கட்டுரைகள்

சுற்றுச்சூழலுக்கு எது எதிரி?

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், 2011-12இல் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

என்.எஸ். சுகுமார்

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம், 2011-12இல் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில், இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பேர் சமையலுக்கு விறகையே பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய எரிபொருள்களான விறகு, வறட்டி (சாணத்திலிருந்து தயாரிப்பது) போன்றவற்றைப் பயன்படுத்துவதால் வீடுகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், பொதுமக்களின் உடல் நிலையில், குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் உடல் நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், விறகு போன்றவற்றை எரிபொருளாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து சுற்றுச்சூழலைக் காக்கும் வண்ணம் வளர்ச்சி முறைக்கு மாற வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
அதேசமயம், எரிசக்திப் பயன்பாடு என்பது கிடைக்கும் தன்மை, வாங்கும் சக்தி, பயன்படுத்தும் தன்மை ஆகியவற்றைப் பொருத்தே அமைகிறது. ஊரகப் பகுதிகளில் வசிப்போர் அவரவர் வசதிக்கேற்பவே எரிபொருளைப் பயன்படுத்துகின்றனர். விறகுகளாலும், வறட்டிகளாலும் சுற்றுச்சூழல், உடல்நலம் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், கிராமப் பகுதிகளில் உள்ளவர்கள் சுற்றுச்சூழல், உடல் நலனில் அக்கறையுடனே செயல்படுகின்றனர் எனலாம்.
விறகுகளை எரிபொருளாகப் பயன்படுத்தினாலும், மரங்களிலிருந்து கீழே விழும் காய்ந்த கிளைகள், குச்சிகள், வேளாண் கழிவுகள், மரக் கழிவுகள் போன்றவற்றையே பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
பயனுள்ள செழுமையான மரங்களை அவர்கள் வெட்டுவதில்லை. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் வெளிநாட்டு பாரம்பரியத்தைச் சேர்ந்த கருவேல மரங்கள் போன்றவற்றையே எரிப்பதற்கு வெட்டிச் செல்கின்றனர்.
அதுபோல், மழைக் காலங்களில் சாய்ந்து விழும் மரங்களை எரிபொருளுக்காக வெட்டிச் சென்று சேமித்து வைத்துக் கொள்கின்றனர். தேவைக்கேற்ப விறகுக் கடைகளில் விறகுகளை வாங்கிக் கொள்கின்றனர்.
விறகுகளை எரித்து சமைக்கும்போது கரியமில வாயு வெளியேறினாலும், அவற்றால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகக் கூறப்படுவது தவறு. காரணம் மரங்கள் ஏற்கெனவே உட்கிரகித்த கரியமில வாயுதான் எரிக்கப்படும்போது மீண்டும் வெளியேறுகிறது.
வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படுவதுபோல் புதிதாக கரியமில வாயு வெளியேற்றப்படவில்லை. எனவே, சூழலைப் பொருத்தவரை சமநிலையே ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் மக்கள் அடர்த்தியும், கரியமில வாயு வெளியேற்றமும் குறைவு என்பதால் விறகு, வறட்டியை எரிப்பதால் வெளியாகும் புகை பரவலாகச் சென்று விடுகிறது. எனவே, பாதிப்பும் குறைவே.
பசு மாட்டின் சாணத்தால் தயாரிக்கப்படும் வறட்டியை எரிப்பதால் சூழல் சீர்கேடும், மூச்சுத் திணறலும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், பசுவின் சாணம் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதை நம் முன்னோர்கள் முன்பே அறிந்து வைத்திருந்தனர். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொருமிய வயிற்றை சரி செய்ய சாணத்தை மருந்தாகப் பயன்படுத்தினர். கிருமி நாசினி என்பதால் வாசலில் சாணம் தெளித்து, சாணக் கரைசலில் வீட்டை மெழுகினர். மண் அடுப்புகளிலும் சாணம் பூசப்பட்டது.
பசுவின் சாணத்தை எரித்துக் கிடைக்கும் சாம்பலில் இருந்து விபூதி தயாரிக்கப்படுகிறது. வறட்டியிலிருந்து கிடைக்கும் சாம்பல் உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. பசுவின் சாணத்திலிருந்து பல்பொடி, பாத்திரம் துலக்கும் பொடி உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பல பயனுள்ள பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
பயோமாஸ் மின் உற்பத்தி முறையானது மரபுசாரா மின் உற்பத்தி முறையில் ஒன்றாக உள்ளது. பயோமாஸ் எரிசக்தி முறையானது விறகு எரிக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டதுதான்.
அதாவது, மரங்களிலிருந்து விழும் கிளைகள், விறகுகள், குச்சிகள், வேளாண் மிச்சங்கள், வீணாகும் மரப் பலகைகள் உள்ளிட்டவற்றை எரித்து அவற்றில் இருந்து கிடைக்கும் வெப்ப ஆற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதுபோல், சாண எரிவாயு தொழில்நுட்ப முறையில் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. பயோமாஸ், சாண எரிவாயு முறைகள் மரபுசாரா எரிசக்தி முறைகளாகக் கூறப்பட்டாலும், அவை விறகு, சாணம் போன்ற மரபு வழி எரிபொருளை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய எரிபொருள்களில் பெரிய அளவில் சூழல் சீர்கேடு பாதிப்புகள் இல்லை. ஆனால், கிராமத்தில் வசிப்போருக்கும் எரிவாயு இணைப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அரசுகள் கடந்த காலத்தில் அறிவித்தன.
இதுவரை எரிவாயு பயன்படுத்தாமல் கிராமத்தில் கிடைக்கும் மரபுவழி எரிபொருளைப் பயன்படுத்தி வந்தவர்கள்கூட எரிவாயுவுக்கு மாறுகின்றனர். இதனால், எரிவாயு உருளைக்கு அளிக்கப்படும் மானியம் அதிகரிக்கிறது.
ஒருபுறம் மானியத்தைக் கைவிட வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாகி உள்ள நிலையில், மறுபுறம் இதுபோன்ற திட்டங்களால் மானியச் சுமை அதிகரிக்கவேச் செய்கிறது.
அத்துடன், எரிவாயு உருளை விநியோகிப்போரில் ஒரு சிலர், கிராமத்தினருக்கு விநியோகிக்கப்படும் உருளைகளைப் பெற்று அவற்றைப் பெரிய உணவகங்களுக்கு அதிக விலையில் விற்றுவிடுகின்றனர் என்ற புகாரும் எழுகிறது.
மரபுவழி எரிபொருள்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை. மாறாக, வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகை, குப்பைக் கிடங்கில் குப்பை தீப்பற்றி எரிவது போன்றவற்றால்தான் உடல் நலக்கேடு, சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.
பெட்ரோல், டீசல் என்ஜின் வாகனங்களில் இருந்து கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ûஸடு, ஹைட்ரோ கார்பன், சல்ஃபர் டை ஆக்ûஸடு உள்ளிட்ட நச்சு வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.
அதுபோல், தொழிற்சாலைகளிலிருந்து கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையே உடனடித் தேவையாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT