தமிழ்மொழி கல்வெட்டு 
நடுப்பக்கக் கட்டுரைகள்

இருந்தமிழே உன்னால் இருந்தேன்...

புலவர்களும் உரையாசிரியர்களும் போற்றி வளர்த்த தமிழ்ப் பயிரை நாமும் பேணி வளர்த்திட இந்நாளில் உறுதியேற்போம். இன்று (பிப். 21) தாய்மொழி நாள்.

ராஜ்கண்ணன்

தமிழ்மொழி தோற்றம் அறியப்படாத தொன்மை வாய்ந்தது. அது கருதியே கம்பர் "என்றுமுள தென்றமிழ்' என்றார்; சேக்கிழாரும் "மன்னு தீந்தமிழ்' என்று பகன்றார்.

அகத்தியரே முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக அறிகிறோம். அகத்தியர் பாண்டிய நாட்டின் பொதிய மலையில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தவராவார். கம்ப காதையில் சுக்ரீவன் வானர சேனைகளிடம் சீதையைத் தேடிச் செல்ல வேண்டிய பாதையை விளக்குமிடத்து, "தென் திசையில் இருக்கும் நாடான பாண்டிய நாட்டில் உள்ள அகன்ற பொதிய மலையில் நிலைபெற்ற சிறந்த அகத்திய முனிவனின் தமிழ்ச் சங்கத்தை அடைவீர்களாக' (தென்தமிழ் நாட்டு அகன் பொதியின் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்...) என்று கூறுகிறான்.

அகத்தியருக்குத் தொல்காப்பியர் உள்ளிட்ட பன்னிருவர் மாணவர்கள் ஆவர். இதனை நாம் புறப்பொருள் வெண்பா மாலையின் சிறப்புப் பாயிரத்தில் வரும் "தொல்காப்பியர் முதல் வரும் பன்னிரு புலவரும்' என்கிற வரியால் அறியலாம். அந்தப் பன்னிருவரும் இயற்றிய நூலே "பன்னிரு படலம்' என்கிறது "புறப்பொருள் வெண்பா மாலை'. அவர்களுள் தொல்காப்பியரே இப்போதுள்ள நூல்களுள் முதலாவதாகிய "தொல்காப்பிய' த்தைத் தம் பெயரால் இயற்றினார். அந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் கூறியவர் தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கரான பனம்பாரனார்.

தொல்காப்பியத்தைத் தொடர்ந்து நன்னூல், புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நேமிநாதம், தண்டியலங்காரம், இலக்கண விளக்கம், முத்துவீரியம் போன்ற இலக்கண நூல்களும், திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி போன்ற நிகண்டுகளும் தோன்றின. ஆயினும், இன்றுவரைத் தமிழின் தலையாய இலக்கண நூலாகத் திகழ்ந்து வருவது தொல்காப்பியமே.

இலக்கியத்தைப் பொருத்தவரை பிற மொழிகளைப் போலவே தமிழிலும் அது முதலில் செய்யுள் வடிவிலேயே தோன்றியது. தமிழ் மக்களின் வாழ்வு இயற்கையோடு இயைபுடையதாக இருந்தமையால், மக்கள் ஒழுக்கத்தைக் கூறும் விதமாக இயற்கைக் காட்சிகளைச் செய்யுளாக அழகுற வடித்தனர் சங்கப் புலவோர்.

அப்புலவோர் தமிழ் மொழியினைத் தம் உயிரினும் மேலாக மதித்தனர். "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்' என்று கூறினார் "தமிழ் விடு தூது' புலவர். தண்டியலங்காரமோ, "தன்னேர் இலாத தமிழ்' என்று தமிழைப் போற்றுகிறது.

சமயம் சார்ந்த அருளாளர்களும் இறைவனுக்கு நிகராகத் தமிழைப் போற்றிப் பரவினர். திருநாவுக்கரசர், "தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்' என்றார். திருஞானசம்பந்தர், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்றே குறிப்பிடப்பட்டார். "என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே' என்று கூறினார் திருமூலர்.

இறையடியார்கள் மட்டுமல்லாது இறைவர்களேகூட தமிழ்ப் பற்றாளர்களாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. சைவர்களின் தெய்வமான சிவபெருமான் தனது தோழனான சுந்தரரிடம், "சொற்றமிழால் எம்மைப் பாடுக' என்று ஆணையிடுகிறார்.

குமரகுருபர சுவாமிகள் தாம் இயற்றிய "மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' நூலை மதுரை நகரில் அரங்கேற்றியபோது, அங்கு தோன்றிய அங்கயற்கண்ணி அப்பாடலில் உள்ள தமிழ்ச் சுவையில் மயங்கி, தனது கழுத்திலிருந்த முத்துமாலையைக் கழற்றி குமரகுருபரருக்கு அணிவித்து மறைந்தார் என்பர்.

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவராகிய திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரத்துப் பெருமாளிடம், செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுந்தன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் என்று கூறியவுடன் திருமால் தனது பாம்புப் பாயைச் சுருட்டிக் கொண்டு அப்புலவர் பின்னே சென்றாராம்.

புலவர்கள் மட்டுமல்லாது வள்ளல் களும், மன்னர்களும்கூட தமிழைப் பெரிதும் போற்றியுள்ளனர். அதியமான் எனும் வள்ளல், தான் அரிதின் பெற்ற அருநெல்லிக்கனி ஒன்று, தன்னை உண்டவரை நெடுங்காலம் வாழவைக்கும் என்பதை அறிந்து அக்கனியைத் தான் உண்ணாமல் தமிழ்ப் புலவரான ஒüவையாருக்குக் கொடுத்தான்.

புறநானூற்று மன்னன் ஒருவன், "நான் எனது பகைவரை வெற்றி கொள்ளத் தவறினால் புலவர்கள் என்னைப் புகழ்ந்து பாடாமல் போகட்டும்' (புலவர் பாடாது வரைக என் நிலவரை) என்று சூளுரைக்கிறான்.

பல்லவ மன்னனாகிய மூன்றாம் நந்திவர்மன், தன்னைப் பற்றி எழுதப்பட்ட பாடலை, தான் கேட்டால் தனது உயிர் உடலை விட்டு நீங்கிவிடும் என்று அறிந்தும் தமிழ் மீது கொண்ட காதலால், அப்பாடலை வற்புறுத்திப் பாடச் செய்து அப்பாடலைக் கேட்டவாறே தன்னுயிர் நீங்கினான்.

இவ்வாறெல்லாம் தமிழைப் போற்றினர் தமிழின்பமே பேரின்பம் என்பதை நன்குணர்ந்த சான்றோர் பெருமக்கள்.

தமிழில் பொருளற்ற சொல் என்று எதுவுமே இல்லை. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது தொல்காப்பிய நூற்பா. அது மட்டுமல்ல, தமிழில்தான் பல பொருள் கொண்ட ஒரு சொல்லும், ஒரு பொருள் கொண்ட பல சொல்லும் பிற மொழிகளைவிடக் கூடுதலாக உள்ளதென்பது அறிஞர்கள் துணிபு.

எடுத்துக்காட்டாக, மனித வாழ்வுக்கு இன்றியமையாததாகிய தண்ணீரைக் குறிக்கும் "நீர்' என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் அச்சொல்லுக்கு கடல் (நீரினும் ஆர் அளவின்றே- குறுந்,), தண்ணீர் (உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்-குறுந்.), ஈரப்பண்பு (நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை- நற்.), தன்மை (வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்-அகம்.), ஒளி (நெடுநீர் வார் குழை களைந்து எனக் குறுங் கண் -நெடுநல்.), தகுதி (நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால்- நாலடி.), குணம் (பெரு நீரார் கேண்மை கொளினும், நீரல்லார் கருமங்கள் வேறு படும் -நாலடி.),

வருவாய் (ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் நீர் அறி ந்து ஒழுகாதான் தாரம் அல்லள் (முதுமொழிக் காஞ்சி), பனி நீர் (மெய் அணி பசும் பொற் கண்ணம் மேதகு ஞான நீரின்...சேறாய்-சீவக.), வியர்வை (பேர் அழகு சோர்கின்றது என்னப் பிறைநுதல் மேல் நீர் அரும்பத் தன் பேதை நின்றாளைப் பாரா-நளவெண்பா) எனப் பத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் உள்ளன.

அதுபோன்றே நீரைக் குறிப்பதற்கும் தண்ணீர் என்ற சொல் மட்டுமல்லாது, அளறு (குளிர் பொய்கை அளறு நிறைய-பரி.), அறல் (தெள் அறல் பருகிய இரலை}குறுந்.), ஆம் (ஆம் இருந்த அடை நல்கி-புறம்.), உறை (உறைக்கொண்டு ஏறுவதுபோல}அகம்.), ஓதம் (கடல் ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்-நற்.), சலம் (துவர் பல ஓட்டிச் சலம் குடைவார்-பரி.), நீத்தம் (நெடுவரை இழிதரு நீத்தம்}மலை.), பண்ணை (மருதம் ஏறிப் பண்ணை பாய்வோள்-ஐங்குறு.), பயம் (பயம் தலை பெயர்ந்து மாதிரம் வெம்ப-அகம்.), புனல் (புனல் புக மிகாது...முந்நீர்-மதுரை.) ஆகிய பத்துச் சொற்கள் உள்ளன. தமிழின் வளமைக்கும் செழுமைக்கும் இஃது ஓர் பதச்சோறு ஆகும்.

அமிழ்தினுமினிய தமிழை வளப்படுத்திய பணியில் புலவர்களுக்கு நிகராகப் போற்றப்பட வேண்டியோர் உரையாசிரியர்கள். அவர்களின் செயற்கரிய செயலே இலக்கண, இலக்கிய நூல்களை வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தது என்று கூறுதல் மிகையன்று.

செய்யுளைத் தொடர்ந்தே உரைநடை உருவானதால் தொடக்க காலத்தில் உரைகள் செய்யுளை ஒட்டிய ஒரு நடையிலேயே அமைந்தன. எடுத்துக்காட்டாக, தமிழ் உரைநடை வரலாற்றில் மிகவும் தொன்மை மிக்கதாகக் கருதப்படும் நக்கீரரின் "இறையனார் களவியல்' உரையில் ஒரு நூற்பாவுக்கான உரையின் ஒரு வரி கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது.

"காதலால் கார் மருங்கின் மின்னுப் போலவும் நீர் மருங்கிற் கொடி போலவும் தளிரும் முறியுந் தந்து குளிரும் நளிருங் கவினியெழா நின்றதோர் கவின்பெரு கொடிபோலுங் காரிகை கண்ணாடி மண்டிலத்து ஊதாவி போலக் காணக்காண ஒளி மழுங்கிக் கனல் முன்னிட்ட மெழுகு பாவை போல மனமுருகிப் பசந்து காட்டினாள்' (பவானந்தம் பிள்ளை பதிப்பு). இதில் செய்யுளுக்கே உரிய எதுகை மோனை அமைந்து ஏறத்தாழ செய்யுள் வடிவிலேயே உள்ளது.

பின்னர் காலம் செல்லச் செல்ல உரைநடை இலக்கியம் வளர்ச்சியுற்று செழுமை பெற்றது. இளம்பூரணர் காலமாகிய பத்தாம் நூற்றாண்டு தொடங்கி, நச்சினார்க்கினியர் காலமாகிய பதினேழாம் நூற்றாண்டு வரையிலுமுள்ள காலப்பகுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் "உரையாசிரியர்கள் காலம்' என்றே குறிப்பிடப்படுகிறது.

இளம்பூரணரின் தொல்காப்பிய உரையும், பரிமேலழகரின் திருக்குறள் உரையும், அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையும் இன்றுவரைப் புலவர்களால் உச்சிமேல் வைத்துப் போற்றப்படுகின்றன.

அவற்றுள்ளும் குறிப்பாக வள்ளுவத்துக்குப் பரிமேலழகர் வரைந்த உரை ஓர் ஒப்பற்ற உரையாகவே புலவர்களால் போற்றப்படுகிறது. தருமர் தொடங்கி காளிங்கர் ஈராக பதின்மற் வள்ளுவத்துக்கு உரை எழுதிய போதிலும் பரிமேலழகர் உரைக்கு அவை ஈடாகா என்பதே அறிஞர்கள் முடிபு.

பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ

பாரிலுள்ள

நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ-

நூலிற்

பரித்தவுரை யெல்லாம் பரிமேலழகன்

தெரித்தவுரை யோமோ தெளி.

என்பது ஒரு புலவர் கூற்று.

இவை மட்டுமன்று. உமாபதி சிவம் எனும் சைவ சமயப் புலவர், தமிழ் மொழியிலுள்ள சிறந்த ஆறு நூல்களைப் பட்டியலிட்டுப் பாடலொன்றைப் பாடியுள்ளார்.

வள்ளுவர் நூல் அன்பர் மொழி வாசகம்

தொல் காப்பியமே

தெள்ளு பரிமேலழகர் செய்த உரை-

ஒள்ளிய சீர்த்

தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்

தண்டமிழின் மேலாம் தரம்

என்பதாகும்.

வள்ளுவப் பேராசானின் மூல நூலான திருக்குறளுக்கு நிகராக, அந்நூலுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை நூலையும் அப்புலவர் வைத்திருப்பது உரைநூலின் சிறப்பையும், பரிமேலழகரின் பேராற்றலையும் ஒருங்கே உணர்த்துவதாகும். உரையாசிரியர்களின் பெருமை

"விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்'.

புலவர்களும் உரையாசிரியர்களும் போற்றி வளர்த்த தமிழ்ப் பயிரை நாமும் பேணி வளர்த்திட இந்நாளில் உறுதியேற்போம்.

இன்று (பிப். 21) தாய்மொழி நாள்.

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

வரிகள் ரத்து! அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவமானத்துக்குரியது: டொனால்ட் டிரம்ப்

அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10% வரி விதிப்பு அமல்படுத்திய டிரம்ப்!

மோடி சிறந்த மனிதர்! இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: டிரம்ப் விளக்கம்!

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!

SCROLL FOR NEXT