பிரதமர் நரேந்திர மோடி கோப்புப் படம்
நடுப்பக்கக் கட்டுரைகள்

இறைச்சித்தம் வழங்கிய தலைமைக் கொடை!

பிரதமர் நரேந்திர மோடி 76-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அதனால், செப்டம்பர் 17, 2025, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

தினமணி செய்திச் சேவை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பிரதமர் நரேந்திர மோடி 76-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அதனால், செப்டம்பர் 17, 2025, ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

அன்றைய தினம், குஜராத் முதல்வராக 14 ஆண்டுகள் மற்றும் பாரதப் பிரதமராக 11 ஆண்டுகள் என அவருடைய 25 ஆண்டுகால தன்னலமற்ற பொதுச் சேவையின் பின்னணியில், 140 கோடி இந்தியர்களின் பிறந்த நாள் வாழ்த்துகள்!

இந்த கால் நூற்றாண்டு காலத்தில், அவர் ஆட்சி மற்றும் அரசியலின் தன்மையில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டு வந்து, கோடிக்கணக்கான சாமானிய மக்களின், குறிப்பாக ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, தேசத்தின் பெருமையையும் நம்பிக்கையையும் புதிய உச்சத்துக்கு உயர்த்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்திருக்கும் வியத்தகு மாற்றங்களைப் பார்த்தாலே போதும்; அவரது சாதனையின் மேன்மையை உணரமுடியும்.

2001-இல் அவர் குஜராத் முதல்வராகப் பதவியேற்றபோது, அந்த மாநிலம் கடுமையான நிதிச் சுமை, நலிவடைந்த அரசு நிறுவனங்கள், பலவீனமான சட்டம்-ஒழுங்கு மற்றும் பேரழிவு தந்த பூகம்பத்தின் காயங்களால் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால், மோடியின் 14 ஆண்டுகால தொலைநோக்குப் பார்வையுடனான தலைமையின் கீழ், குஜராத் அனைத்துச் சவால்களையும் முறியடித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தது. "குஜராத் மாடல்' என்பது உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பாடமாக உலக அளவில் ஆராய்ச்சி செய்யப்பட்டது.

2014-இல் அவர் பாரதப் பிரதமராகப் பொறுப்பேற்றபோது நமது பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தது; தலைவிரித்தாடிய ஊழலால் மக்கள் சோர்வடைந்திருந்தனர்; 1947-இல் உலகின் 6-ஆவது பெரிய பொருளாதாரமாக இருந்த பாரதம், 11-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த பத்தாண்டுகளில் ஒரு புதிய பாரதம் உதயமாகியுள்ளது. இன்று நாம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கி, விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறத் தயாராக இருக்கிறோம். 2014-இல் 30%-க்கும் அதிகமாக இருந்த வறுமை, இன்று 4%-க்கும் குறைவாகச் சரிந்துள்ளது; சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஆறு தசாப்தங்களாகச் சாதிக்க முடியாதவை, மோடி சகாப்தத்தின் ஒரு தசாப்தத்தில் எட்டப்பட்டுள்ளது.

அன்று இருளில் மூழ்கியிருந்த கிராமங்கள், இன்று 100% மின்மயமாக்கப்பட்டுள்ளன. அன்று 60% மக்கள் திறந்த

வெளியில் மலம் கழிக்கும் அவலநிலையில் இருந்தனர்; இன்று ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை உள்ளது. அன்று 50% வீடுகளில் குழாய்வழி குடிநீர் இல்லை; இன்று ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு தன்னிறைவை நெருங்கி வருகிறது.

வெறும் 10.5 கோடி வீடுகளில் மட்டுமே இருந்த சமையல் எரிவாயு இணைப்பு, இன்று 40 கோடியை நெருங்கியுள்ளது. உலகளாவிய மருத்துவப் பரிசோதனை என்பது கனவாக இருந்தது; இன்று 41 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகளுடன் அது நனவாகியுள்ளது. மிகச் சிலருக்கே வங்கிக் கணக்குகள் இருந்த நிலை மாறி, இன்று 80%-க்கும் அதிகமானோர் நிதி உள்ளடக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

2014-க்கு முன்பு நமது தேசியப் பாதுகாப்பு மிக மோசமான நிலையில் இருந்தது. வடகிழக்கும், ஜம்மு-காஷ்மீரும் பற்றி எரிந்தன. நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை மாவோயிஸ்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பயங்கரவாதிகள் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் தாக்குதல் நடத்தினர்.

வடகிழக்கில் நான் (ஆளுநர் ஆர்.என்.ரவி) பணியாற்றியபோது, முதலீட்டாளர்கள் அந்தப் பகுதிக்குவர அஞ்சியதையும், பயங்கரவாதிகளுடன் முந்தைய அரசுகள் ரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டதால் பாதுகாப்புப் படைகள் மனச்சோர்வடைந்ததையும் நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன். அப்பாவி மக்களைக் கொன்ற பயங்கரவாதிகளை தேர்தல் ஆதாயங்களுக்காக சிறையிலிருந்து விடுவித்த கொடுமைகளும் அரங்கேறின.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதியான யாசின் மாலிக் போன்றோர் அரசு விருந்தினராக நடத்தப்பட்டதையும், பிரிவினைவாதிகளிடம் அரசு கெஞ்சியதையும் நான் (ஆளுநர் ஆர்.என்.ரவி) வேதனையுடன் நினைவுகூர்கிறேன்.

ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற உறுதியான நிலைப்பாடு எடுக்கப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு இலக்கணத்தையே அவர் மாற்றியமைத்தார். வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் பொறுப்பை பிரதமர் எனக்கு வழங்கினார். அவரது முழுமையான நம்பிக்கையாலும், சுதந்திரத்தாலும், ஓராண்டுக்குள் "நாகா' கிளர்ச்சியாளர்கள் இந்திய அரசமைப்பை ஏற்று அமைதிக்குத் திரும்பினர்.

ஜம்மு-காஷ்மீரில், அனைத்துப் பிரச்னைகளுக்கும் மூல காரணமாக இருந்த 370-ஆவது பிரிவை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்தினார். பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. இன்று, காஷ்மீர் பள்ளத்தாக்கு அமைதி, வளம் மற்றும் செழிப்பான ஜனநாயகத்தின் சின்னமாகத் திகழ்கிறது. செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம், புதிய ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியின் அடையாளமாக நிற்கிறது.

"ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, புதிய பாரதத்தின் உறுதிக்கு ஒரு சான்றாகும். பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள்ளேயே நுழைந்து பயங்கரவாத முகாம்களை அழித்தொழித்தது. பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் ஒரு ஏமாற்று வேலை என்பதை பிரதமர் மோடி நிரூபித்துள்ளார்.

பாதுகாப்புத் துறையில் தன்னிறைவை நோக்கிய அவரது இயக்கம், இன்று நம்மை வலிமையாக்கியுள்ளது. அதேபோல், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் சுமார் 200 மாவட்டங்களிலிருந்து பத்துக்கும் குறைவான மாவட்டங்களாக சுருக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடியின் தலைமைத்துவம் உலக அரங்கில் பாரதத்தின் நிலையை வியக்கத்தக்க வகையில் உயர்த்தியுள்ளது. இன்று, உலகம் ஒரு புதிய இந்தியாவை மரியாதையுடனும் எதிர்பார்ப்புடனும் பார்க்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க புது தில்லி பிரகடனத்துடன் நிறைவடைந்த நமது ஜி20 தலைமைத்துவம், பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமைக்குச் சான்றாகும்.

அவர் "உலகளாவிய தெற்கின்' குரலாக ஒலித்து, சர்வதேச மன்றங்களில் அவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் பெற்றுத் தந்துள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ், "விஸ்வகுரு பாரதம்' என்ற கருத்து தொலைதூரக் கனவாக இல்லாமல், ஓர் உறுதியான எதார்த்தமாக மாறிவருகிறது.

பருவநிலை மாற்றம் முதல் பயங்கரவாத எதிர்ப்பு வரை, இந்தியாவின் பார்வை இன்று உலகத்தால் மதிக்கப்படுகிறது. இந்த புதிய உலகளாவிய மரியாதை, ஒவ்வோர் இந்தியரின் மனதிலும் ஆழ்ந்த பெருமையையும் தன்னம்பிக்கையையும் விதைத்து, காலனித்துவ மனப்பான்மையின் கடைசி எச்சங்களையும் அகற்றியுள்ளது.

பிரதமர் மோடி பாரதத்தின் ஆன்மாவைப் புரிந்தவர்; மக்களின் துடிப்பை உணர்ந்தவர். மகாத்மா காந்திக்குப் பிறகு, மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பி, அவர்களை தேசக் கட்டுமானத்தில் பங்கேற்கச் செய்த மாபெரும் தலைவர் அவரே.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், அவரது ஓர் அழைப்பின் பேரில், தேசமே ஒன்றுபட்டு விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய காட்சி என் கண்முன் நிற்கிறது. அதுவே மோடியின் மாயாஜாலம்; மக்கள் அவர் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு.

ஜாதி, மதம் மற்றும் மொழி பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசிய அரசியலை அவர் மாற்றியமைத்தார். செயல்திறன் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரு புதிய அரசியல் தரத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

பிரதமர் மோடியை முழுமையாகப் புரிந்துகொள்ள, பாரதத்தை 5,000 ஆண்டுகள் பழைமையான ஒரு நாகரிகமாகப் பார்க்க வேண்டும். அந்தப் பார்வையில், அவர் ஒரு ரிஷியைப் போன்றவர்;

140 கோடி பாரதியர்களையும் தனது குடும்பமாகக் கருதி, குடும்பத்தின் கடைசி உறுப்பினரும் நலம் பெறும் வரை அயராது உழைத்து வருகிறார்.

தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் மீது அவருக்கு இருக்கும் அன்பு அளப்பரியது. புனிதமான செங்கோலை புதிய நாடாளுமன்றத்தில் நிறுவியது; திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்தது; காசி-தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகள் மூலம் கலாசாரப் பாலங்களைக் கட்டியது; செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய வளாகம் அமைத்தது எனத் தமிழின் பெருமையை உலகறியச் செய்ய அவர் ஆற்றிய பணிகள் ஏராளம்.

பிரதமர் மோடியின் சகாப்தம், நமது நாட்டின் வரலாற்றில் ஒரு பொற்காலம். அவர் இறைச்சித்தத்தால் உலக நன்மைக்காக முழுமையான வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வந்துள்ளார் என்பதுதான் எனது நம்பிக்கை. அந்த நோக்கம் நிறைவேறும்வரை அவர் நம்மோடு இருப்பார்.

கோடிக்கணக்கான பாரதியர்களின் இந்த விருப்பத்துடனும், பிரார்த்தனையுடனும் இணைந்து, நமது பிரதமருக்கு நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க நானும் (ஆளுநர் ஆர்.என்.ரவி) வேண்டிக்கொள்கிறேன். வாராது வந்த மாமணியே, வாழ்க நீவிர் பல்லாண்டு...பல்லாண்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

SCROLL FOR NEXT