பிடி ஆணையின் பிடியில்...
'போலீஸ் அடி படணும், ஜெயிலுக்கு போகணும் என்று எழுதி வைத்திருக்கிறது, என்ன செய்ய? எல்லாம் விதி' என்று போலீஸ் வலையில் சிக்கியவர்கள் நொந்து கொள்வதைத் தவிர வேறு சட்ட தீர்வு இல்லையோ என்று எண்ணும்படி சில நிகழ்வுகள் நடந்து விடுகின்றன.
காவல்துறை நடவடிக்கைகளில் முக்கால்வாசி எதிர்மறையானவை. குற்றங்கள் நடவாமல் தடுக்க, எப்போதும் கெட்ட நடத்தைக்காரர்களை நோட்டமிட வேண்டும். குற்றம் நிகழ்ந்தால் வழக்குப் பதிவு செய்து , குற்றவாளியை கைது செய்வது, நீதிமன்றத்தில் வெற்றிகரமாக வழக்கை முடிக்கும் வரை ஓயாத உழைப்பு, இம்மாதிரி ஒவ்வொரு வழக்கிலும் பாடுபட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் தனிமனிதனாகப் போராடும் காவலன் பணிகளுக்கு நன்றி மலர்கள் சிறிது; குறைவில்லாமல் செங்கல் மட்டைகள்.
ஒரு குற்றம் நிகழ்ந்தால், உடனே குற்றவாளியைக் கண்டுபிடித்தாகி விட்டதா? போலீஸ் கைது செய்தார்களா? என்ற எதிர்பார்ப்புதான் மேலோங்கும். கைதுதான் புலனாய்வின் பிரதான நடவடிக்கை என்றாகி விட்டது. கைதுக்குப் பிறகு வழக்கு மறக்கப்படுகிறது; பல நேரம் மறைக்கவும் படுகிறது.
கைது இரண்டு வகை பட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்னையைத் தவிர்ப்பதற்கு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவரையும் ஈடுபடக்கூடியவரையும் கைது செய்வது ஒரு வகை. பதிவு செய்த குற்றங்களில் புலன் விசாரணையின்போது ஆதார சான்றுகளை, குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து சேகரிக்க கைது செய்வது இரண்டாம் வகை.
கலவரம் நிகழ்ந்த பகுதியில், மேலும் அசம்பாவிதம் நிகழாமல் பாதுகாக்க தடுப்பு கைது நடவடிக்கை தவிர்க்க முடியாதது. அதிலும் கவனமாக, பாகுபாடின்றி நேர்மையான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும்.
சில குற்றங்கள் சமுதாயத்தின் பார்வையை ஈர்க்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர் முக்கியமான, சர்ச்சைக்குரிய நபராக இருந்து விட்டால் காவல்துறைக்கு அழுத்தம் ஏற்படுகிறது. சமீபத்தில் "ரிபப்ளிக்' தொலைக்காட்சி அர்னாப் கோஸ்வாமி மீதான குற்ற நடவடிக்கை இத்தகைய விபரீத விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலையில் பல மர்மங்கள் இருப்பதாகவும், மும்பை காவல்துறையும், மகாராஷ்டிர மாநில அரசும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அர்னாப் கடுமையான குற்றசாட்டுகளை தனது ஊடகம் மூலம் தொடர்ந்து சொல்லி வந்தார். மேலும், போதைப் பொருள் வலையில் பாலிவுட் சிக்கி இருப்பதாகவும் இதில் அரசியல் பலம் படைத்தவர்களுக்கு தொடர்பு உள்ளதால் பாரபட்சமின்றி விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
நடிகர் சுஷாந்த் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். சுஷாந்தின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் சுஷாந்த் இறப்பில் சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து பிகார் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது சர்ச்சையைப் பெரிதாக்கியுள்ளது.
இந்த நிலையில்தான் மும்பை போலீஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு அர்னாப் கோஸ்வாமி மீது பதிவான ஒரு குற்ற வழக்கை தூசு தட்டி எடுத்து, எதிர்க்கணையை அவர் மீது தொடுத்திருக்கிறார்கள். தனக்கு பலர் பணம் தரவேண்டும் என்று பட்டியலிட்டு, அதில் அர்னாப் பெயரையும் குறிப்பிட்டு, அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அன்வய் நாயக் என்பவர் குறிப்பிட்டிருந்ததால் தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் மீது பழி.
வழக்கை எடுத்ததற்குக் காரணம் கைது செய்வதற்காக; அதை உடனே செய்தார்கள். தீபாவளிக்கு முன்பு கைது, ஜாமீன் மனுவை விசாரிப்பதில் தாமதம், முடிவில் உச்சநீதிமன்றம் சென்றுதான் ஜாமீன் பெற முடிந்தது.
இம்மாதிரி ஒவ்வொரு வழக்கிலும் உச்சநீதிமன்றம் சென்றுதான் ஜாமீன் பெற வேண்டும் என்றால் எவ்வளவு நேர விரயம்? கீழமை நீதிமன்றங்களில் முடிய வேண்டியது ஏன் உச்சநீதிமன்றம் வரவேண்டும் என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது? மும்பையின் முன்னாள் கமிஷனர் ரிபேரோ, அர்னாப் கைது தேவையற்றது என்று கூறியிருக்கிறார். மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, "தற்கொலைக்குத் தூண்டியதாக கைது என்று தொடங்கினால் அதற்கு முடிவே இல்லை, அரசு அதிகாரி ஒருவர், அரசிடமிருந்து தனக்கு சேர வேண்டிய பணம் வருவதில் தாமதம் என்று தற்கொலை செய்து கொண்டால் சம்பந்தப்பட்ட அமைச்சரை கைது செய்ய முடியுமா' என்று வினா எழுப்பியிருக்கிறார். மும்பை போலீஸ் கைது நடவடிக்கை, சிலர் கொடுத்த அழுத்தத்தால் என்பது தெளிவு.
"கைதான ஒருவரின் நீதிமன்றக் காவலுக்கு காவல்துறை மனு அளித்தால், விசாரணை நீதிமன்றம் கைதின் தன்மையை ஆராய்ந்து, மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எல்லா நிகழ்வுகளிலும் ரிமாண்ட் செய்யக்கூடாது' என்று தமிழக உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ், அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்திரிகையாளரின் ஜாமீன் மேல்முறையீட்டில் கைது நடவடிக்கை எவ்வாறு சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 41-ஆவது பிரிவின்படி, காவல்துறையினருக்கு, குற்றங்களைத் தவிர்க்க, புலனாய்வில் தேவைக்கேற்ப சம்பந்தப்பட்டவரை கைது செய்ய அதிகாரம் உண்டு. ஆனால் இந்த அதிகாரம் பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. மேலும், அதே சட்டத்தின் 57-ஆவது பிரிவின்படி, கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்தில் சரக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட வேண்டும். மேலும், குற்றம் சாட்டப்பட்டவரை வைத்து புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனில், 167-ஆவது பிரிவின்படி 15 நாட்கள் வரை காவல் காப்பு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம்.
ஒருவரை கைது செய்தவுடன் காவல்துறையினரே ஜாமீனில் விடுவிக்க அதிகாரம் உண்டு. ஆனால் அவ்வளவு எளிதாக காவல் அதிகாரிகள் விடுவதில்லை. ஏனெனில், காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றசாட்டைத் தவிர்ப்பதற்காக.
தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்றவுடன், ஸ்ட்ரேசி என்ற நேர்மையான ஆங்கிலோ இந்திய அதிகாரியை முதல் காவல்துறை டிஜிபியாக நியமித்து, 1970-லிருந்து ஆட்சியாளர்களின் கைப்பாவையாக நிலைகெட்டு இருந்த காவல்துறையை நேர்வழியில் மாற்றினார். ஸ்ட்ரேசி, காவல் நிலைய அதிகாரிகளுக்கு இட்ட முக்கிய கட்டளை, "குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்தால் அவரை உடனே ஜாமீனில் விட வேண்டும்; தேவையில்லாமல் காவல் நிலையத்தில் வைக்கக் கூடாது' என்பதுதான். இந்த நடவடிக்கை குற்றவியல் ஆளுமையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.
காவல்துறையினருக்கு கைது அதிகாரம் தேவையா? அதை ரத்து செய்து விடலாமா? இந்த விவாதத்தை அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, மாநில அரசுகளின் முன் வைத்து ஆராய்ந்தது. சட்டம்-ஒழுங்கு நிகழ்வுகளிலும் கலவரங்களை சமன் செய்யவும் கைது நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்பது பெருவாரியான கருத்து. வழக்குரைஞர்கள் கூட்டமைப்பும் (பார் கவுன்சில்) போலீஸுக்கு கைது அதிகாரம் தேவை என்று நடுநிலையாகக் கருத்து தெரிவித்தது .
1977 தர்ம வீரா போலீஸ் கமிஷனும் காவல்துறை கைது நடவடிக்கையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றி விரிவாக பரிந்துரைத்துள்ளது. இவை இந்திய அரசியல் சாசனம் ஷரத்து 21, 22 ல் உள்ள விதிகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது.
ஒருவரை கைது செய்யும்போது, கைதுக்கான முகாந்திரம், எந்த காவல் நிலையம், என்ன குற்றம் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். நண்பருக்கோ உறவினருக்கோ தகவல் கொடுப்பது, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தல், வழக்குரைஞர் உதவி பெறுதல், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கைதானவர் குறித்த தகவல், எல்லோரும் அணுகும் வகையில் வெளிப்படையாக வைத்தல் போன்ற பதினொரு கட்டளைகளை உச்சநீதிமன்றம், டி.கே. பாசு பொதுநல வழக்கின் தீர்ப்பில் பட்டியலிட்டு, இவற்றைக் கட்டாயம் காவல்துறை கடைப்பிடிக்க வேண்டும் என்று பணித்துள்ளது.
கண்ணியமான அரசியல்வாதிகள் மக்கள் பிரச்னைகளை முன் வைத்துப் போராடுகையில் சிறை செல்வதைப் பெருமையாக கொள்வார்கள். ஆனால், சில அரைவேக்காடுகள் வேண்டுமென்றே வம்பு செய்து போலீஸ் வலையில் கைதாகி, போலீஸ் அராஜகம் என்ற சிறுமை அரசியல் ஆதாயத்திற்கு அலைவார்கள். கைதான பிறகு, காவல்துறையை ஏசுவார்கள்; பழிக்குப் பழி வாங்குவோம் என்று சூளுரைப்பார்கள். இவர்களால் காவல்துறைக்கு பெரும் தலைவலி.
தேவையற்ற கைதுகளைத் தவிர்ப்பதற்கு 2009-ஆம் வருடம் குற்றவியல் சட்டம் பிரிவு 41-இல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஏழு வருடத்திற்குக் குறைவான தண்டனையுள்ள குற்றங்களில் சில முக்கிய நிலைகள் தவிர்த்து மற்றவற்றில், கைது செய்யாமல் சம்பந்தப்பட்டவர்க்கு 41 ஏ உட்பிரிவுபடி ஆஜராக சம்மன்அனுப்பலாம். அவர் ஒத்துழைக்காவிடில் தகுந்த ஆதாரங்களோடு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கலாம். ஆயினும், கைது நடவடிக்கை குறையவில்லை. இந்த சட்டப்படி நடந்திருந்தால் சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை நிகழ்ந்திருக்காது.
வழக்கமான கைதுகள் தவிர்க்கப்பட வேண்டும். குற்றவியல் சட்டம் பிரிவு 41-இன் திருத்தத்தை காவல்துறை பின்பற்ற வேண்டும். அதற்கு காவல்துறை தலைமை இயக்குனர் துறை சார்ந்த ஆணை வழங்க வேண்டும். நீதியரசர் வெங்கடேஷ், 41ஏ பிரிவு நோட்டீஸ் தில்லி உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் முறைப்படுத்தியவாறு அமையவேண்டும் என்று கூறியதோடு, அதன் நகல் ஒன்றை பார்வையிட்டு திருத்தங்கள் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அது மட்டுமல்ல, நீதிமன்றங்கள் காவலில் வைக்க பெறப்படும் மனுக்களை ஆராய்ந்து அவசியத் தேவை இருந்தால் ஒழிய நீதிமன்றக் காவல் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
கைது செய்ய அதிகாரம் என்பது வேறு; அதைப் பயன்படுத்துவதற்கு ஆதாரம் என்பது வேறு. அதிகாரம் இருப்பதாலேயே எதையும் சிந்திக்காமல் கைது செய்ய சட்டத்தில் இடமில்லை.
கைது செய்யும் அதிகாரம் சக்தி வாய்ந்தது. தனிமனித சுதந்திரத்தைப் பறிக்க வல்லது. ஆனால், அதுவே பழிவாங்கும், துன்புறுத்தும் ஆயுதமாக தரம் தாழ்ந்துவிடக் கூடாது.
கட்டுரையாளர்:
சட்டப்பேரவை உறுப்பினர்.