கட்டுரைகள்

தேவை இயற்கையோடு இணைந்த அறிவியல்

அறிவியல் வளர்ச்சியால் நவீன தொழில்நுட்பங்கள் அதிகரித்தன. இதனால், உலகம் முழுவதும் தகவல் தொடர்பு, போக்குவரத்து

என்.எஸ். சுகுமார்

அறிவியல் வளர்ச்சியால் நவீன தொழில்நுட்பங்கள் அதிகரித்தன. இதனால், உலகம் முழுவதும் தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதி, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளும் அதிவேக வளர்ச்சி கண்டுள்ளன.
 வசதிகள் அதிகரிக்கும் அதேசமயம், சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் நிலம், நீர், காற்று மண்டலம் பாதிக்கப்படுவதுடன், இயற்கை வளங்களும் சுரண்டப்படுகின்றன.
 நிலத்தடி நீர் அதிக அளவு உறிஞ்சப்பட்டு விட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதுடன், பல்வேறு கழிவுகளால் மாசடைந்தும் வருகிறது.
 மக்காத பொருள்கள், ரசாயனக் கழிவுகள், பல்வேறு திடக் கழிவுகளால் நிலம் மாசடைந்து வருகிறது. வாகனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகை உள்ளிட்டவற்றால் காற்று மண்டலம் மாசடைந்து வருகிறது.
 இவ்வாறு அனைத்தும் மாசடைவதால் ஓசோன் படலத்தில் பாதிப்பு, புவி வெப்பமயமாதல், அதன் காரணமாக பனிப் பாறைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்வடைதல், விளைநிலங்கள் பாழடைதல், விவசாயத்துக்கும், குடிக்கவும் உதவாத வகையில் மாசடைந்து வரும் நீர் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 நிலம், நீர், காற்று மாசுபாடு மட்டுமன்றி அறிவியல் ஆராய்ச்சிகளின் விளைவால் கதிர்வீச்சு, ரசாயனக் கழிவுகள் சார்ந்த பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கடல் நீர் மாசடைந்து, கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கவும் நேரிடுகிறது.
 கனிம வளங்கள் கண்டறியப்பட்டு தாதுப் பொருள்கள் வெட்டியெடுக்கப்படும்போது மரங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. குறிப்பாக, வனப் பகுதிகள் அதிக அளவில் அழிக்கப்படுகின்றன. அதனால், மழை வளம் குறைந்து, வெப்ப அளவும் அதிகரிக்கிறது.
 கட்டுமானப் பணிகளுக்காக மலைப் பகுதிகள் சுரண்டப்படுகின்றன. எரிசக்தியின் தேவை அதிகரித்து வருவதால் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. அதேசமயம் எரிசக்தி உற்பத்தியால், குறிப்பாக அனல் மின் உற்பத்தியின்போது ஏராளமான சூழல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
 கரியமில வாயுவை உமிழும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேசமயம், அவற்றை உட்கொண்டு பிராண வாயுவைத் தரும் மரங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அப்போது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்கள், விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், கடற்கரைப் பகுதிகளில் தூய்மைப்படுத்துதல், மரக் கன்றுகள் நடுதல் உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம்.
 ஆனால், அதன்பின் சுற்றுச்சூழல் நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. தொடரப்படுவது மிகவும் குறைவே. உலக சுற்றுச்சூழல் தினமானது அன்று ஒருநாள் மட்டும் நடைபெறும் ஒரு சம்பிரதாய தினமாக ஆகிவிடக் கூடாது.
 சுற்றுச்சூழல் தினத்தைத் தொடர்ந்து, சைக்கிள் பயன்பாட்டை அதிகரிப்பது, மரம் நட்டு பராமரிப்பது, மின் சிக்கனம், பாலிதீன் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட சூழலுக்கு ஆதரவான பணிகளை மேற்கொள்ள அனைவருமே முயற்சிக்க வேண்டும்.
 சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு என்று உறுதியான சட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது பன்னாட்டு அளவில் உள்ள சுற்றுச்சூழல் சட்டங்கள் அனைத்துமே, சூழலை எந்த அளவு மாசுபடுத்தலாம் என்று கூறுகின்றனவே தவிர, மாசடையாமல் இருப்பதற்கான விதிகளை வகுக்கவில்லை.
 சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அறிவியலுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் எதிரானது என குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், தொழில் வளர்ச்சி அதிகரித்த கடந்த இருநூறு ஆண்டுகளில்தான் சுற்றுச்சூழல் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் அதிகரித்த கரியமில வாயுவால்தான் புவி வெப்பமயம் ஆனதுடன், பருவநிலை மாற்றமும் ஏற்பட்டுள்ளது.
 சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து அரசு மீது நாம் குறைகூறுகிறோம். ஆனால், மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வெளியேற்றுவது போன்ற செயல்களில் நாம் ஈடுபடுவது மிகவும் குறைவு. அதுபோல் சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் அரசு, பொதுமக்களுக்கு உரிய வசதிகளையும் செய்ய வேண்டும்.
 உதாரணமாக தூய்மைப் பகுதி, அசுத்தம் செய்யாதீர் என அறிவுறுத்தும் அரசு பொதுமக்களுக்கு ஆங்காங்கே பொதுக் கழிப்பிட வசதியையும் செய்துதர வேண்டும். அப்போதுதான் தூய்மைப் பகுதி தூய்மையாக இருக்கும்.
 பாலிதீன் பைகளுக்குத் தடைவிதித்து அவை கடைகளில் விற்கப்படுகின்றனவா என ஆய்வு செய்யும் அதிகாரிகள், பாலிதீன் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சென்று, உற்பத்தியைத் தடுத்து நிறுத்தினால் பாலிதீன் பைகளால் ஏற்படும் சூழல் சீர்கேட்டை முழுமையாகத் தடுக்கலாம்.
 சுற்றுச்சூழல் மாசு குறித்து நாடுகள் அனைத்தும் அடுத்த நாட்டின் மீது பழிபோடுவதிலேயே முனைப்பாக உள்ளன.
 மனிதனின் பேராசையே இயற்கை வளங்களின் அழிவுக்குக் காரணமாகும். "மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இயற்கை வளங்கள் உள்ளன; பேராசையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அல்ல' என்ற மகாத்மா காந்தியின் கூற்று இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
 நமது முன்னோர்கள் இயற்கையை வழிபட்டனர். மரங்களைத் தெய்வமாகவும், நதிகளையும், பூமியையும் தாயாகவும், வாயுவையும், நெருப்பையும் இறைவனாகவும் கருதியவர்கள் நமது முன்னோர்கள்.
 அதே உள்ளுணர்வுடன் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் அமையுமானால் அது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாகவே அமையும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT