புயல், மழை, வெள்ளம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை மனிதர்கள் எதிர்கொள்ளத்தான் முடியுமே தவிர தவிர்க்க இயலாது. ஆனால், சற்று முனைப்போடும் விழிப்புணர்வோடும் செயல்பட்டால் சாலை விபத்துகள், ரயில் விபத்துகள் அதிலும் குறிப்பாக தீ விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்பது மட்டுமல்லாது, பெரும் பொருள் சேதங்களையும் உயிர்ச் சேதங்களையும் தவிர்க்க முடியும்.
கடந்த மே 18-ஆம் தேதி தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் சார்மினார் அருகே உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் குழந்தைகள் என்பது வேதனை அளிக்கிறது. தீ விபத்துக்குக் காரணம் மின் கசிவு என தெலங்கானா மாநில தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையும், அதையொட்டிய பரபரப்பும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றதால், தேசிய அளவில் ஹைதராபாத் தீ விபத்து விவாதப் பொருளாகாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை.
தீ விபத்து ஏற்பட்ட 'குல்சார் ஹவுஸ்' குறுகலான நுழைவு வாயில் கொண்ட மிகவும் பழைமையான கட்டடம். இரண்டு கடைகள், ஒரு குடியிருப்பு வளாகத்துடன் மூன்று தளங்கள் கொண்ட அக்கட்டடத்தின் நுழைவு வாயில் குறுகலானது என்பது ஒருபுறமிருக்கட்டும், அதன் முதல், இரண்டாம் தளங்களுக்குச் செல்லும் பாதையும் போதிய அளவில் விசாலமானதாக இல்லாததால் தீயை விரைவாகக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையும், காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சையும் வழங்க மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டு வழக்கம்போல தங்களின் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தொடர்கதையாகும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கான செயல்முறைகள் முழுமையாக எப்போது நடைமுறைக்கு வரும் என்கிற கேள்விக்கான விடை, இன்று நேற்றல்ல, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே காணப்படவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
1944 - மகாராஷ்டிர மாநிலம் அன்றைய பம்பாய் துறைமுக தீ விபத்து (66 பேர்), 1979 - தூத்துக்குடி லட்சுமி திரையரங்க தீ விபத்து (73), 1981 குஜராத் மாநிலம் நீலகண்ட மஹாதேவ் கோயில் தீ விபத்து (49), 1985 - மத்திய பிரதேசத்தில் ரயில் தீ விபத்து (50), 1995-ஹரியாணா மாநிலம் டப்வாலி தீ விபத்து (540), 2004 - கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து (94), 2011- மேற்கு வங்கத்தில் அம்ரி மருத்துவமனை தீ விபத்து (90), 2016-கொல்லம் கோயில் தீ விபத்து (108), 2022 - தில்லி முண்ட்கா தீ விபத்து என இந்தியா முழுவதும் பரவலாக பல்வேறு மாநிலங்களில் பல்வேறு காலகட்டங்களில் தீ விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது ஹைதராபாத் தீ விபத்தும் இணைந்திருக்கிறது அவ்வளவே.
1871அமெரிக்காவின் இல்லினாய்ஸில் ஏற்பட்ட தீ விபத்து (300), 1911 நியூயார்க் மன்ஹாட்டன் தொழிற்சாலை தீ விபத்து (146), 1993 - சீனாவின் சென்ஷன் நகரத்தில் கட்டட தீ விபத்து (100), 2010 மெக்ஸிகோ வளைகுடா தீ விபத்து (11) என உலகளாவிய அளவில் நினைவுகூரத்தக்க தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.
இந்தியா சுதந்திரம் அடைந்ததுமுதல் இப்போது வரை தீ விபத்துகளை எதிர்கொள்வதில் மத்திய-மாநில அரசுகள் திறம்படச் செயல்படவில்லை என்றுதான் கருதத் தோன்றுகிறது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் 2024 தரவுகளின்படி, இந்தியாவில் நாள்தோறும் சுமார் 60 பேரும், ஆண்டுதோறும் சுமார் 25,000 பேரும் தீ விபத்து மற்றும் அதுதொடர்பான விபத்துகளில் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் மனித உயிர்கள் எந்த அளவுக்கு மலினமாகிவிட்டன என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
முறையாக அப்புறப்படுத்தப்படாத குப்பைக் கூளங்கள், மின் கசிவு, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், எண்ணெய்க் கசிவுகள், சமையல் எரிவாயு, மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு உள்ளிட்டவையே பெரும்பாலான தீ விபத்துகளுக்கு காரணிகளாக இருக்கின்றன.
வணிக வளாகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மருத்துவமனைகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தீ தடுப்பு ஏற்பாடுகள் முறையாக ஏற்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்றும், அவை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் ஒவ்வொரு தீ விபத்துகளின்போதும் நீதிமன்றங்கள் கடுமையாக அறிவுறுத்துகின்றன. ஆனால், அதை முறையாகப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கை என்னவென்று சொல்வது?
தீயணைப்புத் துறையை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துதல், தீயணைப்பு வீரர்களுக்கு நவீன உத்திசார் பயிற்சி அளித்தல், பள்ளி-கல்லூரி அளவில் மாணவர்களுக்கு தீ விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்கள் மத்தியில் அவ்வப்போது கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக போதிய கவனம் ஏற்படுத்துவதன் மூலம் தீ விபத்துகள் நிகழாமல் காத்துக்கொள்வதோடு, தீ விபத்துகளின்போது ஏற்படும் பொருள், உயிர்ச் சேதங்களை பெருமளவு குறைக்க முடியும்.
என்னதான் முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு, நவீன தீ தடுப்பு உபகரணங்கள் என முனைப்புடன் இருந்தாலும், கட்டட உரிமையாளர்கள், விதிமீறல்களை அலட்சியப்போக்குடன் அணுகும் அரசு உயர் அதிகாரிகளை தீ விபத்துகளுக்கு பொறுப்பேற்கச் செய்வதோடு மட்டுமல்லாது, கைது, இழப்பீடு என அவர்களை கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாதவரை தீ விபத்துகள் தொடரத்தான் செய்யும்.
மனித உயிர்கள் தீக்கிரையாவதைத் தவிர்க்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இயலாததற்கு அதுவொன்றும் கண்ணகி இட்ட சாபமல்ல. கவனக்குறைவுடனும், அலட்சியத்துடனும் செயல்படும் தீத்திறத்தார்களே (அரசு அதிகாரிகள்) காரணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.