சிறப்புக் கட்டுரைகள்

காட்டின் பாதுகாவலர்களான யானைகளைக் காப்பது நமது கடமை!

சி.பி.சரவணன்

யானைகளைக் காப்போம்!

பண்டைய தமிழகத்தில் யானை:


திண்டுக்கல் மாவட்டம் அமராவதி அணை அருகே சங்க காலத்தைச் சேர்ந்த யானை பிடித்தல் பழக்குதல் குறித்த குகை ஓவியம்

17ஆம் நூற்றாண்டு சுவர் ஓவியங்கள், மதுரை:

யானைப் படை:

அரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை. முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்வகைப் படைகளை உடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப் பெற்றான். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடக்கில் இருந்து யாராவது இந்தியாவுக்குள் நுழைய வேண்டுமென்றால் விண்ணைத்தொட்டு நிற்கும் இமயமலைத் தொடரை கடந்து தான் வர வேண்டும். இல்லையென்றால், கரை புரண்டு ஓடும் ஆழமான சிந்து நதியை கடக்க வேண்டும். இவை இரண்டுமே சாதாரண காரியமில்லை. இதனால் வடக்கில் இருந்து படை எடுத்து வந்த மன்னர்கள் நமது நாட்டுக்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்றனர். இதையும் மீறி இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர்களின் வயிற்றில் புளியை கரைத்தது இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தமான யானைப் படைகள். இந்தியாவை ஆண்ட சிற்றரசர்கள் கூட பெரிய யானைப் படைகளை வைத்திருந்தனர்.

யானைகளைப் பார்த்தறியாத வெளிநாட்டு மன்னர்களுக்கு யானையின் பெரிய உருவமும், அவை கட்டுப்பட்டு, ஆவேசத்துடன் போர்களில் பங்கேற்றதையும் கண்டு வியந்து வெலவெலத்துப் போனார்கள்.

இந்தியாவுக்குள் நுழைய நினைத்த பல கிரேக்க, மங்கோலிய, ஆப்கான், துருக்கி நாட்டு மன்னர்களை விரட்டியடித்தது யானைகளைப் பற்றிய பயம்தான். தங்களை நோக்கி ஆயிரக்கணக்கான யானைகள் பிளிறிக்கொண்டு புழுதிப் பறக்க ஓடிவருவதாக கற்பனை செய்து கொண்டே தங்கள் தூக்கத்தை தொலைத்தனர். அந்த அளவிற்கு அவர்களை யானைகள் ஆட்டிப் படைத்தன.

படைவீரர் யானையாட்கள் என்றும், குஞ்சரமல்லர் என்றும் குறிக்கப்பெற்றனர். வலிமை நிறைந்த அழகிய யானை, பட்டத்து யானை என்று பெயர் பெற்றது. உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும் உடைய யானையே அப்பதவிக்கு உரியதாயிற்று. அரசன், நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படும்பொழுதும், படையெடுக்கும் பொழுதும் பட்டத்து யானை மீதேறிச் செல்வான். அவன் கொடி தாங்கும் தகுதியும் அதற்கே உண்டு. 

சேரநாட்டு யானைப்படை:

தமிழகத்தில் மலைநாடாகிய சேரநாடு யானைச் செல்வமுடையது. ஆதலால் அந்நாட்டுப் படையில் யானைப் படை சிறந்ததோர் அங்கமாக விளங்கிற்று. அந்நாட்டை ஆண்ட அரசன் ஒருவன் "பல்யானைச் செல்கெழு குட்டுவன்" என்று பாராட்டப்படுகின்றான். புலவர் பாடும் புகழுடைய வீரனாய் விளங்கிய அச்சேரன் வேழப்படையால் விழுமிய புகழ் பெற்றவன் என்பது வெளிப்படை. போரில் ஈடுபடும் யானைகளுக்கு மதம் ஊட்டி, மிகுந்த வெறியுடன் இயக்குவர். போர்களில் எதிரிப் படைகளின் கோட்டை தகர்த்தல் உள்ளிட்ட பல காரியங்களிலும் அவை பெரிதும் துணை நின்றுள்ளன.

இந்தியக் காடுகள்:

தமிழகத்தில் ஆறில் 1 பங்கு நிலப்பகுதி காடுகளே! இந்திய வனக் கணக்கெடுப்பு 2003ன் படி தமிழ்நாட்டில் 22643 கி.மீ2 அதாவது நிலபரப்பின் 17.41% காடுகள் உள்ளன. இதில் 2440 கி.மீ மிக அடர்ந்த காடுகளாகவும், 9867 கி.மீ ஒரளவு அடர்ந்த வனங்களாகவும், மீதமுள்ள 10636 கி.மீ திறந்த அடர்த்தியற்ற வனங்களாகவும் இருக்கும். இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு, காடுகள் பரப்பளவில் 13-வது இடத்தில் இருக்கிறது. ஆசியா யானைகளின் மொத்த எண்ணிக்கை: 50,000 இந்தியா: 27,500 - 28,500 தென்மாநிலங்கள்: 15,000 -16,000 தமிழகம்: 3500 – 4000

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் 67 பேர் யானைகள் தாக்கி பலியாகி உள்ளனர். இதற்கு காரணம் என்னவென்று யாரும் சிந்தித்து பார்ப்பது இல்லை. விலங்கினங்கள் வசிக்கும் இடங்களுக்கு நாம் சென்றால், விலங்கினங்கள் எங்கு செல்லும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் செயற்கைக்கோள் மூலம் அளவிட்ட போது இருந்த வனப்பகுதிகள் சிலவற்றில் தற்போது வீடுகள் உருவாகியிருக்கின்றன.

யானைகளின் பரிணாம வளர்ச்சி:

குரங்கில் இருந்து மனிதர் தோன்றியதாக வரலாறு. அதுபோல தற்போதைய யானைகள், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பன்றி போன்ற உருவத்தில் இருந்து தட்பவெப்ப சூழ்நிலைகளால் மாற்றமடைந்து தற்போதைய உருவத்தை அடைந்தவை.

பல கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ‘மூன்தெரியம்’ எனும் பன்றி போன்ற உருவத்தில் தோன்றின. பின் ‘மாமூத்’ என்ற வடிவத்திற்கு பரிணாம வளர்ச்சி பெற்றது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘மாமூத்’ இனங்கள் காணப்பட்டுள்ளன. பனிக்காலமாக இருந்ததால் அவை தோல் வளர்ந்து காணப்பட்டன. அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போதைய உருவத்தை யானைகள் பெற்றன. தற்போது உலகில் 13 நாடுகளில் யானைகள் உள்ளன. இவற்றின் பூர்வீகம் ஆப்ரிக்கா.

உலகில் ஆசியா, ஆப்ரிக்கா யானைகள் என இரு வகைகள் உண்டு. அதில் ஆப்ரிக்கா யானைகள் சவன்னா, ஹர்ச் என இரு வகைப்படும். 

ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உள்ளன.

ஆசிய யானைகள் பொதுவாக 11 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்கா யானைகள் 13 அடி உயரம் கொண்டவை. ஆப்ரிக்க யானைகளில் ஆண், பெண்ணுக்கும் தந்தம் இருக்கும். ஆசியா யானைகளின் தும்பிக்கையில் பொருட்களை கையாளும் வகையில் மேல் பகுதியில் சிறு மடிப்பு உண்டு. ஆப்ரிக்க யானைகளில் தும்பிக்கையில் மேல் மற்றும் கீழ்புறமும் மடிப்புகள் இருக்கும். ஆசிய யானைகளின் கால்களில் 4 மற்றும் 3 நகங்களும், ஆப்ரிக்க யானைகளின் கால்களில் 5 மற்றும் 4 நகங்களும் இருக்கும்.

இரட்டையர்களும் உண்டு யானைகள் சராசரியாக 70 வயது வரை வாழும். பெண் யானைகள் 15 வயதில்  பருவத்துக்கு வந்து விடும். 15-20 வயதில் ஆரம்பித்து 55 வயது வரை குட்டி போடும். தனது வாழ்நாளில் 8 முதல் 12 குட்டிகளை ஈன்றெடுக்கும். பிரசவ காலம் 18 முதல் 22 மாதங்கள். பிறக்கும் குட்டி 90 லிருந்து 125 கிலோ எடை வரை இருக்கும். ஆண் குட்டி 9 அடி உயரமும், பெண் குட்டி 8 அடி உயரமும் இருக்கும். அரிதாக ஒரே சமயத்தில் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கும்

யானைகள் வளமே!

யானைகள் இருக்கும் இடம் அனைத்து வளங்களும் நிறைந்த சிறந்த வனப்பகுதியாகும். அதனால் யானைகள் நடமாட்டம் மிகுந்த மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவின் சிறந்த வனப்பகுதியாக இருக்கிறது. தமிழகத்தில் இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் யானைகள் சமீப காலமாக வழக்கத்துக்கு மாறாக கூட்டம் கூட்டமாக ஊருக்குள் படையெடுக்கின்றன. விவசாயப் பயிர் களையும், மனிதர்களையும் துவம்சம் செய்வதால் யானைகள் இன்று மனிதர்களுடைய முக்கிய எதிரியாகி விட்டன. யானைகள் இருக்கும் இடம் அனைத்து வளங்களும் நிறைந்த சிறந்த வனப்பகுதியாகும். அதனால் யானைகள் நடமாட்டம் மிகுந்த மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவின் சிறந்த வனப்பகுதியாக இருக்கிறது. தமிழகத்தில் இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் யானைகள் சமீப காலமாக வழக்கத்துக்கு மாறாக கூட்டம் கூட்டமாக ஊருக்குள் படையெடுக்கின்றன. விவசாயப் பயிர்களையும், மனிதர்களையும் துவம்சம் செய்வதால் யானைகள் இன்று மனிதர்களுடைய முக்கிய எதிரியாகி விட்டன. 

யானைகள் சில சுவையான தகவல்கள்:

யானைகளின் வாழ்வு முறையை உற்று நோக்கினால், பலவியப்பான தகவல்களை காணலாம். வளர்ந்த யானை, ஒருநாளைக்கு 150 முதல் 200 கிலோ பசுந்தாவரங்களை உட்கொள்ளும். ஒரு நாளைக்கு 150 லிட்டரிலிருந்து 200 லிட்டர் அளவிற்கு நீர் அருந்தும். உணவுத் தேவைக்காக, இயற்கையாக நகர்ந்து கொண்டே இருக்கும் பழக்கத்தை பெற்றுள்ளன. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உணவு உண்ணும். எப்போதுமே பெரும் திரள்களாகவே வாழ்கின்றன. மூத்த பெண்யானைகளே கூட்டத்தினை வழிநடத்தி, உணவு மற்றும் நீர் அமைவிடங்களுக்கு இட்டுச்செல்லும். யானைகள் எப்போதும் காதுகளை ஆட்டிக்கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏனெனில், மனிதனைப்போல் யானைகளுக்கும் வியர்வை சுரப்பிகள் இல்லை.எனவே, அதன் பரந்து விரிந்த காதுகளில் உள்ள ரத்தக் குழாய்களின் மூலம் பாயும் ரத்தம், செவி மடல்களை யானைகள் அசைக்கும் போது குளிரூட்டப்பட்டு அதன் வெப்பம் குறைய உதவுகிறது. கோடைக்காலங்களில் யானைகள் அதன் எச்சிலை துதிக்கையின் மூலம் எடுத்து அதன் காதின் பின்புறம் மற்றும் கழுத்தின் அடிப்பகுதியிலும் தெளிப்பதை காணலாம். நீரின் மீது அலாதி ஆசை உண்டு. யானைக்கூட்டம் நீரில் இறங்கியவுடன் தண்ணீர் கலங்கும் என்பதால் தங்கள் துதிக்கைகளை நீட்டி கலங்காத நீரினை பருகுவதை காணலாம். குளித்து முடித்ததும் அவை தங்கள் மீது சேற்றையும், மணலையும் அள்ளிப்போட்டுக்கொள்ளும். இது உடற்சூட்டினை கட்டுப்படுத்தவும், கொசு, உண்ணி, பூச்சிகளிடமிருந்து அவற்றை காக்கவும் உதவுகிறது.

சராசரி ஆயுள்:

சராசரி ஆயுள் மனிதனைப் போலவே 60 முதல் 70 வயதாகும். வயதான யானை தங்களின் கூட்டத்தோடு தொடர்ந்து நடக்க இயலாமல் போகும் சூழ்நிலையில் ஏதேனும் நீர்நிலைகளின் அருகில் தங்கி அதன் கடைசி வாழ்நாட்களை கழித்து, அங்கேயே இறக்கும்.யானைக் கூட்டத்தில் உள்ள ஆண் குட்டிகள் 10--12வயதில் பருவ வயதினை நெருங்கும் காலத்தில் தன் கூட்டத்தினை விட்டு விலகி தனி வாழ்க்கையை மேற்கொள்ளும். இது இயற்கையாக தன் ரத்த சொந்தங்களுடன் இனச்சேர்க்கையை தவிர்த்து வேற்று மரபணு பறிமாற்றத்தின் மூலம் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க வழி செய்கின்றன. ஆண் யானைகள் 15 லிருந்து 20 வயதாகும்போது பருவ மாற்றத்தால் மத நிலையை அடையும். அப்போது அதன் கண்ணிற்கும், காதிற்கும் இடையில் அமைந்திருக்கும் சுரப்பியில் இருந்து மதநீர் ஒழுகிக்கொண்டே இருக்கும். இவ்வாறான மதநிலையில் ஆண்யானைகள் உணவருந்தாமல், பெண்யானை கூட்டத்துடன் திரிந்து தக்க பருவத்தில் இருக்கும் பெண்யானையுடன் இணை சேரும். மதம் பிடித்த நிலையில் தன்னை எதிர்க்கும் ஆண் யானைகளுடன் பயங்கரமாக சண்டையிடும். ஆண் யானைகளில் சில தந்தமற்று காணப்படும். இவை 'மக்னா” என்றழைக்கப்படும். இது மூன்றாம் பாலினம்என்ற கருத்து தவறு. மக்னா யானை அனைத்து வகையிலும் தந்தமுள்ள ஆண்யானைக்கு நிகரானதாகவும், சந்ததிகளை உருவாக்கக்கூடிய வல்லமை படைத்ததாகவும் இருக்கும். இவற்றிற்கு பிறக்கும் ஆண்குட்டி தந்தமுள்ளதாக பிறக்கவும் வாய்ப்புள்ளது. தந்தத்திற்காக 

யானை வலசை பாதை:

யானை வலசை என்பது ஒரு வாழிடத்திலிருந்து மற்றொரு வாழிடத்திற்கு இடம்பெயர பயன்படுத்தும் குறுகிய நிலப்பரப்பு ஆகும். 

இந்திய வனவிலங்கு அமைப்பும் (Wildlife Trust of India), ஆசிய யானைகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு மையம் (Asian Elephant Research and the Conservation Centre) சேர்ந்து நடத்திய ஆய்வில் 88 யானை வலசைப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொல்கத்தி-வயலார் வலசை, பூலுவம்பட்டி - அட்டபட்டி வலசை, கல்லார் - காந்தபள்ளம் வலசை, மருதமலை - தானிகண்டி வலசை, ஜக்கனேரி - வேதார் வலசை, தலமலை - குட்டியலத்தூர் வலசை, மற்றும் தருமபுரி - கிருஷ்ணகிரி வலசை

பல்லுரியம்: 

உலகில் ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினங்களை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ சார்ந்து வாழ்கின்றன. இதுவே, பல்லுயிரியம் என்று அழைக்கப்படுகின்றது.இந்த பல்லுயிரியத்தில் யானையின் பங்கு இன்றியமையாததாகும். எனவே, யானைகள் மையக்கல் இனம் என்றழைக்கப்படுகின்றன. காடுகளில் அடர்ந்து வளரும் மரம், செடி, கொடிகளை உடைத்து யானைகள் ஏற்படுத்தும் வழிகளையே மற்ற விலங்குகள் பயன்படுத்துகின்றன. மலைகளின் மீது ஏறுவதற்கு ஏதுவாக வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதைகளை அமைப்பதில் மனிதனுக்கு முன்னோடியும், வழிகாட்டியும் யானைகளே. யானைகள் தோண்டிய ஊற்று நீரை மற்ற உயிரினங்களும் பயன்படுத்தும். எனவே, யானைகள் இருக்கும் காடுகளில் யானை ஒரு இன்றியமையாத உயிரினமாகும். 

யானை உணவு:

காலை மற்றும் மாலை 4 மணிக்கு மேல் யானைகள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் சராசரி எடை 4,000 கிலோ. தோலின் எடை மட்டும் 1,000 கிலோ. தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்று கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் தன்மை உடையவை. நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் யானைகள் பதட்டமாகி விடும். மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் 'உணர்ச்சி மையம்' ஒத்திருப்பதால், யானை மனிதனைப் போன்று புத்திசாலியான விலங்காக கருதப்படுகிறது. அவற்றுக்கு ஞாபக சக்தி அதிகம்.

மனிதன் அட்டகாசம்: 

யானைகளின் வாழிடங்கள் தொடர்ந்து மனித தேவைகளான அணைகள், நீர்மின் நிலையங்கள், தேயிலை மற்றும் காப்பித்தோட்டங்கள் போன்றவற்றிற்காக பெருமளவில் அழிக்கப்படுகின்றன. மேலும், யானை வழித்தடங்களை மனதில் கொள்ளாமல் செயல்படுத்தப்படும் சாலை மற்றும் இருப்புப் பாதை திட்டங்களும், சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட தனியார் வனப்பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக தோட்டங்களும், விடுதிகளும், வீடுகளும் கட்டப்படுவதால் யானைகளின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டு வலசைபோதல் தடைப்பட்டு அவைகளின் வாழ்விடம் தொடர்ச்சியாக இன்றி துண்டிக்கப்படுகிறது மேற்கூறியவாறு தடைப்பட்ட வழித்தடங்கள் தடைகளை மீறிகடக்க முற்படும் போது மனிதனுடன் தவிர்க்க முடியாத மோதலில் உயிர்ச்சேதம் ஏற்படுகின்றன. இதில் அப்பாவிகளான யானைகள், வில்லன்களாக சித்தரிக்கப்படுகின்றன. தற்போது, வாழ்விடங்கள் துண்டாடப்படுவதால் ஒரு குறிப்பிட்ட வாழ்விடத்தில் யானைகளின் எண்ணிக்கை பெருகி, அதன் இயற்கை உணவு பற்றாக்குறை ஏற்பட்டு அவை மனிதனால் உருவாக்கப்பட்ட வயல்களிலும், தோட்டங்களிலும் செழித்துள்ள பயிர்களை உண்ண முற்படுகின்றன. யானை வழித்தடங்களை அறிந்து அவை கடந்து செல்லக்கூடிய வகையில் சாலை மற்றும் இருப்புப்பாதை அமைக்க வேண்டும்.

பாலித்தீனால் பலியாகும் யானை: 

பரவலான மலைப்பகுதிகள் இல்லாமல் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள இடைவெளிகள், மனிதன் ஏற்படுத்திய வளர்ச்சி, காட்டுத்தீ, கால்நடைகள், மரம் சேகரிப்போரால் யானைகள் பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் 59 சதவீதம் திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷ உணவு 13 சதவீதம், மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன. இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். அவற்றை உண்ணும் யானை போன்ற விலங்குகள், ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. தவிர, இயற்கையாகவே யானையின் குடலுக்குள் உருவாகும் புழுக்கள், பூச்சிகளாலும் இறப்பு நேரிடுகிறது. காசநோயாலும் இறக்கின்றன. இப்படி நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் ஊசி, மருந்துகளில் 60 சதவீதம் மனிதனுக்கு பயன்படுத்தக் கூடியவை.

யானையை பாதுகாப்பது முக்கியம்:

யானைகள் நல்ல பழங்கள் மற்றும் மரங்களில் படர்ந்துள்ள செடி, கொடிகளின் இலைகளை விரும்பி உண்ணும். அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாகச் செல்ல முடியும்.

யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் உண்ணும். மரக் கிளைகளை உடைத்து இலைகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில் கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி பல சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகிறது. காடுகள், காடுகளாக இருக்க பாதுகாவலனாக இருப்பது யானை. எனவே யானைகளைப் பாதுகாப்பது நமது கடமை.

காடுகளில் வசிக்கும் விலங்கினங்கள் தங்களுக்கான பாதையை தெரிவு செய்து வைத்திருக்கும். மனிதர்கள் திடீரென்று காட்டு பகுதியில் குடிசை போட்டு வசிக்க முற்படும்போது அதன் பாதை அடைக்கப்பட்டால், அவை வேறு திசையாக திரும்பி கிராமங்களுக்குள் படையெடுக்கும் சம்பவங்கள் நடைபெறத்தான் செய்யும். இதற்கு மனிதர்களின் சுயநலமே காரணம். வன விலங்கில் பெரிய உயிரினங்கள் அழிந்து வருகிறது என்றால், அதன் கீழ் உள்ள சிறிய உயிரினங்களும் அழிந்து வருவதாக அர்த்தம். 

யானைகள் இக்காடுகளிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டால் அத்துடன் சேர்ந்து மற்ற உயிரினங்களும், காடும் அழியும் அபாய நிலை ஏற்படும். காடு அழிந்தால், நாடு அழியும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் நீர், காட்டிலிருந்து உருவாகின்றது என்பதையும் நாம் சுவாசிக்கும் பிராண வாயு காட்டிலிருந்து உருவாகின்றது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. எனவே, யானைகளையும், காடுகளையும் எதிர்வரும் சந்ததியினருக்கு பாதுகாத்து வழங்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

சட்டநடவடிக்கை போதவில்லை?

1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம் ஒரு மைல் கல்லாகும். 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வனஉயிர் பாதுகாப்பு சட்டம் தேசிய அளவிலான ஒரு முயற்சியாகும். வன உயிர் சரணாலயங்கள் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு வாரியம் ஏற்படுத்துதல் போன்றவை இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. வனவிலங்குகளை வேட்டையாடுதல் தண்டனைக்குரிய குற்றமாக இச்சட்டம் குறிப்பிடுகிறது.

ஆயினும் மரம் வெட்ட அனுமதி கொடுத்தல், வன ஆக்கிரமிப்பு, சாலை ரயில்பாதை அமைத்தல், நியூட்ரினோ மற்றும் தனி மனித ஆர்ப்பாட்டங்களை குறைத்து வனவளம் பெருக்க வேண்டியது அவசியம்.

கட்டுரையாளர்:

C.P.சரவணன், வழக்குரைஞர்.

9840052475

குறிப்பு நூல்கள்:

ந. சி. கந்தையா பிள்ளை. (2006). தமிழர் பண்பாடு. அப்பர் அச்சகம்: சென்னை.
Land acquisition perspectives of vital elephant corridors in the Coimbatore and Sathyamangalam Forest Divisions,
Tamil Nadu, South India Principal Investigators by B. Ramakrishnan & K. Ramkumar 2007

Image courtsy: google.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT