முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

உலகிலேயே மிக நீண்ட காலம் ஒரு நாட்டின் அதிபர் பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோவின் மறைவையொட்டி மார்க்சிய சோசலிசச் சமூக அமைப்பு தொடர்பான விவாதங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:58 PM
பகிர்:

உலகிலேயே மிக நீண்ட காலம் ஒரு நாட்டின் அதிபர் பதவி வகித்த பிடல் காஸ்ட்ரோவின் மறைவையொட்டி மார்க்சிய சோசலிசச் சமூக அமைப்பு தொடர்பான விவாதங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன.
சோசலிசச் சமூகமெனும் பொதுமைச் சமூகமாவது யாது என்பதை மிக எளிமையாகவும், மிகச் சரியாகவும், "தினமணி'யின் முன்னாள் ஆசிரியர் ஏ.என்.சிவராமன் ஒருமுறை குறிப்பிட்டார்:
"கணவன், மனைவி, வயதான பெற்றோர், பிள்ளைகள் என்றமையும் குடும்பத்தில், கூடுதலாக உழைப்போர், குறைவாக உழைப்போர், உழைக்கமாட்டாதோர் என வெவ்வேறு நிலையிலிருந்தாலும், குடும்பத்தின் மொத்த வருமானம் அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்யப்பயன்படுகிறது. இதே முறையில் ஒரு மக்கட் கூட்டம் முழுமையும் ஒரே குடும்பமாக இயங்குதலே சோசலிசச் சமூகமெனப்படுவது' எனக் குறிப்பிட்டார்.
இதையே இன்னும் சுருக்கமாகச் "சக்திக்கேற்ற உழைப்பு தேவைக் கேற்ற வசதி' எனக் குறிப்பிடுகின்றனர். அப்படியொரு சமூக அமைப்பு சாத்தியமாகுமா எனும்போது, தனிமனிதக் குடும்ப அளவில் சாத்தியமாவது, சமூக அளவிலும் சாத்தியமாகும் எனல் விடையாகிறது. தனிமனிதக் குடும்பம் நேரடியான இரத்த உறவுடையது என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
பொதுமைச் சமூகமென்பது மனித வாழ்வை தொடக்க காலத்திய குழு வாழ்வுக்கு மீட்டுருவாக்கம் செய்தலன்றி வேறல்ல. இதிலே சொத்துரிமை மட்டும் சிக்கலல்ல. பாலியல் உறவும் முதன்மைச் சிக்கலாகிறது. தொடக்க காலத்திய குழுவாழ்க்கையில், பிற விலங்குகள் போலப் பாலியல் உணர்வெழும் பொழுதில் எதிர்ப்படும் எதிர்ப்பாலுடன் உறவாடிப் பிரிபவனாகத்தான் இருந்திருக்க முடியும்.
அதனின்றும் மாறித் தனக்கென ஒரு பெண்ணை இணைத்துக் கொண்டு தனது உழைப்பாலாகும் உற்பத்தியில் தனது பங்கைத் தங்களுக்கும், தங்களின் பிள்ளைகளுக்குமாகச் சேமிக்கத் தொடங்கினானாதல் வேண்டும். மகப் பேறாகும் காலகட்டத்தில் உழைக்கமாட்டாத பெண் அதற்குடன்பட வேண்டியவளானாள். இவ்விடத்தே ஒரு விவாதத்திற்கு இடமிருக்கிறது.
பாலியல் வரன்முறை விழைந்த மனிதன் அதன் காரணமாகத் தனது துணை, தனது குடும்பம் எனக் கொண்டு அதன் விளைவாகத் தனக்கெனச் சொத்துரிமை வேண்டினானா, உற்பத்தியில் தனது பங்கு தனக்காகும் சொத்துரிமை விரும்பிய மனிதன் அதன் பாதுகாப்புக்காகப் பாலியல் வரன்முறையாகும் குடும்பம் என்பதை ஏற்படுத்திக் கொண்டானா என்னும் விவாதம் கோழிமுந்தியா - முட்டை முந்தியா என்றாற்போல்வதாகிறது.
அது எப்படியாயினும் பொதுமைச் சமூகத்தில் சொத்து என்பது மட்டும் பொதுமையாகுமா, ஆண் - பெண் உறவும் பொதுமையாகுமா? கணவன் - மனைவி, தாய் - மகன், தந்தை - மகள், அண்ணன் - தங்கை எனும் வரன்முறையில்லாத வாழ்வு விலங்கு வாழ்வல்லாத மனித வாழ்வாகுமா? அறுசுவையொடு உண்ணுதலும், அழகாகவும், அலங்கோலமாகவும் ஆடையணிதலும், "செல்பி' எடுத்தலும் "டெபிட் கார்டுட பயன்படுத்தலுமே மனித வாழ்வு என்பதற்குப் போதுமா?
பொதுமைச் சமூகத்தில் பாலியல் வரன்முறையும், அதன் விளைவாகும் குடும்பம் என்பதும் இருக்கும். அப்போதும், "சக்திக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற வசதி' என்பது நடைமுறைச் சாத்தியப்பாடுதான் எனலாம். அப்படியே வைத்துக் கொள்வோம். அவ்வாறாகும் பொதுமைச் சமூகத்தைக் கட்டமைப்பது எப்படி?
அதாவது, இன்றைய மனிதகுலத்தை ஆதிகாலத்திய குழு வாழ்வினதாக மீட்டுருவாக்கம் செய்தல் எப்படி என்பதற்கிடையில், நாம் விரும்பும் பொதுமைச் சமூகத்தைக் கட்டமைப்பதற்குக் காரல் மார்க்சு வகுத்தளித்த செயல் திட்டங்கள் எந்தளவுக்குப் பயன்தரத்தக்கன என்பது அடுத்த கட்ட விவாதமாகிறது.
மார்க்சிய செயல்திட்டம் ஏட்டளவில் இருப்பதல்ல, நடைமுறையனுபவமாகிவிட்டது. அந்த அனுபவ அடிப்படையில்தான் அதுபற்றி விவாதிக்க முடியும்.
1991-இல், சோவியத் ஒன்றியமும், மார்க்சிய சோசலிசமும் கைவிடப்படும் வரையும் நம் தோழர்கள் "சோசலிச ரசியாவிலும், சீனாவிலும் மார்க்சிய விஞ்ஞானபூர்வ சோசலிசப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார ஆட்சியில் வறுமையில்லை, வன்முறையில்லை, வேலையில்லாத் திண்டாட்டமில்லை, விலைவாசிப் பிரச்சனையில்லை, லஞ்சமில்லை, ஊழலில்லை, மொழிப் பிரச்சனையில்லை, இனப் பிரச்னையில்லை, விபச்சாரமில்லை, எந்த அபச்சாரமுமில்லை' என முழங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவ்வளவும் உண்மையென்றால், மிகைல் கோர்ப்பசேவ், உலகமயம் தாராளமயம் என்னும் பெயரில் சோசலிசத்தைக் கைவிடத் தயாரான போது, அங்கேரியிலும், போலந்திலும் சோசலிசத்திற்கு எதிர்ப்புரட்சி நடந்தது போல், ரசியாவில் சோசலிச எதிர்ப்புரட்சியேதும் நடைபெறவில்லையே, என்ன காரணம்?
மார்க்சிய சோசலிச ஆட்சியின் வீழ்ச்சிக்கும், சரிவுக்குமான காரணங்கள் இரண்டு. முதலாவது, மக்களின் தேவை நிறைவாகவில்லை. இரண்டாவது மக்கள் மன நிறைவாகவில்லை. தேவை நிறைவேறாகாமைக்கு மார்க்சிய நடைமுறைகள் காரணமாகலாம்.
மனம் நிறைவேறாகாமைக்குக்குரிய காரணம் வேறு. மனித நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொருளியலே காரணமாகிறதெனவும், பொருளியலில் தனியுடைமையை ஒழித்து அனைத்தையும் பொதுவுடைமையாக்கிவிட்டால் மனித நடவடிக்கைகள் அனைத்தும் செம்மைப்பட்டுவிடும் என்பதான மார்க்சிய அடிப்படை வாதம் முதற்கோணலாகி முற்றுங்கோணலாகிவிட்டது.
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அதனாலாகும் நுகர்பொருள் கலாசாரத்தையும் காரல் மார்க்சும், காந்தியாரும் கற்பனை செய்திருக்கமாட்டார்கள். அணுப்பிளவு உள்ளிட்டு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும், நுகர்பொருள் கலாசாரமும் ஒட்டுமொத்த உலகையும் அழிவுக்கு இட்டுச் செல்கின்றன என்பதுதான் உண்மை.
அதேசமயம் அறிவியல் தொழில்நுட்பங்களைத் தடுக்க மாட்டாது, நுகர்பொருள் கலாசார ஒழிப்பு முயற்சியின் தோல்வி சோசலிச நாடுகளில் பட்டறிவாகி விட்டது. இன்றைய நிலையில், ஓர் ஊர், ஒரு நாடு, ஒரு மக்கட் கூட்டம் தனக்குத்தானே சுயதேவை நிறைவு செய்து கொள்ள முடியாது.
தனக்குத் தேவையான வளங்கள் அவ்வளவுமில்லாத கியூபா சோசலிச நாடாக நிலைத்தைமைக்கு சோசலிச ரசியா தனது சக்திக்கு மீறி வாரி வழங்கிய வள்ளன்மையே காரணமென்பது மறுக்க மாட்டாத உண்மையல்லவா?
அது மட்டுமா? சோவியத் ஒன்றியம் தனக்கான உணவுப் பொருளுற்பத்தியில் தன்னிறைவு பெறமாட்டாது அதன் இறக்குமதிக்காக முதலாளித்துவ நாடுகளிடம் கோடி கோடியாகத் தங்கத்தை அடமானம் வைத்த கடன் சுமை தாளமாட்டாததாகியதும் சோவியத் வீழ்ச்சிக்கொரு காரணமாயிற்றல்லவா?
அத்தகைய வீழ்ச்சியைத் தவிர்க்கும் முறையில்தான் சீனாவும், கியூபாவும் முதலாளித்துவ உள்நுழைவுக்கு இடமளிக்கின்றன. ஆக, நாம் விரும்புகிறவாறு, உலக மாந்தர் அனைவரும் அல்லது கோடிக்கணக்கான ஒருமக்கட் கூட்டம் ஒரே குழுவாக ஒரே குடும்பமாக இணைந்து வாழ்தலுக்கு, காரல் மார்க்சு வகுத்தளித்த பாட்டாளி வர்க்கப்புரட்சியும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் பயன்படுமா என்பதே உடனடிக்கேள்வி.
இவ்விடத்தே ஒரு கேள்வி. புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் செய்தது பாட்டாளி வர்க்கமாகலாம். தனியுடைமையை ஒழித்து, யாரும் முதலாளியல்ல என்றானபின்னர் பாட்டாளிவர்க்கம் எங்கிருந்து வருகிறது? இனி உலகின் எந்தப் பகுதியிலும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லையாதலால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்கும் வாய்ப்பில்லை.
இவ்விடத்தே இன்னொன்று. மற்றவர்க்காக வீடு கட்டுகிற பணி செய்யும் கொத்தனார் தமது உழைப்பை நல்கி, அதற்கென உரியவரிடம் ஊதியம் பெறுகிறார். அவரே தமக்கென வீடு கட்டும் போது மற்றவர்களின் உழைப்பை பெற்றுக் கொண்டு ஊதியம் வழங்குகிறார்.
ஆக, கொத்தனார் சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கமா? சுரண்டுகிற முதலாளி வர்க்கமா? கணினிப் பொறியாளருட்படக் குறிப்பிட்ட பணி முடித்து அதற்கென ஊதியம் பெறும் அனைவருக்கும் இது பொருந்தும்.
சரி, என்னதான் வழி? மாறும் என்பது தவிரப் பிற எல்லாமும் மாறும் என்பதன்படி மார்க்சியவாதிகள் மாற வேண்டும். முதலாவது, எல்லார்க்கும் எல்லாமாகும் பொதுமைச் சமூகம் என்பதுதான் காரல் மார்க்சின் குறிக்கோள். அதற்கென அவர் வகுத்தளித்த வழிமுறைகள் அவருடைய குறிக்கோள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, இன்றைய மனிதகுலத்தைப் படிப்படியாகப் பொதுமைச் சமூகமாக உருமாற்றம் செய்தற்கு, இன்றைய மற்றும் எதிர்வரும் உலகமயச் சூழலுக்கேற்பவும், அந்தந்த நாட்டுச் சமூகச் சிக்கல்களை உள்வாங்கிக் கொள்ளும் முறையிலும் தெளிவான திடமான செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டு அதனடிப்படையில், குறுகிய அரசியல் ஆதாயங்களை ஒதுக்கி, மக்களை அணி திரட்டும் முயற்சியைத் தொடங்க வேண்டும்.
இது மார்க்சியத்திற்கு மறுப்பல்ல; மார்க்சிய வாதிகளுக்கு தோழமையோடு ஒரு வேண்டுகோள்!

கட்டுரையாளர்:
தலைமையாசிரியர் (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.