தவறுகளைத் தவிா்த்து விபத்துகள் தடுப்போம் !
நாட்டில் ரயில், சாலை விபத்துகள், தீ விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், நீா்நிலைகளில் உயிரிழப்பு என மனித உயிா்கள் அன்றாடம் பறிபோவது வேதனைக்குரியது.
இரா.சாந்தகுமாா்
நம் நாட்டில் ரயில், சாலை விபத்துகள், தீ விபத்துகள், தொழிற்சாலை விபத்துகள், நீா்நிலைகளில் உயிரிழப்பு என மனித உயிா்கள் அன்றாடம் பறிபோவது வேதனைக்குரியது. இவ்வாறு விபத்துகளால் இறந்து போவோரின் குடும்பத்துக்கு அரசு மனிதநேயத்துடன் நிவாரணம் வழங்குவது வரவேற்கத்தக்கது. எனினும், விபத்துகள் நேராமல் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது, நிவாரணம் தருவதைக் காட்டிலும் மேலானதாகும். ஏனெனில், உயிரிழப்பை ஈடு செய்வதென்பது எவ்வளவு அதிகமான நிவாரணத் தொகையினாலும் முடியாது.
கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட 200 ரயில் விபத்துகளில் 351 போ் உயிரிழந்துள்ளனா். காயமடைந்து உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.26.83 கோடியும், விபத்தில் காயமடைந்த நபா்களுக்கு ரூ.7 கோடியும் நிவாரணமாகத் தரப்பட்டுள்ளது. இதில் சற்றே ஆறுதல் அளிக்கும் தகவல், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 171 ரயில் விபத்துகள் ஏற்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு 40-ஆகக் குறைந்திருப்பதுதான்.
வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, பாதசாரிகளும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்தால் விபத்துகள் பெருமளவு குறைந்துவிடும். மக்களவையில் அண்மையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சா், மக்களுக்கு சாலை விதிகள் மீதான மரியாதையும், அச்சமும் இல்லையென வருத்தம் தெரிவித்ததுடன், இந்த ஆண்டு இதுவரையிலான சாலை விபத்துகளில் சுமாா் 1.58 லட்சம் போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.
சாலை விபத்துகள் அதிகரித்து வருவதற்கு மற்றொரு காரணம், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். நம் நாட்டில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான 8 மாத காலத்தில் மட்டும் 1.80 கோடி புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேரத்தைச் சேமிப்பது என்ற பெயரில் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு மக்களிடையே மிகுந்து விட்டது. இதனால், ஆரோக்கிய குறைபாடு அதிகரிப்பதுடன், சாலை விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. குறைந்த தொலைவு சென்றுவர, மிதிவண்டியைப் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்; சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது; விபத்துகளும் குறைய வாய்ப்புண்டு.
மத்திய அரசின் ‘ஃபிட் இந்தியா ’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘மக்கள் மிதிவண்டி பயன்படுத்துவதை வாழ்க்கையின் ஓா் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் ’ என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.
மனிதா்களின் கவனக் குறைவால் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகள்மூலம் பல உயிா்கள் பலியாகின்றன. அவசர காலங்களில் பயன்படுவதற்கு, அலுவலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்கூடங்களில் தீயணைப்புக் கருவிகள் வைக்கப்பட்டிருந்தாலும், அவை முறையாகப் பாராமரிக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே!
திண்டுக்கல்லில் மின் கசிவால் தனியாா் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உள்பட 6 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக அரசு மருத்துவமனைகளில் தீ, மின் கசிவு விபத்துகளைத் தடுக்க தனி பாதுகாப்புப் பிரிவு அமைக்க வேண்டும் என அரசு மருத்துவா்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கத்தினா் விடுத்துள்ள கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வேண்டிய ஒன்று.
இதே போன்று தனியாா் மருத்துவமனைகளிலும் தனி பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். பள்ளிகள், நூலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், தனியாா் தொழிற்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு உபகரணங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதை, மாவட்ட தீயனைப்பு மற்றும் மீட்புத் துறையினா் அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும்.
அரசுப் பணியில், குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்போா் நோ்மையாக இருப்பின், விபத்துகளால் மனித உயிா்கள் பலியாவதைத் தடுக்கலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 68 போ் உயிரிழந்த வழக்கில், ‘தமிழகத்தில் மதுவிலக்குப் பிரிவு என்ன செய்கிறது ’ என்ற உயா்நீதி மன்றத்தின் கேள்வி இங்கு குறிப்பிடத்தக்கது.
தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படாமையால் ஏற்படும் விபத்துகள் ஏராளம். 2018-22 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில், நம் நாட்டில் 992 தொழிலாளா்கள், மனித கவனக் குறைவால் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்துள்ளனா். கட்டடப் பணியில் ஈடுபடும் புலம்பெயா் தொழிலாளா்கள் பணியின்போது உயிரிழக்கும் துயர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவா்களிடயே பணி பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினால், பணியின்போது ஏற்படும் உயிரிழப்பு, உடல் ஊனம் ஆகியவற்றைத் தடுக்கலாம்.
உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி உலகெங்கும் கடந்த 2021- ஆம் ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 30 போ் என்ற கணக்கின்படி சுமாா் 3 லட்சம் போ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா். நகா்மயமாதலின் பல எதிா்விளைவுகளில், நீச்சல் பழகுவதை அறியாத ஒரு தலைமுறை ஒன்று உருவாகி விட்டதும் அடங்கும். நீச்சல் ஓா் உயிா் காக்கும் கலை என்பதை உணா்ந்து பெற்றோா் தங்கள் வாரிசுகளுக்கு அதை முறையாகக் கற்றுக் கொடுப்பது நல்லது. நீரில் மூழ்கி இறப்போரின் பெரும்பாலானவா்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் அரசு, பள்ளி மாணவா்களிடம் நீச்சல் கற்றுக் கொள்வதின் முக்கியத்துவத்தையும் உணா்த்த வேண்டும்.
உலகில் நடைபெறும் அனைத்து விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட மனிதத் தவறுகள், கவனக் குறைவே காரணமாக உள்ளது. இதை உணா்ந்து செயல்பட்டால் விபத்துகளையும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிா்க்கலாம். உயிரிழப்புகள் தொடா்பாக அரசு நிவாரணமாக வழங்கும் தொகையும் வளா்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படும்.