதல் என்ற முறையில் பழைய பொருள்களை தீயிட்டு கொளுத்துகின்றனர்.
ஆனால், பட்டாசுகளையோ எரிக்கப்பட்ட பொருள்களால் ஏற்படும் குப்பைகளையோ பொதுமக்கள் அகற்றுவதேயில்லை. அதற்கு துப்புரவுப் பணியாளர்கள்தான் பொறுப்பு என்று விட்டு விடுகின்றனர். பொது மக்களின் இத்தகைய அலட்சியப் போக்கால் துப்புரவுப் பணியாளர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.
ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று சென்னை கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் கூடுகின்றனர். அதற்கு மறுநாள் அகற்றப்படும் குப்பைகள் பல டன் எடை கொண்டதாக கணக்கிடப்படுகிறது. பொதுமக்களால் முறையின்றி வீசியெறியப்படும் இக்குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள், சுற்றுச்சூழல் அமைப்பினர், சமூக அமைப்பினர் அகற்றுவர். இதற்கு சில நாள்கள் பிடிக்கும்.
கடற்கரை மட்டுமின்றி மலைப் பிரதேசங்கள், பூங்காக்கள், பிற கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான சுற்றுலாப் பகுதிகளிலும் பொதுமக்களால் குவிக்கப்படும் குப்பைகள் ஏராளம். இதன் காரணமாக சுற்றுலாப் பகுதிகளும் எழில் இழந்து காணப்படும். சுற்றுலாப் பகுதிகளில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்து அவற்றில் குப்பைகளைப் போட பொதுமக்களை அறிவுறுத்த வேண்டும்.
ரயில், பேருந்துகளில் பயணிப்போர், தாங்கள் பயன்படுத்தியபின் மீதமாகும் கழிவுப் பொருள்களைத் தாங்களே வைத்திருந்து இறங்கியபின் குப்பைத் தொட்டிகளில் போடுவதென்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரயில்களிலும் பேருந்துகளிலும் குப்பைகளைப் போட ஒரு பெட்டி வைக்கப்பட வேண்டும். மேலும், குறிப்பிட்ட சில ரயில், பேருந்து நிலையங்களுக்கு அருகிலேயே திடக்கழிவு மேலாண்மையை ஏற்படுத்தி குப்பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி மறு பயன்பாட்டுக்கு முயற்சிக்கலாம்.
குப்பைத் தொட்டிகளில்தான் குப்பைகளைப் போட வேண்டும் என்ற விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகளையும், ஊழியர்களையும் குறைகூறும் பொதுமக்கள், முதலில் தாங்கள் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.