முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

அரசு, தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிப்பு

திருத்தணி: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:24 PM
பகிர்:

திருத்தணி: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படாததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 ÷கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் கடந்த ஜூன் 15-ம் தேதி திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. ÷திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரையில் பிளஸ் 2 புத்தகங்கள் தாவரவியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, அதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட 4 ஆயிரம் புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

 ÷தமிழக அரசு, சென்ற ஆண்டு 1 மற்றும் 6 ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்புவரை சமச்சீர் பாடத்திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவித்தது.

 ÷இந்நிலையில் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தாண்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என அறிவித்தார்.

 ÷இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சமச்சீர் பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆகஸ்ட் 9-ம் தேதி தீர்ப்பு கூறியது.

 ÷அதையேற்ற தமிழக அரசு, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக சமச்சீர் பாடப் புத்தகம் வழங்கப்படும் என அறிவித்தது.

 ÷ஆனால் முழுமையான அளவுக்கு புத்தகங்கள் இல்லாததால் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 ÷ஆனால் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சமச்சீர் கல்வி பாடபுத்தகங்கள் இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

 ÷அதேபோல் ஒருசில தனியார் பள்ளிகளிலும் இன்னும் சமச்சீர் கல்வி புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

 ÷மாணவர்களுக்கு புத்தகங்களும் முழுமையாக வழங்காத நிலையில் தமிழக அரசு வரும் செப்டம்பர் 22-ம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என அறிவித்துள்ளது. தேர்வுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படாததால் தேர்வுக்கு எப்படி தயாராவது? எனப் புரியாமல் மாணவ, மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.÷இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து அரசுப் பள்ளகளில் புத்தகங்களின் தேவை அறிந்து சம்மந்தப்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.