சட்டமா, நியாயமா?
தமிழகத்தின் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே விஷயம் திரும்ப திரும்ப பேசப்படுகிறது.
தமிழகத்தின் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே விஷயம் திரும்ப திரும்ப பேசப்படுகிறது.
‘சசிகலா முதல்வராமே! பாவம் பன்னீர் செல்வம். நல்ல மனுஷன். இதுநாள் வரை சசிகலா நேரடியாக எந்த அரசியலிலும் ஈடுபடலை. அவராலும், அவரின் குடும்பத்தாலும் தான் ஜெயலலிதாவிற்கு சிக்கல்கள் ஏற்பட்டது. அதனால நியாயப்படி சசிகலா பதவியேற்க கூடாது', என்ற வாதங்களை கேட்க முடிகிறது.
‘மக்களின் ஆதரவு பெற்ற ஒருவர் முதல்வராகவோ, தலைவனாகவோ முடியும். இது இயற்கையின் நீதி. எம்.எல்.ஏ மற்றும் எம்.பி க்கள் ஒருவரை ஆதரிப்பதால் அவர் தலைவராகிவிடுவாரா? அதை மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?' என்று ஒரு தரப்பு பேசுகிறது.
‘மக்கள் ஏற்றுக் கொண்டால் என்ன, ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன! சட்டம் ஏற்றுக் கொண்டால் போதும்', என்று மிகச்சிலர் பேசுவதையும் கேட்க முடிகிறது.
இந்த விஷயத்தை சட்டப்படி அணுக வேண்டுமா? நியாயப்படி அணுக வேண்டுமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் முதல்வராக தேர்தெடுக்கப்படலாம். அதில் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. ஒரு வார்டில் கூட தேர்வாகாத ஒருவரை நேரடியாக முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவதை எப்படி ஏற்பது?
பாஜக ஆட்சிக்கு வந்த போது, அரசியல்வாதி அல்லாத ஒரு பொருளாதார புலியை நிதியமைச்சராக தேர்ந்தெடுக்க பரிந்துறை செய்யப்பட்டது. அந்த பரிந்துறை ஏற்கப்படவில்லை. அரசியல்வாதியான ஒருவர் மட்டுமே அமைச்சராக வேண்டும் என்பதை இன்றைய மத்திய அரசு நினைத்தது. ஒரு அமைச்சருக்கு பொருளாதார புலிகள் ஆலோசனை கூறலாம். அமைச்சராக வேண்டுமென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர்கள் நினைத்திருந்தால் மாநிலங்களவை மூலம் அவரை எம்.பியாக நியமித்து மந்திரியாக்கியிருக்கலாம். ஆனால் மத்திய அரசு அப்படிச் செய்யவில்லை. காரணம் அரசியல் என்பது ஆளுமை சம்பந்தப்பட்டது. ஒருவருக்கு ஆளுமை இருக்கலாம், ஆனால் அதை கடந்த காலங்களில் நிரூபித்து இருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஏதோ காரணங்களை சொல்லி அமைச்சரவையில் இடமளிக்கக்கூடாது. அது நியாயமான செயலும் அல்ல. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் முதலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.
இதே நிலையைத்தான் மரியாதைக்குறிய ஜெயலலிதா கடைபிடித்தார். முன்னால் தலைமைச் செயலர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணனின் நிர்வாகத் திறமையை மதித்து அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுத்தாரே தவிர அவரை நேரடியாக மந்திரியாக்கவில்லை. அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை.
நிலைமை இப்படியிருக்க எந்த அரசியல் நடவடிக்கையிலும் நேரடியாக ஈடுபடாத ஒருவரை முதலமைச்சர் பதவியில் அமரவைப்பது சட்டப்படி சரியாக இருக்கலாம், நியாயப்படி அது சரியல்ல. இந்தியா ஒரு சமாதான நாடு. நமக்கு எதற்கு ராணுவம்? என்ற கேள்வி கேட்கப்பட்ட காலத்தில் வடிவமைக்கப்பட்டது இன்றைய அரசியல் சட்டம். இன்று ராணுவம் தேவையற்றது என்று சொல்வோமா? அணுகுண்டின் அவசியத்தை உணரும் இன்றைய காலத்தில் பழைய சிந்தனைகள் உபயோகப்படாது. ஆகையால் சட்டங்களில் மாற்றம் தேவை. ‘தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் அமைச்சரவையில் இடம் பெற முடியும்', என்று சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
ஜெயலிதா அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில், முதல்வர் பதவிக்கு பல முறை பிரச்னை ஏற்பட்ட காலங்களில் மரியாதைக்குறிய பன்னீர்செல்வம் மட்டுமே முதலமைச்சர் பதவியில் அமர வைக்கப்பட்டார். அதாவது ஜெயலலிதாவிற்கு முதலிடம். பன்னீர் செல்வத்திற்கு இரண்டாம் இடம். மூன்றாம், நான்காம் இடமெல்லாம் உருவாக்கப்படவில்லை. இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இரண்டாம் நிலைக்கு எந்த சூழலிலும் சசிகலா முன்னிறுத்தப்படவில்லை. இந்த நிலையில் நடந்த பல நிகழ்வுகள் பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
• திடீரென்று ஷீலா பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்படி என்ன அவசரம்?
• எந்த அசாதாரண சூழலும் இல்லாத நிலையில், திடீரென்று முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டின் முதல்வர். பொது வாழ்விற்கு வந்த ஒருவரின் ராஜினாமாவிற்கான காரணத்தை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம். அதனால் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்ட ‘தனிப்பட்ட காரணத்தை' அவர் வெளிப்படையாக சொல்ல வேண்டும். ‘எங்கள் சின்னம்மாவை பதவியில் அமர வைக்க வேண்டும். அதற்காக பதவியை துறக்கிறேன்', என்று எழுதுவதில் என்ன தவறு இருக்கப் போகிறது? அப்படி வெளிப்படையாக அவர் எழுதாதபோது, அவரின் ராஜினாமா பல சந்தேகங்களுக்கும், அனுமானங்களுக்கும் இடம் கொடுக்கிறது.
• அவசரம், அவசரமாக முதல்வர் ராஜினாமா. சசிகலா சட்ட சபை குழுவிற்கு தலைவராக தேர்ந்தெடுப்பு. எதற்காக இந்த அவசரம்?
• சசிகலா மீது இருந்த வழக்கின் தீர்ப்பு ஒரு வார காலத்தில் வெளிவருகிறது என்ற அறிவிப்பும் தற்போது வெளியாகி இருக்கிறது.
• ஜெயலலிதாவிற்கு டிரீட்மெண்ட் கொடுத்த அப்பலோ நிர்வாகமும், லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கமளிக்கிறார். எதற்காக இந்த தன்னிலை விளக்கம்? என்ற கேள்வியை அவரிடம் கேட்டால், தமிழக அரசு அழைத்து விளக்கம் அளிக்கச் சொன்னது. விளக்கமளித்தேன் என்கிறார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டாக்டர்கள் விளக்கமளிக்கிறார்கள் என்கிறார்கள். வதந்தி நேற்றா முளைத்தது? இதே போன்ற விளக்கங்களை ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது ஏன் கொடுக்கவில்லை?
இவற்றையெல்லாம் பார்க்கும் போது அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் ஒருவரை சித்தனாகவும் ஆக்கலாம், பித்தனாகவும் ஆக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவையெல்லாம் சசிகலா என்ற பித்தளை பாத்திரத்தை தேய்த்து தங்கமாக மாற்றும் முயற்சி என்று நினைக்க வைக்கிறது. ஊடகங்களில் பன்னீர்செல்வத்தைப் பற்றி அதிமுக பொறுப்பாளர்கள் மோசமாக விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது. ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட எல்லோரும் ஜெயலலிதா என்ற சிங்கத்தின் புகழையும், அவரின் ஆதரவாளர்களையும் ஓரங்கட்டுகிறார்கள் என்பது நமக்கு புரிகிறது. ஆகையால், மத்திய அரசும், ஆளுனரும் சட்டப்படி நடப்பதைவிட, இந்த தருணத்தில் நியாயப்படி மக்களின் எண்ண ஓட்டங்களின் படி நடப்பதுதான் சிறந்தது.
- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com