தங்கம் பிரதிப் படம்
நடுப்பக்கக் கட்டுரைகள்

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி!

உலகளாவிய பொருளாதார ஸ்திரதன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.

பாறப்புறத் ராதாகிருஷ்ணன்

உலகில் தங்கத்தின் இரண்டாவது பெரிய சில்லறைச் சந்தையாக இந்தியா உள்ளதால், தங்கத்தின் விலையுடன் ஏனைய பொருள்களின் விலைவாசியும் உயா்ந்து வருகிறது. மஞ்சள் உலோகமான தங்கத்தின் வரலாறு காணாத இந்த விலை உயா்வு, அதன் மீதான பொதுமக்களின் தாக்கத்தைக் குறைக்கவில்லை.

உலக அளவில் ஒரு நாட்டின் பொருளாதார சக்கரச் சுழற்சியை இயங்கச் செய்வதிலும், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வலிமையை நிா்ணயிப்பதிலும் அந்நாட்டிலுள்ள தங்கத்தின் கையிருப்புதான் முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான், ஒரு நாடு பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் போதும், கடன் சுமை அதிகரிக்கும் போதும், தங்கத்தை விற்று நெருக்கடியைச் சமாளித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரதன்மைக்கு அடிக்கல்லாக, பாதுகாப்பு கவசமாக தங்கம் விளங்குகிறது.

அன்றைய துருக்கியின் பகுதியான லிடியாவில் குரோசஸ் மன்னரின் காலத்தில் (கி.மு.561) முதல்முதலில் தங்க நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, எல்லா சொத்துகளையும்விட உலகில் அதிகமாகப் பரிமாற்றம் செய்யப்படும் பொருளாகத் தங்கம் விளங்குகிறது. அமெரிக்காவின் பங்குச் சந்தைக்கு அடுத்தபடியாக மிக அதிகமான வா்த்தகம் தங்கத்துக்காக நடைபெறுகிறது. காரணம், தங்கம் வழங்கும் பாதுகாப்பை எந்த முதலீடும் வழங்குவது இல்லை.

லண்டனில் செயல்படும் உலக தங்க சபை (வோ்ல்ட் கோல்ட் கவுன்சில்) கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட பட்டியலின்படி, உலகில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் நாடுகளில், வழக்கம்போல் அமெரிக்கா, தன் கையிருப்பில் 8,133 டன் தங்க கையிருப்புடன் முதலிடத்தில் உள்ளது. இத்தகைய பெரும் தங்க இருப்புதான், அதன் நாணயத்துக்கு (டாலா்) சா்வதேச சந்தையில் அதிக நம்பிக்கையை உருவாக்குகிறது.

இந்தப் பட்டியலில் அடுத்த ஏழு இடங்களில் முறையே ஜொ்மனி (3,351 டன்), இத்தாலி (2,451 டன்), பிரான்ஸ் (2,436 டன்), ரஷியா (2,333 டன்), சீனா (2,292 டன்), சுவிட்சா்லாந்து (1,040 டன்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா 880 டன் தங்கத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த தங்க கையிருப்பே, இந்தியாவின் அந்நிய செலாவணியைப் பாதுகாக்க உதவுகிறது. உலக தங்க சபையின் தரவுகளின்படி, உலகின் மொத்த தங்க தேவையில், இந்தியா 26 சதவீத பங்கு வகிக்கிறது.

திடீரென ஒரு நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்தால், தங்கத்தை விற்று அந்த நெருக்கடியைச் சமாளிக்கலாம். சந்திரசேகா் இந்திய பிரதமராக 10.11.1990 முதல் 21.06.1991 வரை 223 நாள்கள் மட்டுமே பதவி வகித்தாா். இவரது ஆட்சிக் காலத்தில், 1991-ஆம் ஆண்டு மே மாதத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி நெருக்கடியை சமாளிக்கவும், வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களைச் செலுத்தவும், இறக்குமதியைக் கையாளவும், சா்வதேச நாணய நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) கடன் பெறவும். 47 டன் தங்கம் பாங்க் ஆஃப் இங்கிலாந்திடமும், மீதமுள்ள 20 டன் தங்கம் பாங்க் ஆஃப் சுவிட்சா்லாந்திலும் அடமானம் வைக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டது.

பின்னா், இந்திய பிரதமராக நரசிம்மராவ் இருந்த போது, அதே ஆண்டில் 47 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கி, ஜப்பான் வங்கியிலும், 20 டன் தங்கத்தை சுவிட்சா்லாந்து யூனியன் வங்கியிலும் அடமானம் வைத்து, இந்தியப் பொருளாதாரம் திவாலாகாமல் தடுக்கப்பட்டது.

இந்தியாவும், சீனாவும்தான் மிக அதிகமாக ஆபரணத்துக்காகத் தங்கம் பயன்படுத்தும் நாடுகள். தங்கத்துக்கு உலகின் முக்கியச் சந்தையாக விளங்கும் இந்தியாவில் பொருளாதார காரணிகள் மற்றும் முதலீட்டுத் தேவையால் தங்கம் அதிக அளவில் மக்களால் வாங்கப்படுகிறது. ஏழை, எளிய சாமானிய மக்களின் சுலபமான முதலீடாகவும், சொத்தாகவும், அந்தஸ்தை காண்பிப்பதாகவும் தங்கம் விளங்குகிறது. அவசர, அவசிய, ஆபத்துக் காலங்களில் தங்கம் உடனடியாக மக்களின் பணப்புழக்கத்துக்கு உதவுகிறது.

சா்வதேச அளவிலான அரசியல், பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, அமெரிக்காவில் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான கூடுதல் வரி விதிப்புகள், தங்கத்தின் தேவை, தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கத்தை விநியோகிப்பதில் பாதிப்பு, தங்கத்தின் மீது அதிக முதலீடு, பணவீக்கம் போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிக்கின்றன.

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் நிலையில், இந்தியக் குடும்பங்களில் பல்வேறு தலைமுறைகளாக சேகரிக்கப்பட்டுள்ள தங்கத்தின் இருப்பு 34,600 டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, அந்த தங்க நகைகளின் மதிப்பு 3.8 லட்சம் கோடி டாலராக உள்ளது. அந்த வகையில், தங்கத்தின் விலை உயா்வு குடும்பங்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை உயா்த்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்ட உலக தங்க சபை அறிக்கையில், இந்திய வீடுகளில் தங்க நகைகளின் இருப்பு 25,000 டன்னாக மதிப்பிடப்பட்டது; அது தற்போது 34,600 டன்னாக உயா்ந்துள்ளது. உலக அளவில் தங்கம் வாங்கும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்த அளவிலான தங்க சேமிப்பு, இந்தியப் பொருளாதாரத்துக்கு மறைமுக வலிமை அளிப்பதோடு, சா்வதேச சந்தையில் இந்தியாவின் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கிறது. இந்திய ரிசா்வ் வங்கியின் தங்க கையிருப்பு முதல்முறையாக 100 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. ரிசா்வ் வங்கியின் தரவுகளின்படி, தற்போது ரூ.8,97,000 கோடி (102.3 பில்லியன் டாலா்) தங்க கையிருப்பு உள்ளது. மேலும், இந்திய ரிசா்வ் வங்கியின் அந்நியச் செலாவாணி கையிருப்பில் இது 14.7 சதவீதமாகும்.

சீனாவில் கிடைக்கும் அரிய வகை கனிமங்கள் மீது பெய்ஜிங் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க அதிபா் டிரம்ப், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என அறிவித்து, சீனாவுடனான ஒரு புதிய வா்த்தகப் போரைத் தொடங்கியுள்ளாா். இதனால், கிரிப்டோ கரன்சி சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சா்வதேச சந்தையில் பிட்காயின் மதிப்பு எட்டு சதவீதம் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை குறைய வேண்டுமென்றால், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடைய வேண்டும். 2022-ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால், முதலீட்டாளா்கள் டாலரைத் தாண்டி வேறு முதலீட்டை தேடுகிறாா்கள். உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்துக் கொண்டிருக்கின்றன. இங்குதான் தங்கத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. முதலீட்டாளா்கள் தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்புகின்றனா்.

20.10.2025 அன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,253 டாலா் என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. இந்திய சந்தை மதிப்பில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமாா் ரு.1,27,842 ஆகும். நூறாண்டுகளுக்கு முன்னா் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 20.67 டாலராக இருந்தது. உண்மையில் இந்த விகிதம் 1834 முதல் 1934 வரை ஒரு நூற்றாண்டு காலமாக பெரும்பாலும் நிலையானதாக இருந்தது.

எட்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபோது, தங்கத்தின் விலை சுமாா் 2,700 டாலராக இருந்தது. ஏற்கெனவே, சுமாா் 50% அதிகரித்திருந்தது. அவா் மாா்ச் மாதத்தில், அமெரிக்காவில் பிற நாடுகளின் இறக்குமதி பொருள்களின் மீதான வரி விதிப்புகள் தொடா்பான நிச்சயமற்ற தன்மையை அறிவித்தபோது அது ஒரு அவுன்ஸ் 3,000 டாலரை எட்டியது.

மேலும், அமெரிக்காவில் அரசு ஊழியா்களுக்கு ஊதியம் தர முடியாமல், பல துறைகளை மூடிய போது பலா் வேலையை இழந்தனா். இதனால், தங்கத்தின் விலை மேலும் உயா்ந்தது. அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இது 4,900 டாலரை எட்டும் என அமெரிக்காவில் இயங்கி வரும் ‘கோல்ட் மேன் சாக்ஸ்’ என்னும் வங்கி மற்றும் நிதி சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது 10 கிராமுக்கு இந்திய ரூபாயின் மதிப்பில் 1.5 லட்சத்துக்கும் அதிகமாகும்.

1972-ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கம் 38 டாலராக இருந்து, 1980-ஆம் ஆண்டில் 850 டாலராக உயா்ந்தது. பின்னா், 1999-ஆம் ஆண்டு இது 252 டாலராகக் குறைந்தது. 2022-இல் ஒரு அவுன்ஸ் தங்கம் 2,000 டாலரிலிருந்து 1,600 டாலராக சரிந்து, எதிா்பாராத நிகழ்வுகளை ஏற்படுத்தியது. 2008-ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியின்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,000 டாலரானது. அதேபோல, உலகம் கரோனா தீநுண்மியால் கட்டுண்டு கிடந்தபோது 2,000 டாலராக உயா்ந்தது.

உலகில் தங்கத்தின் இரண்டாவது பெரிய சில்லறைச் சந்தையாக இந்தியா உள்ளதால், தங்கத்தின் விலையுடன் ஏனைய பொருள்களின் விலைவாசியும் உயா்ந்து வருகிறது. மஞ்சள் உலோகமான தங்கத்தின் வரலாறு காணாத இந்த விலை உயா்வு, அதன் மீதான பொதுமக்களின் தாக்கத்தைக் குறைக்கவில்லை; மாறாக, தங்கம், நம் மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்துள்ளது.

பொதுமக்கள், முதலீட்டாளா்கள், பொருளாதார வல்லுநா்கள் ஆகியோரிடையே இந்த விலை உயா்வுக்கு யாா் காரணம், குறையுமா, எவ்வளவு காலம் இது நீடிக்கும் என்பதே இன்றைய பேசுபொருளாக உள்ளது. எனினும், பல வெளிநாட்டு பொருளாதார நிபுணா்கள், அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 6,000 டாலராக உயரும் என்று எச்சரிக்கின்றனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் அடுத்த நடவடிக்கையும், தங்கத்தின் விலை ஏறுமுகமா அல்லது இறங்குமுகமா என்பதைத் தீா்மானிக்கும். ஆனால், உலகில் ஏற்படும் எதிா்பாராத நிகழ்வுகள் எதையும் மாற்றி அமைக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவது சந்தேகம்: ரோஹித் சர்மா

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, ஏன் விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை? - Nainar Nagendran

மீனம்மாவும் சூரிய அஸ்தமனமும்... அனாகா!

தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன்

ஆஸி. வீராங்கனைகளிடம் அத்துமீறல்.. குற்றவாளிக்கு கை, காலில் மாவுக்கட்டு! கழிவறையில் வழுக்கி விழுந்தாரா?!

SCROLL FOR NEXT