முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்!

'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறவும், டாக்டர் அம்பேத்கர் கனவை நனவாக்கவும், பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயமா? என்பதைப் பற்றி...

Updated On : 15 மார்ச், 2026 at 9:50 PM
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்!
பகிர்:

சொத்துரிமை, முத்தலாக் ஆகிய இரண்டுமே முஸ்லிம் ஷரியத் சட்டத்தில் முக்கியமானவை. இவற்றில் ஒரே நேரத்தில் மூன்று முறை "தலாக்' கூறி ஆண்கள் விவாகரத்து செய்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் சட்டம் 2019 ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்தது. எனவே, முஸ்லிம் தனிநபர் ஷரியத் சட்டத்தில் (1937) பெண்களுக்குப் பாகுபாடு காட்டும் சொத்துரிமை, வாரிசுரிமை பிரிவுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் பௌலொமி பாவினி சுக்லா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் கடந்த 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. "வாரிசுரிமை என்பது சிவில் உரிமை, மதச் சடங்கு இல்லை. எனவே, முஸ்லிம் ஆண்களுக்கு நிகரான சொத்துரிமையை முஸ்லிம் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.

ஷாயரா பானு வழக்கில் முத்தலாக் முறை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முத்தலாக் போல மதம் சார்ந்த விவகாரமாக இல்லாமல், சொத்துரிமை சிவில் உரிமை என்பதால், நீதிமன்றமே உத்தரவிடலாம் என்றார் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண். தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில் "தனிநபர் சட்டங்களிலுள்ள பாலின, வாரிசுரிமை, சொத்துரிமை, திருமண வேற்றுமைகளுக்கு "பொதுச் சிவில் சட்டமே' தீர்வாகும். இதே கருத்தை 1985 ஷா பானு, 1995 சர்ளா முட்கல், 2003-இல் ஜான் வல்லமட்டொம், 2019-இல் ஜோஸ் பாலோ கோடின்ஹோ வழக்குகளில், பொது சிவில் சட்டத்தின் தேவையை வலியுறுத்தி நீதிபதிகள் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளனர்' என்றார்.

இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்டதால், இங்கு "பொது உரிமையியல் சட்டம்' அமல்படுத்தப்படவில்லை. டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவான இந்திய அரசமைப்புச் சட்டம் 44-ஆவது பிரிவு "இந்திய நிலப் பரப்பில் வாழும் மக்கள் ஒரே சீர்மையிலான பொது சிவில் சட்டத்தைப் பெற அரசு முயற்சி எடுக்க வேண்டும்' என்கிறது.

இந்தியாவில் வாழும் ஹிந்துக்களைத் தவிர, முஸ்லிகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள், யூதர்கள், பஹாய்கள் உள்ளிட்டோர் சிறுபான்மையினராகப் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

ஹிந்துக்களுக்கான சட்டங்கள் இயற்றப்படும் வரை, அவர்களின் தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட "யாக்ஞவல்கிய ஸ்மிருதி' மற்றும் அதன் உரைநூலான "மிதாக்ஷரா' மற்றும் "தயாபாகா' ஆகியவை குடும்பச் சொத்துரிமை குறித்த வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்தன.

1956-இல் ஹிந்துக்களுக்காக ஹிந்து திருமணம் மற்றும் மணமுறிவுச் சட்டம், ஹிந்து இறங்குரிமைச் சட்டம், ஹிந்து இளவர் உரிமை மற்றும் பாதுகாப்பாளர் சட்டம், ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், உயில்வழி இறங்குரிமை & இந்திய இறங்குரிமைச் சட்டம் போன்றவை இயற்றப்பட்டன. இஸ்லாத்தில் ஷியா, சன்னி, அஹமதியா, கச்சி மேமம், கோஜா, லப்பை, ஹனாஃபி, ஷஃபி, மாலிகி, ஹன்பாலி ஆகிய பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், உட்பிரிவிலும் வாரிசு உரிமை, சொத்துரிமை ஆகியவை வேறு வேறாக இருக்கும்.

முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டமாக உள்ள ஷரியத் நாடாளுமன்றத்தால் வகுக்கப்பட்ட எந்தச் சட்டத்தின் கீழும் வரவில்லை. பிரிட்டிஷ் மற்றும் போர்ச்சுகீசிய ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது.

1872-இல் இயற்றப்பட்ட இந்திய கிறிஸ்தவ மதத் திருமணச் சட்டத்தில் திருமணம், மணமுறிவு, வாரிசுரிமை, சொத்துரிமை, இறங்குரிமை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. கிறிஸ்தவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தச் சட்டங்கள் திருவிதாங்கூர், கொச்சி உள்பட சமஸ்தானங்களுக்கு ஏற்ப மாறுபட்டன.

கிறிஸ்தவர்களாக மாறிய மேகாலயத்திலுள்ள காஜி, ஜெயந்தியா மற்றும் காரோ மலைவாழ்/பழங்குடி மக்களிடையே ஹிந்து முறைப்படிதான் சொத்துப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. பிகார் முண்டாக்களும், ஒடிஸா ஓராங்களும், கிறிஸ்தவர்களான பிறகும் பழங்குடி பழக்கவழக்கப்படிதான் சொத்துப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. பார்சி இன மக்களின் திருமண மற்றும் மணமுறிவுகளுக்கு பார்சி திருமண மற்றும் மணமுறிவுச் சட்டமும், சொத்துகள் விவகாரங்களுக்கு ஹிந்து இறங்குரிமைச் சட்டமும் பொருந்தும். முதல் மனைவிக்கு தெரியாமலோ,

சம்மதம் இல்லாமலோ இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதை ஹிந்து மதம் சட்ட விரோதமாகக் கருதுகிறது. ஆனால், முதல் மனைவி இருக்கும் போதே பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாத்தில் முன்பு, நீதிமன்றத்துக்குச் செல்லாமலேயே "தலாக்', "தலாக்', "தலாக்' என்று மூன்று முறை சொல்லி மனைவியை விவாகரத்து செய்யலாம். ஆனால், 2019-இல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து முத்தலாக் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமானது.

இஸ்லாமிய சமூகத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும், பெண்ணுக்கு ஒரு பங்கும் சொத்து வழங்கினால் போதும் என்று விதி உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானம் உருவாக்கிய கிறிஸ்தவச் சட்ட விதிகளின்படி, பெண் வாரிசுக்கு ரூ. 5,000 மட்டும் கொடுத்துவிட்டு, ஆண் வாரிசுக்கு மீதமுள்ள அனைத்து சொத்துகளையும் கொடுத்து விடலாம் என்று சட்டம் சொல்கிறது.

ஹிந்து சமூகத்தில் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லை என்று 2005-ஆம் ஆண்டு வரை ஹிந்து இறங்குரிமை சட்டத்தில் விதியாக இருந்தது (மேற்கு வங்கம், ஆந்திரம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் 2005-ஆம் ஆண்டுக்கு முன்பே, பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு). திருமணம் மற்றும் விவாகரத்து ஆகியவற்றில் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் இல்லாமல் மதத்துக்கு மதம் மாறுபடுவதால், சாதகமான மதத்துக்கு மாறலாம் அல்லது மத மாற்றத்துக்கான தூண்டுகோலாக அமையலாம். இஸ்லாத்தில், விவாகரத்து பெற்ற பெண்ணுடைய "இதத்' காலத்தில் (முஸ்லிம் பெண்கள் விவாகரத்துக்குப் பிறகு, அடுத்துவரும் மூன்று மாதவிடாய் மாதங்களுக்கு) வேறு திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

இந்த மூன்று மாதவிடாய் "இதத்' காலத்தில் மட்டும் ஜீவனாம்சம் வழங்கினால் போதும் என்கிறது இஸ்லாம். ஜீவனாம்சம் அளிக்க வேண்டியதில்லை என்று இஸ்லாம் கூறுவதற்குக் காரணம் திருமணத்தின் போது மணமகன் "மெஹர்' என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை மணமகளுக்கு வழங்குகிறார். எனவே, விவாகரத்து போன்ற பிரச்னைகள் வரும்போது இந்தத் தொகையே ஜீவனாம்சத் தொகையாகக் கருதப்படுவதால், விவாகரத்து செய்த மனைவிக்கு தனியாக கணவர் ஜீவனாம்சம் அளிக்க வேண்டியதில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகக் கூறியதாவது, "பொது சிவில் சட்டத்தை அந்தந்த மதத்தின் தனிப்பட்ட சட்டங்களுக்குப் பாதகம் வராமல் அமல்படுத்த வேண்டும் என்ற கருத்தை ஏற்க இயலாது. 1935-ஆம் ஆண்டு வரை வட மேற்கு எல்லை மாகாணங்களில் இஸ்லாமியர் தங்கள் மதம் சார்ந்த சட்டங்களை வைத்துக் கொள்ளாமல், ஹிந்து மதச் சட்டங்களைத்தான் பின்பற்றினர். 1937-ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த மும்பை மாகாணப் பகுதிகளிலும், இஸ்லாமிய மக்கள் ஹிந்து மதச் சட்டங்களையே பின்பற்றினர்.

வடக்கு மலபார் பிரதேசச் சட்டம் ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கும்தான். மதங்களின் தனி நபர் சட்டங்களைப் பாதுகாக்க, அரசமைப்புச் சட்டத்தில் விலக்களித்து, ஷரத்துகளைச் சேர்த்துக் கொண்டே போனால், நிறைவாக அரசமைப்புச் சட்டமே நீர்த்துப் போகும். சமூக முன்னேற்றத்துக்கே முட்டுக்கட்டை போடும்.

ஒரு சட்டம் பொதுவானது எனச் செயல் வடிவம் பெறுவது, "பொது நன்மை' என்னும் அடிப்படையில்தான். சமூகம், இனம், மதம் ஆகியவற்றின் உணர்வுகளை, சம்பிரதாயங்களைப் பாதிக்கும் எண்ணத்தில் சட்டம் கொண்டு வரப்படுவதில்லை. மதங்களின் தனி நபர் சட்டங்கள், அரசின் சட்டம் இயற்றும் அதிகார வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்னும் கருத்தை கடுமையாக எதிர்க்கிறேன்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதி-3 அடிப்படை உரிமைகள் மற்றும் பகுதி-4 அரசின் கொள்கை நிர்ணயத்துக்கான வழிகாட்டிகள். இவற்றுக்கு இடையேயான முக்கியமான வேறுபாடு, பகுதி-3 உறுதி செய்யப்பட்ட, நீதிமன்றத்தின் வழியாக, உரிமையாகக் கோரி பெற, உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஷரத்துக்களைக் கொண்டதாகும்.

ஆனால், பகுதி-4 அப்படியானது அல்ல. இதனாலேயே "பொது சிவில் சட்டம்' ஓர் அடிப்படை உரிமை ஷரத்தாக உறுதி செய்யப்பட வேண்டும்' என்றார். "பொது சிவில் சட்டத்துக்கு' ஆதரவாக டாக்டர் அம்பேத்கரும், நீதிமன்றங்களும் கூறியதையே, மேற்கண்ட வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்தும் வழிமொழிந்துள்ளார்.

"ஒரே நாடு, ஒரே சட்டம்' என்னும் இலக்கை நோக்கி நாடு முன்னேறவும், டாக்டர் அம்பேத்கர் கனவை நனவாக்கவும், பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயமாகும்.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

முழு கட்டுரையைப் படிக்க →