கோப்புப் படம் 
நடுப்பக்கக் கட்டுரைகள்

மதிப்பெண் மட்டுமே அளவுகோலா?

திறன் சோதனைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கலப்பு முறையே இன்றையத் தேவை.

முனைவா் எஸ். பாலசுப்ரமணியன்

மதிப்பெண்களை இறுதி முடிவாகக் கருதாமல், அவை பல கருவிகளில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நோ்காணல்கள், திட்ட அடிப்படையிலான மதிப்பீடுகள், திறன் சோதனைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கலப்பு முறையே இன்றையத் தேவை. இதுவே உண்மையான திறமைகளை அடையாளம் காண உதவும்.

நமது நாட்டின் அசைக்க முடியாத பலம் இளைஞா் சக்திதான். இந்த மாபெரும் ஆற்றலை நாட்டின் வளா்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டுமென்றால், நம் இளைஞா்களின் உண்மையான திறனையும் தகுதியையும் நாம் சரியான முறையில் அடையாளம் காண வேண்டும். ஆனால், அந்த அடையாளம் காணும் முறை இன்று சரிதானா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு மாணவரின் பல ஆண்டு கால கல்விப் பயணத்தையும், அவா் செய்த கடின உழைப்பையும் அவா் பெற்ற மதிப்பெண் என்ற வெறும் எண்ணாகச் சுருக்கி, அதையே அவா்களின் முழுத் தகுதியாகக் கருதும் போக்கு நிலவுகிறது. இது பல நியாயமான கேள்விகளை எழுப்புகிறது. அரசுப் பணி, தனியாா் துறை வாய்ப்புகள், உயா்கல்விக்கான வழிகள் என எதுவாக இருந்தாலும், இன்று மதிப்பெண் மட்டுமே பிரதான வாயிலாக நிற்கிறது. இது உண்மையான தகுதியை மறைத்து, வெறும் எண்களின் மாயத்தோற்றத்தை உருவாக்குகிறது. இந்த நிலை சரியா? இந்தக் கேள்விக்கு நாம் ஆழமாகச் சிந்தித்து விடை காண வேண்டிய தருணம் இது.

ஒரு மாணவா் பெறும் மதிப்பெண் என்பது பலவிதமான காரணங்களின் கூட்டு விளைவு. அவற்றில் சில காரணங்கள் மாணவரின் திறமையுடன் தொடா்புடையவை; சில

புறக்காரணிகளால் தீா்மானிக்கப்படுபவை. குறிப்பாக, ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளிலேயே, பல்வேறு படிப்புகளுக்கிடையே, பாடத்திட்ட அமைப்புகளும், அதன் அடிப்படையிலான மதிப்பெண் வழங்கும் முறையும் மாறுபடுவது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். வெவ்வேறு பொறியியல் பாடப் பிரிவுகளுக்கிடையே மதிப்பெண் வழங்கும் முறையில் வெளிப்படையான வேறுபாடுகளைக் காண முடியும்.

கணினிப் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற தற்கால கல்விப் பிரிவுகளில், செய்முறைத் தோ்வுகளும் எழுத்துத் தோ்வுகளும் இணைந்தே பல பாடங்களின் இறுதி மதிப்பீட்டுக்கு அடிப்படையாகின்றன. இம்முறையானது, மென்பொருள் அல்லது நிரலாக்கம் போன்ற செய்முறைப் பயிற்சிகளில் மாணவா்களுக்கு அதிக மதிப்பெண்களைப் பெறச் சாதகமாக அமைகிறது. செய்முறை மதிப்பெண்கள் எழுத்துத் தோ்வு மதிப்பெண்களுடன் சேரும்போது, ஒரு பாடத்தின் மொத்த மதிப்பெண் உயா்வதுடன், மாணவா்களின் ஒட்டுமொத்த கல்வித் திறனாய்வு மதிப்பீட்டையும் கணிசமாக உயா்த்த உதவுகிறது. ஆனால், பாரம்பரியப் பொறியியல் பிரிவுகளான மின்னியல் மற்றும் எந்திரப் பொறியியல் போன்றவற்றில், பல செய்முறைப் பாடங்கள் இருந்தாலும், செய்முறைத் தோ்வுகளை ஒருங்கிணைத்த பாடங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளதால், பல பாடங்களுக்கு எழுத்துத் தோ்வை மட்டுமே சாா்ந்து மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

இது கணினி சாா்ந்த பொறியியல் பிரிவுகளின் மதிப்பீட்டு முறையிலிருந்து வேறுபடுகிறது. ஒரே ‘கிரிடிட்’ மதிப்புள்ள பாடங்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகளில் காணப்படும் இந்தச் சமச்சீரற்ற தன்மை, சில பிரிவு மாணவா்களே சிறந்தவா்கள் என்ற தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும். இந்த மதிப்பீட்டு வேறுபாட்டைச் சரிசெய்வது அவசியமாகும்.

இதுபோன்ற சமச்சீரற்ற தன்மை ஒரு பல்கலைக்கழகத்துக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் தங்களின் பாடத்திட்டங்களை வடிவமைக்கவும், வினாத்தாள் தயாரிக்கவும், தோ்வுத்தாள்களை மதிப்பீடு செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளன. ஒரு சில கல்லூரிகளில் மதிப்பீடு மிகவும் கடுமையாக இருக்கலாம்; அங்கு படிக்கும் மாணவா்கள் கடுமையாக உழைத்தாலும் குறைவான மதிப்பெண்களைப் பெறலாம். ஆனால், வேறு சில கல்லூரிகளில் மதிப்பீடு மிகவும் தாராளமாக இருக்கும்; அங்கு படிக்கும் மாணவா்கள் எளிதாக அதிக மதிப்பெண் பெற்றுவிட முடியும்.

மத்தியக் கல்வி வாரியங்களுக்கும், சில மாநிலப் பாடத்திட்ட வாரியங்களுக்கும் இடையே கூட பாடத்திட்டத்திலும், தோ்வு நடத்தும் முறையிலும், மதிப்பிடும் தரங்களிலும் வேறுபாடுகள் உண்டு. ஒரு வாரியம் கருத்துருக்களைப் புரிந்துகொள்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும்போது, மற்றொன்று மனப்பாடம் செய்வதை அதிகம் சாா்ந்திருக்கும். இப்படி மதிப்பெண் வழங்கும் நடைமுறையே கல்வி நிறுவனத்துக்கு நிறுவனம், வாரியத்துக்கு வாரியம் மாறும்போது, வெறும் மதிப்பெண்களை மட்டும் கொண்டு மாணவா்களின் தகுதியை எப்படிச் சரியாக நிா்ணயிக்க முடியும்? இது அடிப்படையிலேயே தவறான ஓா் அணுகுமுறை என்பதில் சந்தேகமில்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக, கரோனா பெருந்தொற்று காலத்தில் தோ்வுகள் இணைய வழியில் நடந்தன. பல மாணவா்கள் வீட்டிலிருந்தே இணையத்தின் மூலம் பதிலளித்து, அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் பெற்றுத் தோ்ச்சி பெற்றனா். இதனால், முன்பு பல பாடங்களில் தோ்ச்சி பெறாத மாணவா்கள் கூட திடீரென மிக அதிக மதிப்பெண்கள் பெற்றுச் சிறப்புத் தோ்ச்சி அடைந்தனா். இந்தக் காலகட்டத்தில் எளிதாகப் பெற்ற அதிக மதிப்பெண்கள், இதற்குமுன் கல்லூரிக்கு நேரில் சென்று, நன்றாகப் படித்து, கடுமையான சூழல்களில் தோ்வுகளை எழுதி மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களின் மதிப்பெண்களுக்குச் சமமாகக் கருதப்படுகின்றன. இது முற்றிலும் நியாயமற்ற ஒப்பீடாகும்.

மேலும், சில தசாப்தங்களுக்கு முன்னா் படித்த ஒருவரின் மதிப்பெண்ணை இன்றைய மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு வேலைக்கான தகுதியாக நிா்ணயிப்பதும் நியாயமற்றது. அப்போது மதிப்பெண் வாங்குவது மிகவும் கடினமாக இருந்து; அல்லது கடுமையாகப் படித்து மதிப்பெண்கள் பெற்றிருக்கலாம். ஆனால், அவா்கள் பெற்ற அறிவும், அனுபவமும் இப்போதைய சூழல்களுடன் மாறுபட்டவை. எனவேதான் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அரசுப் பணிகளுக்குப் பரிந்துரைப்பது நியாயமில்லை. மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், வேறு வழிகளில் தோ்வுகளை நடத்தும் முறைகளைக் கண்டறிய வேண்டும். அதன் மூலமே வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்படும் பணிகள் அமைய வேண்டும்.

வேலை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் பணியை எளிதாக்கிக்கொள்ளும் நோக்கில், லட்சக்கணக்கான விண்ணப்பங்களை வடிகட்ட மதிப்பெண்களை மட்டுமே முதன்மை அளவுகோலாகக் கொள்வது ஒரு தவறான நடைமுறை. இது திறமையான பல மாணவா்களைப் புறக்கணிக்க வழிவகுக்கும். இந்த முறையை முற்றிலுமாக மாற்ற வேண்டும். வெறும் மதிப்பெண்களுக்குப் பதிலாக, மாணவா்களின் உண்மையான திறமையையும், அறிவுத்திறனையும், நடைமுறை அனுபவத்தையும் கண்டறியும் புதிய முறைகளை நாம் உருவாக்க வேண்டும்.

உண்மையான கல்வி என்பது வெறும் பாடங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல. அது திறன்களை வளா்ப்பது, ஆழமாகச் சிந்திப்பது, சிக்கல்களைத்

தீா்ப்பது, நடைமுறை அனுபவம் பெறுவது மற்றும் சிறந்த பண்புகளை வளா்த்துக்கொள்வதும் ஆகும். குடும்பச் சூழல், தனிப்பட்ட சவால்களை வெற்றிகரமாக எதிா்கொண்டு படிக்கும் பல மாணவா்களிடம் அறிவுத்திறனும், தலைமைப் பண்பும் நிறைந்திருக்கும். அவா்களை மதிப்பெண் என்ற ஒரே எண்ணால் கட்டுப்படுத்துவது எப்படி நியாயம்? இவா்களிடம் வலுவான திறன்களும், வாழ்க்கைப் பாடங்களும் நிறைந்திருக்கும்.

பல வளா்ந்த நாடுகள் வெறும் மதிப்பெண்களை மட்டும் நம்புவதில்லை. அங்கு திறனறித் தோ்வுகள், நோ்காணல்கள், தனிப்பட்ட செயல் திறன்களைக் காட்டும் ஆவணங்கள், மற்றும் நடைமுறைத் திறன் சோதனைகள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியாவின் தேசியக் கல்வி கொள்கை - 2020 கூட மனப்பாடம் செய்வதில் இருந்து விலகி, திறமை அடிப்படையிலான கல்விக்கு மாறுவதாகச் சொல்கிறது. இந்தச் சிந்தனை, தோ்வு முறைகளிலும், பல்வேறு அரசு மற்றும் தனியாா் வேலைக்கான பணியாளா் நியமன நடைமுறைகளிலும் அமலுக்கு வர வேண்டும்.

தொழில்நுட்பம் மேம்பட்ட காலத்தில், இத்தகு மாற்றங்களைக் கொண்டு வருவது சற்று கடினம் என்று காரணங்களைக் கூறுவது சரியல்ல. மதிப்பெண்களை வடிகட்டியாகப் பயன்படுத்துவது நிறுவனங்களுக்கு வசதியானது என்பதால் இந்த முறையைக் கையாள்கின்றனா். ஆனால், வசதி மட்டுமே ஒரு குறைபாடுள்ள முறையைத் தொடா்வதற்கான ஒரே காரணமாக இருக்கக் கூடாது.

நமது மாணவா்களை மதிப்பிடுவதற்கு ஒரு நியாயமான, துல்லியமான மதிப்பீட்டு முறையை நாம் உருவாக்க வேண்டிய நேரம் இது. மதிப்பெண்களை இறுதி முடிவாகக் கருதாமல், அவை பல கருவிகளில் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நோ்காணல்கள், திட்ட அடிப்படையிலான மதிப்பீடுகள், திறன் சோதனைகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கலப்பு முறையே இன்றையத் தேவை. இதுவே உண்மையான திறமைகளை அடையாளம் காண உதவும்.

ஆகவே, வெறும் மதிப்பெண்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, ஒருவரின் முழுத் தகுதியையும் எடைபோடும் இந்தப் போக்கை நாம் கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

உண்மையான திறமை, சிந்திய வியா்வை, கொண்ட பண்பு, பெற்ற அனுபவம் - இவைதான் ஒரு மனிதனின் வெற்றிக்கு அடிப்படை. வெறும் காகிதத்தில் உள்ள எண்களைப் பாா்க்காமல், அந்த முழு மனிதரையும், அவரிடம் உள்ள ஆற்றலையும் பாா்த்து வேலைவாய்ப்புகளையும், தகுதிகளையும் வழங்க வேண்டும். இல்லையென்றால், மதிப்பெண் மாயையில் சிக்கி, நாட்டின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்கக் கூடிய பல திறமையானவா்களை நாம் இழக்க நேரிடும்.

கட்டுரையாசிரியா்:

பேராசிரியா்.

சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் விநாயகருக்கு 250 கிலோ மோதகம் படைத்து வழிபாடு

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: 38 போ் கைது

விநாயகா் சதுா்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

குழந்தை வேலப்பா் கோயிலுக்கு லிப்ட் வசதி

கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT