சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டுப் பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும். ஏனெனில், சென்னையின் கட்டமைப்பு, சுற்றுப்புற சுகாதாரம், மாநகர நிர்வாக ஆளுமையை வைத்துத்தான் தமிழகத்தை எடை போடுவார்கள்.
சிங்கப்பூர் தூய்மையான நாடு என்று போற்றப்படுவதற்குக் காரணம் சுற்றுப்புற சுகாதார விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுவதால்தான். சிங்கப்பூரில் விதிகளைக் கடைப்பிடித்து சென்னை வந்தவுடன் ஆசை தீர துப்பவும், குப்பைகளைப் போடவும் செய்வான் சென்னைவாசி என்று வேடிக்கையாக சொல்வார்கள். இது வேதனையான நிலை. சிங்கார சென்னை என்ற இலக்கு வைத்தாலும், சுற்றுச் சூழலைப் பேணுவதில் தொடர்ச்சியாக பின்தங்கிய நகரமாகவே இருக்கிறது.
இந்தியாவின் நகர்ப்புற நிலப்பரப்பு கழிவு மேலாண்மை நடைமுறைகளில் ஒரு கூர்மையான இருவேறுபாடுகளைக் காணமுடிகிறது. சில நகரங்கள் தூய்மை, செயல்திறனின் மாதிரிகளாக மாறிவிட்டாலும், மற்றவை தொடர்ந்து அதிகரித்துவரும் கழிவு மேலாண்மை சவால்களை எதிர்கொள்கின்றன.
இந்தியா ஆண்டுதோறும் தோராயமாக 62 மில்லியன் டன் நகராட்சி திடக்கழிவுகளை உருவாக்குகிறது. இந்த கழிவுச் சுமையில் நகர்ப்புறங்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. சேகரிப்பு மற்றும் சுத்தி
கரிப்பு புள்ளிவிவரங்கள் நாட்டின் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளை வெளிப்படுத்துகின்றன. சமீபத்திய தரவுகளின்படி, உருவாக்கப்படும் மொத்தக் கழிவுகளில் சுமார் 4.3 கோடி டன் (70%) மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 1.2 கோடி டன் மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் 3.1 கோடி டன் முறையான செயலாக்கம் இல்லாமல் குப்பைக் கிடங்குகளில் முடிகின்றன. இது சுகாதார சீர்கேட்டுக்கு ஒரு முக்கியக் காரணி.
இந்திய நகரங்களில் உள்ள கழிவுகளின் கலவை பொதுவாக 40-60% கரிமக் கழிவுகளையும், 10}30% காகிதம், பிளாஸ்டிக் மற்றும் உலோகங்கள் உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களையும், மீதமுள்ளவை கட்டுமானக் குப்பைகள் மற்றும் அபாயகரமான பொருள்களையும் உள்ளடக்கியது. பயனுள்ள கழிவு மேலாண்மை உத்திகளைச் செயல்படுத்தினால் நகரம் தூய்மையாகும். இதுதான் மத்திய
பிரதேச மாநிலம், இந்தூர் நகரம் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக "தூய்மையான நகரம்' என்று தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம். இந்தூர் நகராட்சி 2016-ஆம் ஆண்டு தொடங்கி அதன் கழிவு மேலாண்மை முறையை முழுமையாக மாற்றியமைத்தது. இந்த மாற்றம் 100% வீடுவீடாகச் சென்று கழிவு சேகரிப்பை நிறுவுவதன் மூலம் தொடங்கியது. இந்த அடிப்படை நடவடிக்கை குடியிருப்பாளர்கள் திறந்தவெளிகள் அல்லது நீர்நிலைகளில் கழிவுகளைக் கொட்டும் நடைமுறையை நீக்கியது.
மேலும், இந்தூர் நகர நிர்வாகம் கழிவு பதப்படுத்தும் உள்கட்டமைப்பில் அதிக முதலீடு செய்தது. பல கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டன. வீடுகளிலிருந்து குப்பைகளை ஈரமான மற்றும் உலர்ந்த கழிவுகளைப் பிரித்து அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் மக்கும் குப்பைகளைப் பதப்படுத்தி எருவாக்கலாம். எஞ்சியவற்றை மறு சுழற்சிக்கும் மறு பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம்.
இந்தச் செயலாக்க செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும் உத்தியை இந்தூர் நகராட்சி திறமையாகக் கையாண்டது.ஜிபிஎஸ்-இயக்கப்பட்ட கழிவு சேகரிப்பு வாகனங்கள், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் குடிமக்கள் புகார் தீர்வு தளங்கள் மூலம் கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தூர் முன்னோடியாக உள்ளது. கழிவுகளிலிருந்து எரிசக்தி ஆலைகள் மற்றும் உரம் தயாரிக்கும் வசதிகள் போன்ற புதுமையான தீர்வுகளையும் அறிமுகப்படுத்தியது.
இந்தூர் வெற்றியின் முக்கியமான அம்சம் சமூக ஈடுபாடு. நகர நிர்வாகம் விரிவான விழிப்புணர்வு பிரசாரங்களைத் தொடங்கியது. குடியிருப்பாளர்களுக்கு பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், கழிவு மேலாண்மை நடவடிக்கைகளைக் கண்காணித்து ஆதரிக்க வார்டு அளவிலான குழுக்கள் நிறுவப்பட்டன.
ஊக்கத்தொகைகள் மற்றும் அபராதங்கள் முறையைச் செயல்படுத்தியும், அதே வேளையில் இணக்கமான குடிமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வெகுமதி அளித்தது. கழிவு மேலாண்மையை அரசாங்கப் பொறுப்பாக இல்லாமல் சமூக முன்னுரிமையாக மாற்றியது.
சமீபத்திய "ஸ்வச் சர்வேக்ஷன் 2024}25' தரவரிசைப்படி, தமிழ்நாட்டின் நகர்ப்புற மையங்கள் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன. 10 லட்சத்துக்கும்
அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மதுரை மிகவும் அழுக்கான நகரமாகவும், அதே பிரிவில் சென்னை மூன்றாவது இடத்திலும் உள்ளது.
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன் கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80}100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளைப் பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
வீடுகளில் 79% மூலப் பிரிப்பு இருந்தாலும், சேகரிப்பு புள்ளிவிவரங்களுக்கும் உண்மையான தூய்மை விளைவுகளுக்கும் இடையிலான இடைவெளி, கழிவு பதப்படுத்துதல், சுத்திகரிப்பு மற்றும் இறுதி அகற்றலில் உள்ளசிக்கல்களைக் குறிக்கிறது.
சென்னையுடன் ஒப்பிடும்போது மதுரை சிறிய நகரமாக இருந்தாலும், ஒரு முக்கிய யாத்திரை மற்றும் சுற்றுலாத் தலமாக தனித்துவமான சவால்களை எதிர்கொள்கிறது.
இரண்டு நகரங்களிலும் பல நிறுவனங்கள் பெரும்பாலும் கழிவு மேலாண்மையின் பல்வேறு அம்சங்களுக்கு பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன. இவை ஒருங்கிணைப்பு சவால்கள் மற்றும் பொறுப்புக்கூறல் இடைவெளிகளை உருவாக்குகின்றன.
தமிழ்நாட்டில் முற்போக்கான கழிவு மேலாண்மைக் கொள்கைகள் காகிதத்தில் இருந்தாலும், போதுமான கண்காணிப்பு, போதுமான வளங்கள் இல்லாதது மற்றும் பலவீனமான அமலாக்க வழிமுறைகள் காரணமாக தரைமட்ட செயல்படுத்துதல் பெரும்பாலும் சவாலாக உள்ளது. கழிவுப் பொருள் மேலாண்மையில் மறு சுழற்சி மக்கும் மறு பயன்பாடு முக்கியமான அங்கமாகும். நெகிழி எங்கும் வியாபித்திருக்கிறது; கழிவுப் பொருளாக தேங்குகிறது.
சாலைகளைச் செப்பனிடுகையில் "பிடுமென்' கலவையோடு நெகிழியைச் சேர்த்து ஒரு வெப்பநிலை அடையும் வகையில் காய்ச்சி நிரவினால் சாலை கெட்டியாக இருக்கும்; நெகிழிச் சேர்க்கையால் தண்ணீர் இறங்காது; சாலை பாதுகாக்கப்படும் என்று தியாகராஜா பொறியியல் கல்லூரியின் விஞ்ஞானி வாசுதேவன் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததை வெளியிட்டார். அதற்கு அவருக்கு பத்மஸ்ரீ விருது 2018}இல் கிடைத்தது. அந்தக்கண்டுபிடிப்பின் அடிப்படையில்
சென்னையில் சாலைகள் சீரமைக்கப்பட்டன. கழிவாகப் பெருகும் நெகிழிப் பிரச்னைக்கு இது ஒரு தீர்வு. ஆனால், தொடர்ந்து இந்த முயற்சி எடுக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி!
புணே நகரில் ஜே.எம். சாலை1972-இல் ரெகாண்டோ ஒப்பந்த நிறுவனத்தால் போடப்பட்டு 50 ஆண்டுகளாகியும் உறுதியாக உள்ளது. அவர்களும் அதிக வெப்பக் கலவை தொழில்நுட்பத்தை பிரயோகித்து வெற்றி கண்டார்கள். ஆனால், அவர்களுக்கு அதற்குப் பிறகு சாலை செப்பனிட ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. நெகிழி சேர்ந்த கலவையோடு சாலை செப்பனிடும் தொழில்நுட்பமும் மறைந்து விட்டது.
போதுமான கழிவு பதப்படுத்தும் உள்கட்டமைப்பு இரு நகரங்களுக்கும் ஒரு முக்கியமான தடையாக உள்ளது. போதுமான சுத்திகரிப்பு வசதிகள், உரம் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் கழிவுகளில் இருந்து எரிசக்தி நிறுவல்கள் இல்லாததால், சேகரிக்கப்பட்ட கழிவுகளில் பெரும்பாலானவை திறந்தவெளிக் குப்பைகள் அல்லது மோசமாக நிர்வகிக்கப்படும் பெருங்குடி, கொடுங்கையூர் குப்பைக் கிடங்குகளில் முடிவடைகின்றன.
சென்னை மந்தைவெளி பகுதியில் ஒரு குடியிருப்பின் பெயர் குப்பைமேடு! திறந்தவெளி குப்பைக் காடாக இருந்ததால் இந்த பெயர் நிலைத்துவிட்டது. இது சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பொது சுகாதார அபாயங்களுக்கு வித்திடுகிறது. சென்னை ஹாரிங்டன் சாலை, அண்ணாமலைபுரம் குடியிருப்பு சங்கம், அதே பகுதியில் திருவீதியம்மன் குடியிருப்புகளில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இணைந்து குப்பையில்லா சூழலை உருவாக்கி மாநகராட்சியின் விருதும் பெற்றுள்ளனர். இந்த முயற்சி மற்ற பகுதிகளிலும் சமூக ஈடுபாட்டை வலியுறுத்தும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த இரு நகரங்களிலும் தெருவோர சிற்றுண்டிக் கடைகள் புற்றீசல்போல் பெருகி விட்டன. அந்தக் கடைகளிலிருந்து வரும் கழிவுகள் தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் குவிகின்றன. இஷ்டப்படி சிறுநீர், மலம் கழிப்பது
லஜ்ஜையே இல்லாத ஒரு கலாசாரமாகவே வளர்ந்துவிட்டது. பொதுக் கழிப்பிடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை. இவையெல்லாம் நகரின் கழிவு மேலாண்மையைப் பாதிக்கிறது.
சென்னை, மதுரை போன்ற நகரங்களுக்கு விரிவான சீர்திருத்தங்கள் தேவை. இதில் தெளிவான பொறுப்புக்கூறல்
வழிமுறைகளை நிறுவுதல், போதுமான உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல்மற்றும் வலுவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்புகளைச் செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும். தமிழ்நாட்டின் நிர்வாக கட்டமைப்பு வலுவானது. திறமையான அதிகாரிகள் அரசுப் பணியாளர்கள் உள்ளனர்.
அவர்கள் முனைப்பாகச் செயல்பட்டால் தூய்மையான, பசுமையான மாசற்ற மாநகரை உருவாக்க முடியும். குப்பைகளுக்கு முடிவு கட்ட வேண்டியது நமது பொறுப்பும்; முடியும் என்றால் நிச்சயமாக முடியும்.
கட்டுரையாளர்:
முன்னாள் காவல் துறைத் தலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.