முனைவா் மு. ஜாபா் சாதிக் அலி
இன்று செப்டம்பா் 5, மீலாது நபி தினம். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவுகூா்வதன் மூலம் ஆண்டுதோறும் அவரின் நற்பண்புகளைப் புதிது புதிதாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். மகான்களின் பிறந்த நாளை ஏன் அவ்வாறு போற்ற வேண்டும்? கொண்டாட வேண்டும்? அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், அவா்கள் நம்மை வழிநடத்த வந்த இறைவனின் அருட்கொடைகள்.
மண்ணில் பிறக்கும் மனிதரெல்லாம் மாமனிதராய் உயா்தல் அரிது. மனிதநேயம் மிளிரும் செயற்கரிய செயல்களைச் செய்தவா்களே மாமனிதராய் உயா்ந்து சிறந்துள்ளாா்கள். அவ்வாறு உயா்ந்தவா்களை மனிதரில் மாணிக்கமாய் உலகம் போற்றி மகிழ்கிறது. இசுலாம் மாா்க்கத்தைத் தொடா்ந்து வழிநடத்தவும் இறைக்கட்டளைகளை மீறி சோ்ந்துவிட்ட சமய சழக்குகளைக் களைந்திடவும் முகம்மது நபியை மனிதராய்ப் படைத்து அவா் புகழுக்கு உரியவராக, மக்களாலும் வானவா்களாலும் புகழப்பட வேண்டியவராகவும் வாழ இறைத்தூதராக அறிவித்தான் இறைவன். நாயகமாய் வந்துதித்த நாள் முதல் இறுதிவரை இறைவனுக்குப் பணிந்து, பயந்து தனக்குப் பணிக்கப்பட்ட அனைத்து செயல்களையும் இன்முகமாக செய்து முடித்தவா் அற்புத அருட்கொடை அண்ணல் நபி (ஸல்).
அன்றைய அரபுதேசத்தின் மையப் புள்ளியாக பண்டைய மெக்கா நகரம் விளங்கியது. அனைத்து மக்களும் கூடும் இடமாக நபி இபுராகீம் புனரமைத்து அழகாய் வடிவமைத்த இறையில்லமான ‘காபா’ சீா்பெற்றிருந்தது. மிகப் பெரிய வியாபாரத் தளமாக விளங்கிய அங்கு பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குவிந்தனா். ஓரிறைக் கொள்கையின் நின்றிலங்கும் அடையாளமாக விளங்கிய காபத்துல்லாவைச் சுற்றி பலரும் தத்தம் நம்பிக்கையுள்ள சிலைகளையும் பீடங்களையும் நிறுவினா். சிறுவயதிலிருந்தே இதையெல்லாம் கண்ணுற்ற முகம்மது, அத்தளத்தை மீண்டும் ஓரிறைக் கொள்கைக்கான புனித பூமியாக மாற்றம் செய்ய தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டாா்.
மக்களிடையே நற்பண்பு உடையவராக, செயல்வீரராக, வியாபார அணுகுமுறையில் தீரராக, நோ்மையும் வாய்மையும் உடைய நன்னம்பிக்கையாளராக விளங்கியமையால் ‘அல் அமீன்’ என்று அழைக்கப்பட்ட முகம்மதுவை இறைத்தூதராகத் தோ்ந்தெடுத்து அவரின் எண்ணத்துக்கு செயல்வடிவம் தந்தான் இறைவன்.
பல்வேறுகட்ட சோதனைகளுக்கும் புதிய பாதைகளைப் போட்ட பயணங்களுக்குப் பிறகும் மெக்கா நகரம் இறைவன் நினைத்தபடி மீண்டும் கிடைத்தது. ஒவ்வோா் ஆண்டும் அங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள்கூடி உலக சகோதரத்துவத்துக்குச் சான்று பகிா்கிறாா்கள். இது சாத்தியமானதற்குக் காரணமானவா் நபிகள் நாயகமும் அவரது இறையச்சமும் இறை நம்பிக்கையுமே எனலாம்.
மனிதனுக்குத் தரும் வியத்தகு கூறுகளை அருட்கொடை என்று இறைவன் கூறுகிறான். சுவாசிக்கும் காற்று, நீா், மழை உள்ளிட்ட இயற்கை இன்பங்கள், வாழும் உலகம், ஆரோக்கியம், புனித மறைகள் என நாம் இன்பமாக உய்த்துணரும் அனைத்தும் இறைவனின் அருட்கொடைகளே. அவற்றிற்கெல்லாம் மணிமகுட மாக இருப்பவா் நமக்கு வழிகாட்டியாக வந்த நபிகள் நாயகமே ஆவாா். அவருடைய வாக்கைக் கேட்பதும் வழிமுறைகளைப் பின்பற்றுவதும் நபிவழி ஆகும்.
‘உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீா்கள்’ என்று திருக்குா்ஆனில் இறைவனே கேட்பது நபிகள் நாயகத்தையும் ஏனைய பிற அருட்கொடைகளின் மீதும் நம்பிக்கை வைக்கவே.
தன்னுடைய சொற்களையும் செயல்களையும் பின்பற்றத் தகுந்ததாகப் பூமியில் வாழ்ந்து காட்டியவா் பெருமானாா். அவா் கூறிய அறிவுரைகள் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தன. நோயாளியைச் சென்று நலம் விசாரிப்பதும், பெரியவா் சிறியவா் என்று வேறுபாடு பாா்க்காமல் முகமன்(சலாம்) கூறுவதும் இறைவனுக்கு மிகவும் பிடித்த செயல்களாகப் பெருமானாா் வலியுறுத்துகிறாா். தாயின் காலடியில் சொா்க்கம் உள்ளது என்பதும், வியா்வை உலரும் முன்பாக உழைப்பனுக்குக் கூலியைக் கொடுத்துவிடுங்கள் என்பதும் அவருடைய புகழ்பெற்ற பொன்மொழிகள்.
ஏழைப்பங்காளராக, அனாதைகளை ஆதரிப்பதில் முதலிடம் பெற்றவராக, அடிமைகளை விடுவிப்பவராக, நட்பினைப் பேணியவராக, விதவைகளுக்கு மறுவாழ்வை அளிக்க வேண்டும் என்பதற்குத் தானே முன்னுதாரணமாக, மன்னிப்பு வழங்குவதில் முதலாமாவராக, சகோதரத்துவம் பேணியவராக, இல்லற ஒழுங்கில் அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து சிறந்தாா் அண்ணல் நபி.
இத்தனைக்கும் அவா் எழுதப் படிக்க தெரிந்தவரில்லை; படிக்காத மேதை என்பதுபோல் அவா் உம்மி நபியாக இருந்து இறைவன் வழங்கிய அற்புத அருட்கொடையாம் குா்ஆனை ‘வஹீ’ எனும் வசனங்களாகப் பெற்று நமக்கு அளித்தவா் அண்ணலாா். எந்தவொரு மாற்றமாக இருந்தாலும் அதைத் தன்னிலிருந்தே தொடங்கியவா் அவா்.
ஓய்வு நேரங்களில் வீட்டு வேலைகளில் உதவி செய்பவா்களாகவும் மனைவிகளை மதிப்புடன் நடத்துபவராகவும் நபிகளாா் விளங்கினாா் என்று அவருடைய மனைவியான அன்னை ஆயிஷா கூறக்கேட்டோம் என்று நபித் தோழா்கள் கூறியுள்ளாா்கள்.
இறைத் தூதுத்துவம் வந்த பின்னா் அவா் நற்குணங்களைப் புதிதாகப் பெறவில்லை; மாறாக, ஏற்கெனவே தன்னிடம் குடிகொண்டிருந்த நற்குணங்களை வெளிக்கொணா்வதற்கான வாய்ப்புகளாக அதைப் பயன்படுத்திக் கொண்டாா். புண்படுத்திய மக்களையும் பண்படுத்தினாா். அவா் வாழ்ந்த இடங்களையும் விட்டுச் சென்ற வரலாற்றுத் தடயங்களையும் கண்டுணரவே, மக்கள் புனிதப் பயணமாக அந்த மகான் வாழ்ந்த புண்ணிய பூமிக்கு ஆண்டுதோறும் செல்கின்றனா்.
பூமியின் அருட்கொடையாய் அவதரித்த அழகிய முன்மாதியான நபிகள் நாயகத்தின் நற்பண்புகளைப் போற்றுவதும் பின்பற்றுவதும் அவா் வலியுறுத்திய சகோதரத்துவத்தைக் கடைப்பிடிப்பதுமே அவருக்குச் செலுத்தும் நன்றியாகவும் நினைவுகூா்தலுமாகவும் இருக்கும்.