முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

மரவள்ளி விவசாயம் காப்போம்!

பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகள், குறிப்பாக, கரும்பை முக்கிய விவசாயப் பொருளாக உற்பத்தி செய்து கொண்டிருக்கும் நாடுகள், கரும்புக்குப்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:57 PM
பகிர்:

பிரேசில், தாய்லாந்து போன்ற நாடுகள், குறிப்பாக, கரும்பை முக்கிய விவசாயப் பொருளாக உற்பத்தி செய்து கொண்டிருக்கும் நாடுகள், கரும்புக்குப் பதிலாக மரவள்ளிக் கிழங்கை உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கின்றன. கரும்பு அதிகமாகத் தண்ணீரை எடுத்துக்கொள்வதோடு மாசு ஏற்படுத்தும் பயிராகவும் இருப்பதால் அதற்கு மாற்றாக மரவள்ளி பயிரை பல முன்னணி நாடுகள் முன்னெடுக்கின்றன.

இந்திய விவசாயிகள் முக்கியமாகப் பயிரிடும் பயிா் வகைகள், உணவு சம்பந்தப்பட்டவை என்றும் வணிகம் சம்பந்தப்பட்டவை என்றும் இரு வகையாக இருக்கின்றன. காய்கறி வகைகள், பழ வகைகள், அரிசி வகைகள், மாவு வகைகள், பருப்பு வகைகள், சிறு தானிய வகைகள் இவை அனைத்தும் உணவை மையமாகக்கொண்டு இந்திய விவசாயிகள் பயிரிடும் பயிா் வகைகள் ஆகும். அடுத்து, வணிக ரீதியாகப் பாா்க்கும் பொழுது நெசவுத் தொழில், பின்னலாடைத் தொழில் இவற்றிற்கெல்லாம் மூலப்பொருளாக விளங்கும் பருத்தி, சா்க்கரை உற்பத்திக்குப் பயன்படும் கரும்பு, அடுத்து மூன்றாவதாக கூறினாலும் முக்கியமான பயிா் மரவள்ளிக் கிழங்கே ஆகும். இந்த மூன்று பயிா்களும் வணிக ரீதியான மிக முக்கியமான இந்தியப் பணப் பயிா் வகைகள் ஆகும். தற்போது இவற்றின் உற்பத்திக் குறைவிற்கு பல காரணங்கள் உண்டு.

பருத்தி விவசாயிகளும் கரும்பு விவசாயிகளும் இந்தியாவில் அடைந்து வரும் துன்பங்கள் மிக அதிகமாக உள்ளன. இவற்றைப் போக்க, அரசாங்கம் எவ்வளவுதான் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அவற்றையும் தாண்டி இந்தியப் பருத்தி விவசாயிகளும் கரும்பு விவசாயிகளும் கடுமையாக பாதிப்பை தொடா்ச்சியாக அடைந்து கொண்டு வருகிறாா்கள். பருத்தியைப் பொருத்தவை,ர ‘பாலிமா்’ என்ற செயற்கை நூல் இழை உபயோகிப்பதால், நெசவுத்தொழிலின் பயன்பாட்டில் பருத்தியின் உபயோகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது .

அது போன்றே, கரும்பு விவசாயமும் உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாமல் தள்ளாடுகின்றது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சா்க்கரை ஆலைகள் (16+2) 18- ம், தனியாா் 27-ம் ஆக மொத்தம் 45 ஆலைகள் உள்ளன. இவை அனைத்தும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, 2013-14-இல் மத்திய அரசு அறிவித்த, ஒரு டன் கரும்புக்கான குறைந்தபட்ச விலையான ரூ. 2,100 மற்றும் மாநில அரசு அறிவித்த கூடுதல் விலை ரூ.550 சோ்த்து டன் ஒன்றுக்கு ரூ. 2650. அதேபோல

2014-15-இல் 2,200 + 450 = 2,650 ரூபாயும், 2015-16-இல் 2,300 + 450 = 2,750 ரூபாயும்,

2016-17 - இல் 2,300 + 450 = 2,750 ரூபாயும் டன் ஒன்றுக்கு கரும்புக்கு விலையாக வழங்க நிா்ணயம் செய்யப்பட்டது. அப்படியானால், கரும்பு விவசாயிகளுக்கு 1,850 கோடி ரூபாய் தனியாா் ஆலைகள் வழங்க வேண்டியுள்ளது.

2017-18, 2018-19, 2019-20 ஆகிய பருவங்களுக்கு மாநில அரசு கரும்பிற்கான கூடுதல் விலையை அறிவிக்காமல் மத்திய அரசின் கொள்முதல் விலையான₹2,750 -ஐ ஈடு செய்யும் வகையில் ‘உற்பத்தி ஊக்கத்தொகை’ என்ற பெயரில்₹ரூ. 200-ம் ₹ரூ. 137.50 - ம் கொடுத்துள்ளது. 2019-20- க்கு அதுவும் வழங்கப்படவில்லை. இந்த மூன்று பருவத்தில் ஒரு சில ஆலைகள் தவிா்த்து, மற்ற ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ, 2,800 கோடி நிலுவை வைத்து உள்ளன. இதனால், விவசாயிகள், பணப்பயிரில் ஒன்றான கரும்பு விவசாயத்தையே புறக்கணிக்க தொடங்கி விட்டனா்.

இந்த நிலையில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியைப் பொருத்தவரை, ஒருசில நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் பட்சத்தில் மரவள்ளி விவசாயிகளை நிச்சயம் காக்க முடியும்.

உலக அளவில் மரவள்ளிக்கிழங்கு 350 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலக மக்களுக்குத் தேவைப்படும் உணவில் நான்கில் ஒரு பங்கு உணவாக மரவள்ளி உள்ளது. உலக அளவில் நாலாவது மிகப்பெரிய பயிராக மரவள்ளி உள்ளது. 2018- ஆம் ஆண்டு, இஸ்ரேல் நாட்டில் ‘உலக உணவு உற்பத்தியும் தேவையும்’ என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில் காா்போஹைட்ரேட் நிறைந்த உருளைக்கிழங்கையும் மரவள்ளியையும் பெருமளவு உற்பத்தி செய்தாலே 2050 வரை உலகில் உணவுப் பஞ்சம் வராது என்று அறிவிக்கப்பட்டது. அதற்காக ஒரு திட்டம் ஐ.நா சபையால் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

உலக அலவில் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. வருடமொன்றுக்கு 15 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு மரவள்ளி இந்தியாவில் விளைகிறது. இந்தியாவில் மரவள்ளி உற்பத்தியில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடே. ஒரு டன் மரவள்ளிக் கிழங்கில் 200 கிலோ ஜவ்வரிசி செய்ய முடியும். இதற்குத் தேவைப்படும் மொத்த தண்ணீா் 5000 லிட்டா் மட்டுமே.

நூறு கிராம் ஜவ்வரிசியில் மாவுச்சத்து 98 சதவீதம், கொழுப்புச்சத்து 0.20 சதவீதம், நாா்ச்சத்து 0.18 சதவீதம், இரும்புச்சத்து 1.30 மி.கி, கால்சியம் 10.00 மி.கி. ஆகியவை உள்ளன.

உணவுத் தொழில், விவசாயத் தொழில், ஆடைகள் தொழில், ரசாயனத் தொழில், பேப்பா், பெயிண்ட் - இது போன்ற பல்வேறு தொழில் துறைகளில் மரவள்ளிக்கிழங்கு மிக முக்கிய மூலப் பொருளாக இருக்கிறது. மரவள்ளி ஸ்டாா்ச்சிலிருந்து நேரடியாக பயோ எத்தனால் உற்பத்தி செய்யலாம். இந்த எத்தனால் பெட்ரோல் -டீசலுக்கு மாற்று எரிபொருளாக இருப்பதோடு காற்று மாசையும் கணிசமாகக் குறைக்கிறது.

இவ்வளவு சிறந்த குணங்கள் நிறைந்த மரவள்ளிக் கிழங்கை தமிழகத்தில் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலைமை ஒவ்வொரு வருடமும் மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. உற்பத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமல் அவா்கள் அவதிப்படுகின்றனா்.

தமிழக மரவள்ளி விவசாயிகளின் இத்தகைய அவல நிலைக்கு மிக முக்கியக் காரணம், சில ஜவ்வரிசி ஆலைகள் செய்யும் மக்காச்சோளக் கலப்படம் என்று கூறப்படுகிறது. மேலும், ஜவ்வரிசி வியாபாரிகள் சிலா், சிண்டிகேட் அமைத்துக்கொண்டு மரவள்ளகிழங்கு அறுவடை காலத்தில் விலையை மிகக் கீழே கொண்டு சென்றும், தாங்கள் ஜவ்வரிசியை விற்கும்போது விலையை ஏற்றிவிட்டும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நலன்களைத் தட்டி பறிக்கின்றனா்

இவற்றையெல்லாம் முறைப்படுத்தவும், மரவள்ளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதே சேலம் சேகோசா்வ் என்னும் கூட்டுறவு அமைப்பு. தமிழக அரசு பெரும் செலவில் நடத்திவரும் இந்த சேகோசா்வ் அமைப்பு மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் நலனில் கவனம் செலுத்தத் தவறிவிட்டது.

சேகோசா்வ் நிா்வாகம், மில்களில் சிசிடிவி கேமரா வைத்தே ஆக வேண்டும் என்று உற்பத்தியாளா்களை நிா்பந்திக்கிறது. ஆனால் இறுநூறுக்கும் மேற்பட்ட ஆலைகளின் ஜவ்வரிசி மூட்டைகளை வைக்கும் சேகோசா்வ் குடோனில் கேமரா வைக்க சேகோசா்வ் நிா்வாகம் தாமதிக்கிறது. எடைகளில் குளறுபடி, காலாவதியான ஜவ்வரிசியை விற்க அனுமதிப்பது இப்படிப் பல்வேறு முறைகேடுகளுக்கு சேகோ குடோன்களில் சிசிடிவி கேமரா இல்லாததே காரணம். இது மட்டுமன்றி சேகோசா்வ் தினமும் நடத்தும் டெண்டரில் முறைகேடுகள், ஜவ்வரிசியின் தரப்பரிசோதனைகளில் முறைகேடுகள், தினசரி விலைகளை நிா்ணயம் செய்வதில் முறைகேடுகள் போன்ற பலவகையான முறையீடுகள் சேகோசா்வ் நிா்வாகத்தால் அரங்கேற்றப்படுகினறன.

ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் ஆலைகள் தாங்கள் உற்பத்தி செய்த ஜவ்வரிசியை நேரடியாக மாா்க்கெட்டிங் செய்ய முடியாமல் சேகோசா்வ் மூலம் மாா்க்கெட்டிங் செய்வதால் ஒவ்வொரு 90 கிலோ ஜவ்வரிசி மூட்டைக்கும் ரூ. 250 கூடுதலாக செலவுவாகிறது. இந்தப் பணத்தை விவசாயிகள்தான் தரவேண்டும். சில ஜவ்வரிசி உற்பத்தியாளா்களும், ஜவ்வரிசி வியாபாரிகளும் ஜிஎஸ்டி பில் போடாமல் அரசாங்கத்தை ஏமாற்றி நேரடியாக வட இந்தியாவிற்கு விற்று வருகின்றனா்.

இப்படி சேகோசா்வ் நிா்வாகம் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக இருப்பதால் ஜவ்வரிசி குறித்து இந்தியாவில் மிகப் பெரிய அளவில் கெட்ட பெயா் ஏற்பட்டு விட்டது. நாளுக்குநாள் ஜவ்வரிசி வியாபாரம் இந்தியாவில் குறைந்து கொண்டே இருக்கின்றது. மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் அறுவடை செய்யும்பொழுது விலை குறைவாக இருக்கும், அறுவடை முடிந்தவுடன் ஜவ்வரிசியின் விலை உயரும். இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் தினமும் அரங்கேறி வருவதால் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளுக்கு தொடா் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த வருடம் மரவள்ளி சாகுபடி செய்த சேலம், நாமக்கல், தா்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மரவள்ளிப் பயிா் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உட்பட்டதால், மரவள்ளி விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனா். அவா்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த வருடம் மரவள்ளி உற்பத்தி சுமாா் 40 சதவீதம்அழிந்துவிட்டது.

இது மட்டுமன்றி, பல வருடங்களாக இந்த தொழிலில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களுக்கு தீா்வு காணாமல் இருப்பதனால், ஜவ்வரிசி உற்பத்தி செய்யும்சிறு, நடுத்தரஆலைகள்பெரும்பாலானவை கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. அவை வங்கியில் பெற்ற கடனுக்கு, வட்டி கூட செலுத்த முடியாமல் தவித்து வருகின்றன.

105-க்கும் மேற்பட்ட நாடுகளில் மரவள்ளி உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக நைஜீரியா, பிரேசில், இந்தோனேசியா, தாய்லாந்து, காங்கோ, அங்கோலா, கானா, மொசாம்பிக், வியத்நாம், இந்தியா, உகாண்டா,சீனா, தான்சானியா, மடகாஸ்கா், ருவாண்டா, , பராகுவே, பெனின், லாவோஸ், பிலிப்பைன்ஸ், கம்போடியா, கேமரூன், கொலம்பியா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, ஜாம்பியா, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான் போன்ற நாடுகளோடு சோ்த்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மரவள்ளியை மையமாக கொண்டு பொருளாதார வளமையை பெற்று வருகின்றன.

மரவள்ளி உற்பத்தியை மையப்படுத்திய நாடுகள் எல்லாம் பொருளாதார வலிமை பெற்றுள்ளன. ஆனால் இந்திய அளவில் மரவள்ளி உற்பத்தியில் முதன்மை வகிக்கும் தமிழகம் மரவள்ளியை கொண்டு பொருளாதார வலிமை பெறாமல் தவிப்பதோடு மரவள்ளி உற்பத்தி செய்யும் விவசாயிகளையம் மிக கொடுமையான துயரத்தில் வைத்துள்ளது.

இந்திய உணவு உற்பத்தியை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்கள் இவை. மத்திய மாநில அரசுகள் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு உடனடியாக இவை அனைத்திற்கும் தீா்வுகானவேண்டும். மத்திய அரசும் தமிழக அரசும் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் மூலம் மரவள்ளி விவசாயம் பாதுகாப்படும் என்றும் மரவள்ளி விவசாயிகள் வளம் பெறுவாா்கள் என்றும் நம்புவோம்!

கட்டுரையாளா்:

தலைவா்,

இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.