நடுப்பக்கக் கட்டுரைகள்

அவரவர் மார்க்கம் அவரவருக்கு!

கே.எம். காதர்முகைதீன்

'இஸ்லாம்' என்றால் "முற்றிலுமாகச் சரணடைதல்' என்பது பொருள் என அறிஞர்கள் கூறுகிறார்கள். தன்னைப் படைத்த இறைவனுக்கு முற்றிலுமாக சரணடைதலை இஸ்லாமிய மார்க்கம், இஸ்லாமிய நெறி, தீனுல் இஸ்லாம் என விவரித்து வருவது உலகியல் ஆகும்.
 "எப்படி மனிதன் இருக்க வேண்டுமோ, அப்படி இருந்தால் அதுவே இஸ்லாம்' என்று ஈரோட்டுக் கவிஞர் தமிழன்பன் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தகைய இயற்கை நெறியைப் பின்பற்றி, நம்பி, நடைமுறைப்படுத்தி வாழ்வோரே "முஸ்லிம்' என அழைக்கப்படுகின்றனர்.
 ஒரு முஸ்லிமின் வாழ்கையில் இரு கூறுகள் மிகவும் குறிப்பிட்டுரைக்க வேண்டியவை ஆகும். முதலாவது, நம்பிக்கை, இரண்டாவது நடைமுறை.
 முதலில் இறைவனை நம்புவதாகும். இரண்டாவது வானவர்களை நம்புவதாகும், மூன்றாவது இறைவனால் அருளப்பட்டுள்ள வேதங்களை நம்புவதாகும். நான்காவது இறைவனால் அனுப்பப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளை நம்புவதாகும். ஐந்தாவது இறுதித் தீர்ப்பு நாள் வரும் என்றும், அப்போது, மாண்டவர்கள் அனைவரும் உயிர்த்தெழச் செய்யப்படுவர் என்றும், அவர்கள் உலக வாழ்வில் நன்மைகள் செய்திருப்பின், சுவர்க்கம் பெறுவர் என்றும் தீமைகளில் மூழ்கியிருப்பின் நரக நெருப்பில் இடப்படுவர் என்றும் நம்புவதாகும்.
 இஸ்லாம் மார்க்கத்தில் இறைவனை "அல்லாஹ்' என்று குறிப்பிடப்படுகிறது. இறைவனைக் குறிக்கும் இந்தச் சொல், திருக்குர்ஆன் வேதத்தில் உள்ள 6666 திருவசனங்களில் சற்றொப்ப மூவாயிரம் இடங்களில் அதே சொல்லாகவோ அல்லது அதற்குரிய விளக்கமாகவோ வருகிறது என்பது அபூர்வமான செய்தியாகும்.
 இறைவனைக் குறிக்கும் இந்த "அல்லாஹ்' எனும் சொல், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் 89 இடங்களில் வருகின்றது என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். "தி கீதா அண்டு தி குர்ஆன்' என்னும் நூலில் பண்டிட் சுந்தர் லால், இந்தியாவில் ரிக்வேத காலத்தில் "அல்லா'வை இறைவனாகப் போற்றி வணங்கிய கூட்டம் ஒன்று இருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 ஏசுபெருமானுக்கு அருளப்பட்டதாக நம்பப்படும் "இன்ஜீல்' என்னும் வேதத்தில், அதாவது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் அல்லாஹ் என்பது "எல்' என்று வருகிறது என்ற கருத்தை இலங்கை ஆய்வாளர் ஜார்ஜ், மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் தனது ஆய்வுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஏசுபெருமான் "எல் ஈ. எல் ஈ' என்று, அதாவது "என் இறைவனே என் இறைவனே' என்று அழைத்தார் என்று கூறியிருக்கின்றார்.
 "எல்' என்பது தொல்காப்பியத்தில் "எல்லே இலக்கம்' என்னும் சூத்திரத்தில் இடம்பெற்றிருக்கும் சொல்லாகும். இதற்கு விளக்கம் கூறிய ஆய்வறிஞர்கள் ஒளிபொருந்திய செம்பொருளை "எல்' குறிப்பிடுகிறது என்றும் , இதுவே காலப் போக்கில் "எல்லா' எனவும், "இலகா' எனவும் அல் இலாக ஆகவும், அதுவே "அல்லாஹ்' ஆகவும் பரிணமித்திருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.
 "கற்பனைக் கெட்டாத வெட்ட வெளியில் தானே வெளிக் கிளம்பி, பிரவாகம் எடுத்திருக்கும் ஒளி வெள்ளம்' என்பதைத்தான் "அல்லாஹ்' என்றும், "எல்' என்றும் அழைத்து வந்துள்ளனர் என்பதை வரலாற்றுப் பாதை நெடுகிலும் பார்க்கிறோம்.
 அப்பர் சுவாமிகள் கூறியிருப்பதை இங்கே குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். அவர்,
 இப்படியன் இந்நிறத்தன்
 இவ்வண்ணத்தன்
 இவன் இறைவன் என்றெழுதித்
 காட்டொணாதே
 என்று இறைவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
 இரண்டாவதாக, வானவர்களை நம்புவதாகும். வானவர் என்போர் ஒளியால் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இறைவனின் கட்டளைப்படி அனைத்தையும் செய்யக் கூடியவர்கள். இந்த வானவர்களில் தலையாய வானவர் "ஜிப்ரயீல்' எனப்படுகிறார். இறைவன் புறத்தில் இருந்து, மனிதர்கள் மத்தியில் வாழும் தீர்க்கதரிசிகளுக்கு இறை வேதத்தை அருளிச் செய்யக் கூடியவர் இந்த வானவர்.
 இவ ர்போன்றே மரணம் ஏற்படுத்தும் வானவர் மற்றும் சுவர்க்கம், நரகம் பாதுகாக்கும் வானவர், இறைவன் இட்ட கட்டளைகளைச் செவ்வனே நிறைவேற்றும் வானவர்கள் என்று எண்ணற்றோர் பற்றிய தகவல்கள் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ளன.
 மூன்றாவதாக மனித சமுதாயத்தில் நன்மையை ஏவி, தீயதை விலக்கிக் காட்டும் இறைவேதங்கள், ஆகமங்கள், தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டிருக்கின்றன.
 நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வேதம் இறக்கப்பட்டது. வேதம் என்பது நபியவர்களின் உள்ளத்தில் இருந்து வெளியில் வந்தது அன்று; இறைவன் புறத்தில் இருந்து வானவர் ஜிப்ரயீல் மூலம் நபியவர்களுக்கு ஊட்டப்பட்டது திருக்குர்ஆன். நபியவர்களின் வாழ்க்கையில் 23 வருட காலத்தில் சன்னம் சன்னமாக வெளிவந்த திருக்குர்ஆன் இறுதியில் தொகுக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் ஓதப்பட்டும், படிக்கப்பட்டும், ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது.
 உலகத்தில் திருக்குர்ஆன் வேதம் இறுதிவேதமாக உள்ளது. இதற்குப் பிறகு உலகத்தில் வேறு எந்தவொரு வேதமும் இறைவன் புறத்தில் இருந்து அருளப்படமாட்டாது என்பதை திருக்குர்ஆன் உறுதிப்படுத்தி இருக்கிறது. திருக்குர்ஆன் வேதம், அதற்கு முன்பு அருளப்பட்ட வேதங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்துவதோடு, முஸ்லிம்கள் அவற்றையும் நம்ப வேண்டும் என்று ஏவி இருக்கிறது.
 நான்காவதாக, உலகில் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாக்குப்படி 1,24,000 (ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம்) தீர்க்கதரிசிகள் வந்திருக்கிறார்கள். இவர்களின் பெயர்கள் 25 மட்டுமே திருக்குர்ஆனில் இடம்பெற்றிருக்கின்றன. தீர்க்கதரிசிகள் அனைவரையும் சமமாக ஏற்றுப் போற்றிட வேண்டும் என்று முஸ்லிம்கள் வற்புறுத்தப்பட்டிருக்கின்றனர்.
 இந்திய வரலாற்றில் வரும் "ரிஷிகள்' என்போர் தீர்க்கதரிசிகளாக வாழ்ந்திருக்க முடியும் என்றும், தமிழகத்தில் இறைவனை ஏற்றும், போற்றியும் வாழ்ந்த ஒரு திருக்கூட்டம் "வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்' என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 அனைத்து வேதங்களையும் நம்புவதோடு, எல்லா தீரிக்கதரிசிகளையும் ஏற்றுப் போற்றுவதோடு, அனைவரையும் சமமாகக் கருதிட வேண்டும் என்று முஸ்லிம்கள் ஏவப்பட்டிருக்கின்றனர்.
 ஐந்தாவதாக, இறுதித் தீர்ப்பு நாள் வரும் என நம்புவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. மனித உற்பத்தியை விவரிக்கும் திருக்குர்ஆன், வெளி உலகிற்கு வரும் மனித உயிர், தாயின் கருவறையில் இருக்கும்போது, பத்து மாதங்களுக்குப் பிறகு பரந்த உலகில் பிரவேசிக்க இருப்பதைத் தெரிந்திருக்க முடியாது! அது போலவே, பரந்த உலகில் வாழ்ந்து மடியும் மனித உயிர் மீண்டும் உயிர்த்தெழும்போது, இந்த உலகத்தைவிட மிகமிகப் பெரியதொரு உலகில் பிரவேசிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
 இவ்வாறு ஆன்மிக ஞானிகள் விரிவான விளக்கங்களைத் தந்து நம்பிக்கையை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இத்தகைய நம்பிக்கையில் தன்னை மூழ்கவைத்துக் கொண்டுள்ள ஒரு முஸ்லிம் ஐம்பெரும் கடமைகளைத் தனது வாழ்வின் நடைமுறையாக ஏற்று நடக்க வேண்டும் என்று வரையறை செய்திருக்கிறது.
 "லா இலாஹ இல்லல்லாஹூ முஹம்மது ரஸþலுல்லாஹி' - வணக்கக்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது நபி, இறைவனின் திருத்தூதர் ஆவார். இதுதான் திருவாக்கியம் - கலீமா.
 இரண்டாவது, நாள்தோறும் ஐந்து வேளை இறைவனைத் தொழுவதாகும். மூன்றாவது, வருடத்தில் ரமலான் மாதம் முழுவதும் உண்ணாமல், பருகாமல், உடல் இச்சைக்களுக்கு இடம் கொடுக்காமல், பாவம் எதையும் எண்ணாமலும், எத்தகைய பாவச்செயலிலும் ஈடுபடாமலும் நோன்பு இருப்பது ஆகும்.
 நான்காவது, ஆண்டு முழுவதிலும் சேர்த்திருக்கும் பொருளில் இருந்து இரண்டரை சதவீதம் ஏழைகளுக்குரிய பங்காக விநியோகிப்பது ஆகும். ஐந்தாவது, வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில் ஒரு முறையேனும் மக்காவில் உள்ள கஃபத்துல்லாஹ் சென்று, அதைத் தொடர்ந்து அரபா மைதானத்தில் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்வதாகும்.
 மேற்கூறப்பட்ட நம்பிக்கைகளுடன், இந்த ஐந்து நடைமுறைகளையும் ஏற்று போற்றி நடக்கும் ஒவ்வொருவரும் முஸ்லிம் என்று கருதப்படுகிறார். முஸ்லிமாக உள்ள யாவரும் பிறருக்குத் தனது கரத்தாலும், நாவாலும் தீங்கு செய்யாதவன் என்று வாழ்த்திட வேண்டும் என்று நபி (சல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.
 தான் ஏற்றுக்கொண்டு வாழும் நம்பிக்கை, நடைமுறைகளை எல்லோருக்கும் எடுத்துக் கூறுவது முஸ்லிமின் கடமையாகும். ஆனால், மார்க்கத்தைக் கட்டாயமாகத் திணிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அவரவர் மார்க்கம், அவரவருக்கு உரியது.
 "லகும் தீனுக்கும் வலியதீன்' - ஒவ்வொரு சமயம் சார்ந்த சமூகத்திற்கும் அவரவர் ஏற்றுப் போற்றும் வணக்க வழிபாட்டு முறைகள் உண்டு. அதற்கு இடையூறாக எந்தவொரு முஸ்லிமும் தனது வாழ்வில் எவ்வித இடைஞ்சலும் செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது.
 உலக மக்கள் யாவரும் ஒரு தாய் மக்கள் ஆவார்கள். "வசுதைவ குடும்பகம்' - மானுட சமுதாயம் முழுவதும் ஒரே குடும்பம்தான். யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
 மதங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்படும் குழப்பங்கள் பற்றி, இவ்வுலகில் உங்களுக்குகிடையில் சர்ச்சையும், தகராறும் விளைவிக்க வேண்டாம். இறுதித் தீர்ப்பு நாளின்போது, இத்தகைய சர்ச்சை தகராறுகளுக்கு உரிய விடையை இறைவன் அனைவருக்கும் வழங்குவான் என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக எடுத்துக் கூறி இருக்கிறது.
 மனிதர்கள் மத்தியில், பல்வேறு மதங்களும், நம்பிக்கைகளும், நடைமுறைகளும் என்றும் தொடரக் கூடியவையாகும்.
 மனிதர்களாகிய நாம் நல்லதை நினைப்போம்; நல்லதைச் செய்வோம்; நல்லதையே ஏவுவோம்; நல்லதற்காகவே வாழ்வோம். ஒன்றுபட்டு வாழும் காலம் உலகின் பொற்காலமாகும். அந்தப் பொற்காலத்தை நோக்கிப் பயணிப்போம்.
 
 கட்டுரையாளர்:
 தேசிய தலைவர்,
 இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானாவை வெளுத்து வாங்கும் கனமழை! மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட்!

காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் ரிப்பன் மளிகை! போராட்டக் களத்தில் பரபரப்பு!

கௌதம் கம்பீர் என்னிடம் எப்போதும் கூறுவது என்ன தெரியுமா? மனம் திறந்த ஆகாஷ் தீப்!

ரெடியா? 5,000 திரைகளில் வெளியாகும் கூலி!

ஒருநாள் தரவரிசையில் ரோஹித் 2-ஆவது இடம்..! டாப் 10-இல் 4 இந்தியர்கள்!

SCROLL FOR NEXT