பாரதியார்  
நடுப்பக்கக் கட்டுரைகள்

பாரதி- மண் விடுதலையும், பெண் விடுதலையும்!

மானுடன் தன்னைக் கட்டிய தளையெலாம் சிதறுக என முழங்கியவர், வாழ்க்கையில் இயங்கியவர் மகாகவி பாரதி. வையத்தைப் பாலித்திட வேண்டும் என்பது பாரதியின் நோக்கு.

தினமணி செய்திச் சேவை

பேராசிரியர் ய. மணிகண்டன்

மானுடன் தன்னைக் கட்டிய தளையெலாம் சிதறுக என முழங்கியவர், வாழ்க்கையில் இயங்கியவர் மகாகவி பாரதி. வையத்தைப் பாலித்திட வேண்டும் என்பது பாரதியின் நோக்கு.

மானுடத்தின் தளைகளைத் தமிழ் மண்ணில் சிதறடிக்கத் தோன்றிய மகாகவி, மானுடத்தின் சரிபாதியான பெண்ணினத்தைப் பிணித்திருந்த தளைகளையெல்லாம் எழுத்தாலும் வாழ்க்கைச் செயல்பாடுகளாலும் தகர்த்துப் பெண் விடுதலையை முற்றுமுழுதாக முன்னெடுத்த முன்னோடியும் ஆவார்.

பாரதியின் காலம் பாலிய விவாகம், விதவைக் கொடுமை, பெண் கல்விக் குறைபாடு, வரதட்சிணைக் கொடுமை, பெண்களுக்குச் சொத்துரிமையின்மை, தேவதாசி முறை என்றெல்லாம் எண்ணற்ற துயரங்கள் பெண்குலத்தைச் சூழ்ந்திருந்த கொடுங்காலம். ஆற்றல்வாய்ந்த கவிஞனாய், கூரிய பார்வைகொண்ட இதழாளனாய், இந்திய விடுதலைப் போராட்டத்துக்குப் பங்களித்துப் புதிய பாரதத்துக்குப் பாதை சமைத்த விடுதலை இயக்கத் தளகர்த்தனாய் விளங்கிய பாரதி தன் கவிதைகளால், இதழியல் எழுத்துகளால், கதைகளால், கட்டுரைகளால் தமிழ் மண்ணில் பெண்ணுரிமைக்குப் பாடுபட்டார்.

"கனவு' என்னும் பெயரில் தன் சுயசரிதையை இலக்கியமாகப் படைத்த பாரதி தனக்குச் சிறு பருவத்திலேயே திருமணம் நிகழ்ந்ததை எடுத்துரைக்கும் இடத்தில், குழந்தை மணத்தை புரிவிப்போரை பாதகக் கொடும்பாதகப் பாதகர் எனச் செற்றத்தின் உச்சத்தில் நின்று சீறிச் சாடியிருக்கின்றார்.

மாதர்க்குண்டு சுதந்திரம், ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம், நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகள், திமிர்ந்த ஞானச் செறுக்கு, செம்மை மாதர் என்றெல்லாம் தமிழின் வரலாற்றில் புதுமைப் பெண்ணைப் போற்றிய முதற்குரல் பாரதியின் குரல்.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், எனப் பெண் கல்விக்கும் பெண் தலைமைக்கும் பெண்ணே பாடுவது போலத் தன் மனைவி செல்லம்மாவைப் பாடவைத்தவர் பாரதி.

கணவன் இறந்ததும் கணவனின் சிதையோடு மனைவியை உயிரோடு ஏற்றிச் சாகடிக்கும் உடன்கட்டை ஏறுதல் என்னும் கொடிய வழக்கத்தைச் சாடுவதாகப் பாரதியின் கைவண்ணத்தில் தோன்றிய "துளஸீ பாயி' என்னும் முதல் சிறுகதை அமைந்தது.

வங்காளத்திலே சிநேகலதா என்னும் பெண் வரதட்சிணைக் கொடுமையால் தீக்குளித்த நிகழ்வை அறிந்த பாரதி, தமிழ்நாட்டிலும் இந்த நிலை இருப்பதை இணைத்துப் பார்த்து எழுதிய நெஞ்சை உருக்கும் கட்டுரையில் வரதட்சிணைக் கொடுமைக்கு எதிராகப் பெருங்குரல் எழுப்பியிருக்கின்றார். "எதிர்ஜாமின்' என்னும் கட்டுரையிலும் வரதட்சிணைக் கொடுமைக்கு எதிராகத் தீர்க்கமான எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கைம்பெண்களின் துயர நிலை போக்கவும் விதவை மறுமணத்திற்கு ஆதரவாகவும் முன்னோடியாக வெளிப்பட்ட பாரதியின் எண்ணங்களை அவர் படைத்த "சந்திரிகையின் கதை' என்னும் புதினம் ஆழமாகக் கொண்டுள்ளது. புதினத்தின் கதாபாத்திரமான விசாலாட்சி "சுதேசமித்திரன்' ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயரைச் சந்திக்கிறாள். பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையாகிவிட்ட தனது கதையைச் சொல்கிறாள். அவளை அவரிடம் என்னைத் தக்க கணவன் ஒருவருக்கு வாழ்க்கைப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவைக்கிறார் பாரதி.

கலப்பு மணத்துக்குப் பாரதி காட்டிய ஆதரவு "காந்தாமணி' என்னும் சிறுகதையாக அவரது படைப்புலகத்தில் முகங்காட்டுகிறது.

பெண்களின் மேன்மைக்குப் பாடுபடுவதற்காகவே 1905 ஆகஸ்டு மாதம் தோன்றிய "சக்ரவர்த்தினி' என்னும் இதழின் ஆசிரியராகப் பாரதி விளங்கினார்.

அன்றைய சமூகத்தில் பெண்மையைச் சிறுமைப்படுத்திய அனைத்துக் கொடுமைகளுக்கு எதிராகவும் கனன்ற எழுத்தும் வாழ்க்கையும் பாரதியின் எழுத்தும் வாழ்க்கையுமாகும்.

இவற்றோடு பெண்குலத்தின் ஒரு பகுதியையே மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், மனிதர்கள் சிறுமைப்படுத்திய ஒரு பெருங்கொடுமை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிலவிவந்து பாரதியின் காலத்தில் உச்சம் கண்டிருந்தது. இளம்பெண்களைக் கோயில்களோடும் கடவுளோடும் பிணைத்துக் கடவுளின் பெயரால் பொட்டுக்கட்டி, தேவதாசிகள், தேவரடியார் என்னும் பெயர்களால் அழைத்து, எண்ணற்ற பெண்களைச் சமூகத்தில் மேலாதிக்கம் பெற்றிருந்த, மனிதர்கள் சீரழித்த கொடுமை அது. நடனக்கலை, இசைக்கலை முதலிய கலைவல்லாராகவும் திகழ்ந்த தேவதாசிப் பெண்களின் வாழ்க்கை கொடிய துயர வாழ்க்கையாக மாறிப் போயிருந்தது.

பெண்மையைச் சிறுமைப்படுத்தும் இப்பெருங்கொடுமைக்கு எதிரான போராட்ட வரலாற்றில் இந்திய அளவில் மகாத்மா காந்தி, தமிழக அளவில் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முதலிய ஆளுமைகளின் வருகைக்கும், செயல்பாடுகளுக்கும் முன்னதாகவே வரலாற்றில் ஒரு பேராளுமை இதற்கெதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார், செயல்பட்டிருக்கின்றார் என்னும் உண்மை இதுவரை உரிய கவனத்தைப் பெறவில்லை. அந்தப் பேராளுமை வேறு யாருமில்லை. மகாகவி பாரதியார்தான்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் - தமிழ் இதழியல் வரலாற்றில் பாரதி ஆசிரியராக விளங்கிய "இந்தியா' இதழின் இடம் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக எழுத்துக் கிளர்ச்சியை நடத்திய முதன்மையான இதழ் தமிழில் "இந்தியா'வேயாகும். ஒருகட்டத்தில் "இந்தியா' இதழ் பறிமுதல் செய்யப்பட்டதும் "இந்தியா' இதழின் பதிவு செய்யப்பட்டிருந்த ஆசிரியர் சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டதும் பலரும் அறிந்த வரலாறாகும்.

இந்த நெருக்கடியையடுத்தே பாரதி புதுவைக்குப் புலம்பெயர்ந்தார். "இந்தியா' இதழ் மீண்டும் புதுவையிலிருந்து வெளிவரத் தொடங்கியது. வெள்ளையர் ஆட்சியின் தொல்லைகளால் "இந்தியா' புதுவையிலிருந்தும் வெளிவர முடியாமல் நின்றுபோனது. இத்தகைய பெருமை வாய்ந்ததும், ஆங்கிலேய அரசால் வேட்டையாடப்பட்டதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதுமாகிய "இந்தியா' இதழ் தமிழ்நாடு தாண்டித் தமிழர்கள் வசிக்கும் பிற நாடுகளிலும் வாங்கிப் படிக்கப்பட்டது. முதற்கட்ட இந்திய விடுலைப் போராட்டத்தைத் தமிழ்மண்ணில் வளர்த்தெடுத்ததில் "இந்தியா' இதழின் இடம் பெரிதாகும்.

1906-ஆம் ஆண்டு சூன் மாதம் 23-ஆம் தேதி வெளிவந்த "இந்தியா' இதழில் இதுவரை பாரதியியலில் இடம்பெறாத - கவனம் பெறாத பாரதியின் கருத்துக் கனல் கொப்பளிக்கும் எழுத்தோவியம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

"இந்தியா' இதழ்களில் நமக்குக் கிடைக்கும் முதல் இதழ் 23.6.1906-இல் வெளிவந்ததாகும். இது "இந்தியா'வின் ஏழாவது இதழாகும். இந்த இதழில்தான் நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் கொடிய சமூக வழக்கமான "பொட்டுக்கட்டுதல்' என்னும் வழக்கத்தைக் கண்டித்துப் பாரதி ஒரு கட்டுரையைப் படைத்துள்ளார். அந்தக் கட்டுரையின் தலைப்பு "டெடிகேஷன் ஆஃப் கேர்ள்ஸ் டு த காட்' என ஆங்கிலத்திலும் "தாசிகளுக்குப் பொட்டுக் கட்டுதல்' எனத் தமிழிலும் அமைந்திருந்தது.

இந்திய அளவில் இந்தக் கொடிய வழக்கம் நிலவி வந்த சூழ்நிலையில் பம்பாய் மாகாணப் பிரமுகர்கள் பலர் கையொப்பமிட்டு இந்த வழக்கத்தை நிறுத்துவதற்காக அரசாங்கத்திற்கு ஒரு விண்ணப்பத்தை அளித்திருக்கின்றனர். இதனைக் குறித்த செய்தியை அறிந்த பாரதி இந்தக் கொடிய வழக்கத்தைக் கண்டித்து "இந்தியா' இதழில் எழுதியிருக்கின்றார்.

அதில், மஹா புண்யதேசமாகிய பாரதநாடு இப்போது மிகவும் இழிந்த நிலைமைக்கு வந்துவிட்டது. பீமனும் அர்ச்சுனனும் ராமனும் பிறந்து வாழ்ந்த இந்நாட்டிலே அடிமைச்சனங்கள் வாழ்கிறார்கள். இதற்கெல்லாம் காரணங்களில்லாமல் போகவில்லை. உண்மையான தெய்வ பக்தியும், ஆத்மபரிசுத்தமும் போய் இந்நாட்டிலே அனேக தீமையான பொய்யாசாரங்கள் வந்து குடிகொண்ட படியாலேயே நாம் நாசநிலை யடைந்துவிட்டோம். இனி மறுபடியும், புகழ்பெற வேண்டுமானால், இப்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் விஷ ஆசாரங்களையெல்லாம் அறக்களைந்து விடவேண்டும். இந்த விஷ ஆசாரங்களனைத்திலும் மிகக் கொடிதாகக் கருதுதற்குரியது கோயிலுக்குப் பொட்டுக் கட்டுதல் என்னும் வழக்கமேயாகும் என இந்த வழக்கத்துக்கு எதிராகப் போர் முரசு கொட்டியுள்ளார்.

இந்தக் கொடிய வழக்கத்தை ஒழித்தேயாக வேண்டும் எனத் தீவிரமாக எழுதிய பாரதி, பம்பாய் மாகாணத்துப் பிரமுகர்களைப் போல ஆங்கிலேய அரசாங்கத்துக்கு விண்ணப்பித்து இந்த வழக்கத்தை நீக்க முயலாமல் நாமே அரசாங்கத் துணையின்றி ஒழிக்க வேண்டும் எனக் கருத்துரைத்துள்ளார்.

பம்பாய் மாகாணத்திலே கோயிலுக்குக் கட்டியிருக்கும் பெண்களுக்கு முரலிகள் என்று பெயர். இந்த விண்ணப்பத்திலே வேசைத்தொழில் பகிரங்கமாகப் புரியும் நீச ஸ்திரீகளை சமய சம்பந்தமான ஓர் பதவி கொடுத்துப் பராமரிப்பது சட்டவிரோதமென்று கவர்ன்மெண்டார் ஏற்பாடு செய்துவிடவேண்டுமென்று பிரார்த்தனை செய்யப்படுகின்றது.

இந்தச் சீர்திருத்தம் கவர்ன்மெண்டாரால் செய்யப்படுமென்று நமக்குத் தோன்றவில்லை. செய்வது நியாயமுமாக மாட்டாது. அன்னியரான கவர்ன்மெண்டாரை நமது ஜனாசாரங்களிலும், சமயாசாரங்களிலும் தலையிட விட்டுவிட்டோமானால் அவர்கள் எந்த இடத்திலே போய் நிற்பார்களென்று வரையறுத்துக் கூற முடியாது என்பது பாரதியின் கருத்தாகும்.

சிலருக்குப் பாரதியின் இந்தக் கருத்தில் மாறுபாடு இருக்கலாம். ஆனால் 1926-ஆம் ஆண்டில் சென்னை மாகாண சட்டப்பேரவையின் முதல் பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலம்முதல் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்ட மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, ஆங்கிலேய அரசு, சட்டசபை உறுப்பினர்கள் முதலியோரிடமிருந்து ஆதரவையும் எதிர்ப்பையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு 1929-இல் தேவதாசிமுறை ஒழிப்புக்குச் சட்டமன்றத் தீர்மானம் இயற்றச்செய்து வரலாற்றுச் சாதனை புரிந்தபோதும், அச்சட்டம் 1947-ஆம் ஆண்டுதான் முழுமைபெற்றது என்பதைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

மேலும், ஏறத்தாழப் பாரதியின் கருத்தை ஒத்த நிலையில், தாம் எதிர்கொண்ட நெருக்கடிகளின் விளைவாக, ""முழுமையான பொறுப்புணர்வும் தேசிய உணர்வும் உள்ள ஒரு அரசுதான் தீர்வு காணப்படாத நமது சமுதாயப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காண முடியும் என்பதை உணர்ந்துகொண்டோம்'' எனத் தமது சுயசரிதையில் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி குறிப்பிட்டிருப்பது பாரதியின் பார்வையிலுள்ள தெளிவை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

மேலும், நமது வீட்டு உபத்திரவங்களை யெல்லாம் கவர்ன்மெண்டார் மூலமாகவே தீர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமில்லை. வேசைகளை ஆலயத்தில் அனுமதி செய்யாதபடி நாமே செய்துகொள்ளலாம்;தர்மகர்த்தாக்கள், அர்ச்சகர்கள் என்பவர்களுக்கு நாமே இலேசாக புத்தி வருத்திவிடலாம். அங்ஙனம் செய்வதற்குரிய உபாயங்கள் இன்னவென்பதை விவரிப்பதற்கு இது இடமில்லை. அது பெரும்பாலும், அந்த அந்த இடத்து சவுகரியங்களையும், ஜனங்களின் மனோபாவங்களையும் பொருத்ததாக இருக்கின்றது.

ஆனால், தேச úக்ஷமாபிமானிகளாகிய அனைவரும் ஒரே சித்தத்துடன் ஹிந்து ஆலயங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பெரிய அவமானத்தை வேரறுக்க முயலவேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தச் சீரழிந்த நிலையில் தொடர்புடைய பிரிவினராகத் தர்மகர்த்தாக்களும் அர்ச்சகர்களும் இருப்பதைப் பாரதி சற்றும் தயக்கமின்றி வெளிப்படையாக எடுத்துக்காட்டியிருக்கின்றார்.

இந்த இடத்தில் பாரதியியல் அன்பர்கள் சிலருக்கு ஓர் ஐயம் எழக்கூடும். "இந்தியா' இதழ் 23.6.1906ஆம் தேதி வெளிவந்தபோது பாரதி அதன் ஆசிரியராக இருந்தாரா என்பதே அது. பாரதி ஆய்வாளர் சீனி. விசுவநாதன் இந்த இதழுக்கு அடுத்த இதழில் வெளிவந்த படைப்புகளிலிருந்தே பாரதி எழுதியதாகக் கொண்டிருக்கின்றார். தன்னளவில் இவ்வாறு கொண்டதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால், இளசை. மணியன் கிடைக்கும் 23.6.1906 முதல் பாரதி எழுதியதாகக் கொண்டுள்ளார். ஆயினும் இளசை மணியனுக்கு அவ்விதழின் சில பக்கங்கள் கிடைக்கவில்லை. இப்போது என்னால் அவை கல்கத்தா தேசிய நூலகத்திலிருந்து ஏறத்தாழ இரு வாரங்கள் அரும்பாடுபட்டுத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் நம்பகமான சமகால ஆதாரங்களால் "இந்தியா'வின் முதல் இதழிலிருந்தே பாரதி ஆசிரியர் நிலையில் செயல்பட்டுப் பெயர் இடம்பெறாத படைப்புகளையெல்லாம் எழுதியிருக்கின்றார் என்பது உறுதியாகியுள்ளது. எனவே ஐயத்திற்கு இடமின்றி இந்த இதழ் வெளிவந்தபோது பாரதியே ஆசிரியர், பாரதி எழுதியதே இக்கட்டுரை என்பது உறுதி.

தேவதாசி முறை, இளம்பெண்களுக்குப் பொட்டுக்கட்டுதல் என்னும் கொடிய வழக்கத்துக்கு எதிராகப் பாரதி தனது சக்திவாய்ந்த "இந்தியா' இதழால் மட்டுமல்லாமல், வாழ்வின் நேரடிச் செயல்பாட்டாலும் குரல் கொடுத்திருக்கின்றார்; நடைமுறை மாற்றத்தைப் புரிந்திருக்கின்றார்.

ஆம். எட்டயபுரத்தில் பாரதியின் காலத்தில் வள்ளிக்கண்ணம்மா என்னும் பெயருடைய தேவதாசி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை நேரில் சந்தித்த பாரதி பொட்டுக் கட்டியதைத் தூக்கியெறிந்துவிட்டு, ஒரு நல்ல மனிதனைக் கணவனாகத் தேர்ந்தெடுத்து வாழுமாறு வழிகாட்டியிருக்கின்றார்; அதனை ஏற்று அவரும் குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார்.

இதனைக் கள ஆய்வால் கண்டறிந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் "இந்தியச் சமுதாய வரலாற்றில் பெண்மை' என்னும் தனது ஆய்வு நூலில், எட்டயபுரத்து வள்ளிக்கண்ணம்மாள், 1930களில் முத்துலட்சுமி அம்மையும், மூவலூர் அம்மையும் செயல்படு முன்பே, பாரதியார் அறிவுரையின்படி பொட்டறுத்துத் திருமணம் செய்துகொண்டாராம். ஆனால் மரபுப் பிடிகள் பதித்த குற்ற உணர்வுகள் கடைசி வரையிலும் அப்பெருமாட்டியை விடவில்லை எனக் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்.

மேலும் பாரதி வாழ்க்கையை உண்மை வரலாற்றுப் புதினமாகப் படைத்த தனது "பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' என்னும் நூலில், ""சாமி கட்டின பொட்டுன்னு ஒரு கட்டு இருக்கே, அத்த உடச்சிட்டு நீ ஒருத்தனைக் கைப்பிடித்து வாழணும் தங்கச்சி!... சாமி, எந்தத் தெய்வமும் பெண்ணை இப்படிச் சீர்குலைக்கப் பலருக்கு உடமைப் பொருளாக்கும் செயலை அநுமதிக்காது. நீ... அதைத் தகர்த்தெறி''! எனப் பாரதி அந்தப் பெண்ணிடம் பேசுவதாகவும் படைத்திருக்கின்றார்.

இந்த உண்மை நிகழ்வை அடிநாதமாகக் கொண்டு "மானுடத்தின் மகரந்தங்கள்' என்னும் புதினத்தையும் படைத்திருக்கின்றார். பாரதி ஆய்வாளர்கள் வேறு சிலரும் பாரதி வாழ்வில் நடந்த இந்த நிகழ்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளனர். எழுத்தால் 1906-ஆம் ஆண்டிலும், வாழ்க்கை நிகழ்வால் 1919-20-ஆம் ஆண்டுகளிலும் பாரதி இந்தக் கொடிய வழக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டிருக்கின்றார்.

தேவதாசி முறையை ஒழிக்கும் போராட்ட வரலாற்றில் பரவலாக அறியப்பட்ட மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் ஆகியோரோடு பரவலாக அறியப்படாத சேலம் விஜயராகவாச்சாரியார், ஏமி கார்மைக்கேல் அம்மையார் முதலிய பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் சின்னஞ் சிறிய, பெரிய நிலைகளில் பங்களித்திருக்கின்றனர்.

இந்த வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசாலும், சுதேசிய இயக்க ஈடுபாடு கொண்ட மக்களாலும் கூர்ந்து கவனிக்கப்பட்ட, பரவலாக வாசிக்கப்பட்ட "இந்தியா' இதழின் வாயிலாக வலிமையான நிலையில் மகாகவி பாரதி குரல் கொடுத்திருக்கின்றார் என்பது பாரதியின் முக்கியமான பரிமாணமொன்றை நமக்கெல்லாம் நன்கு உணர்த்துகின்றது. மண் விடுதலையிலும் பெண் விடுதலையிலும் அறியப்படும் முன்னோடிகளின் முன்னோடியாகப் பாரதி மகத்தான இடத்தைப் பெறுகின்றார் என்பதே அந்த அரும்பெரும் பரிமாணம்.

(இன்று (செப்.11) மகாகவி பாரதியின் 104-ஆவது நினைவு தினம்)

கட்டுரையாளர்:

தலைவர், தமிழ்மொழித் துறை,

சென்னைப் பல்கலைக்கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 12 பேருக்கு உடனடி நல உதவி

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT