முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

பாடாமல் முதல் பரிசு பெற்ற மாணவர்!

சுப்புடு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். கையில் ஒரு வெற்றிக் கோப்பையோடு வீட்டுக்குள் நுழைந்தான். அப்பாவிற்கு மகிழ்ச்சி. மகன் பேசினான்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:03 AM
பகிர்:


சுப்புடு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். கையில் ஒரு வெற்றிக் கோப்பையோடு வீட்டுக்குள் நுழைந்தான். அப்பாவிற்கு மகிழ்ச்சி. மகன் பேசினான்.

‘அப்பா! பாட்டுப் போட்டியில் எனக்கு இரண்டாவது பரிசு கிடைச்சிருக்கு', என்றான் மகன் மகிழ்ச்சியோடு.

‘ரொம்ப சந்தோஷம்! போட்டியில எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க?' என்று கேட்டார் அப்பா.

‘ரெண்டு பேர்', என்று அமைதியாக பதில் சொன்னான் மகன்.

மகனை முறைத்துப் பார்த்தார் அப்பா. பிறகு பேசினார்.

‘சரி. முதல் பரிசு பெற்றவன் உன்னைவிட அருமையாக பாடினானா?' என்று கேட்டார் அப்பா.

மகன் பதிலளித்தான்.

‘அவன் எங்க பாடினான்? முதல்ல நான் பாடினேன். நான் பாடி முடித்தவுடனே பரிசை எடுத்து அவன் கையில கொடுத்துட்டாங்க', என்றான் அப்பாவியாக.

பாடாமல் இருந்தவனுக்கு முதல் பரிசை  வாரிக்கொடுத்த பெருமை மகனைச் சேரும்.

இந்தக் கதையில் வருவதைப் போல எந்தப் பாட்டும் பாடாமல் முதல் பரிசு பெற்ற மாணவர்தான் மரியாதைக்குறிய எடப்பாடி பழனிசாமியின் அரசு. எதிர்க்கட்சி, சபாநாயகருக்கு எதிராக செய்த வில்லத்தனமும், அராஜகமும் பழனிசாமியின் அரசை பத்திரமாக கரைசேர்த்திருக்கிறது.

அசுர பலமுள்ள எதிர்கட்சிகளே இல்லாத சபையில் வாக்கெடுப்பு நடத்துவது ஜனநாயகமா? இதை சட்டம் அனுமதித்தால், அந்த சட்டத்தை எப்படி நாம் ஏற்றுக்கொள்வது? திமுக, காங்கிரஸ் இல்லாத சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதும், கூவத்தூர் விடுதியில் வாக்கெடுப்பு நடத்துவதும் ஒன்று. இதை நன்கு புரிந்து வைத்திருந்த எடப்பாடி பழனிசாமியைச் சேர்ந்த அதிமுககாரார்கள் அமைதி காத்தார்கள். வீரமாக முழங்கிய திமுக, அவர்களுக்கு வெற்றியை எளிதாக தாரைவார்த்துக் கொடுத்துவிட்டார்கள்.

ஸ்டாலின் அவர்களே! இன்றைய சூழலில் ரகசிய வாக்கெடுப்பு மிக அவசியம். ஆனால் சபாநாயகர் இதற்கு அனுமதிக்கவில்லை. ஒரு விஷயத்தை நாம் மனத்தில் கொள்ள வேண்டும். இது சட்டப்படி தவறல்ல. ரகசிய வாக்கெடுப்புக்கு அனுமதித்திருந்தால் அது ஜனநாயகப்படி மிகச்சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால், அவர் முழுமையான ஜனநாயகவாதி என்று பாராட்டியிருக்கலாம். ஆனால், அதே சமயம், அவர் அப்படி செய்யாததால் அவருக்கு எதிராக சபையில் அராஜகங்களை கட்டவிழ்த்துவிடுவது எந்த விதத்தில் நியாயம்? திமுக ஆட்சியில் எத்தனை முறை ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறீர்கள்?

ஸ்டாலின் அவர்களே! சபாநாயகரை ஓடவைத்து அவரின் இருக்கையில் அமர்ந்து வெற்றி வீரனைப் போல் கைகளை உயர்த்திக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? அவரின் இருக்கையை கீழே தள்ளிவிடுவதும், மைக்கை உடைத்தெறிவதும் எந்த விதத்தில் நியாயம்?

ஸ்டாலின் அவர்களே! திமுக உறுப்பினர்களை சபாநாயகர் வெறியேற்றச் சொன்ன போது சபையிலேயே அமர்ந்து தர்ணா செய்தீர்கள். அப்படி செய்யும் தர்ணாவிற்கு பயந்து சபாநாயகர் உங்களை அனுமதிப்பார் என்று எதிர்பார்த்தீர்களா? அப்படி கணக்குப் போட நீங்கள் உலகம் தெரியாத கத்துக்குட்டி அல்ல.

ஸ்டாலின் அவர்களே! அவைக் காவலர்கள் சபாநாயகரின் ஆணைப்படி திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சித்தார்கள். அவர்கள் தங்களுக்கு எதிரியல்ல. அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டு பிடித்தது ஏன்?

ஸ்டாலின் அவர்களே! சபையில் நடந்த வன்முறையை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். சபை ஒத்திவைத்த பிறகு சபாநாயகரிடம் சென்று திமுக உறுப்பினர்களின் செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தீர்கள். உங்கள் கட்சி உறுப்பினர்களை தவறு நடந்த இடத்தில் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தது எந்த விதத்தில் நியாயாம்?

நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது பெரும்பான்மை என்பது சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்படியில்லாமல், சபையில் இருப்பவர்களில் பாதிக்கும் மேல் ஓட்டளித்தால் போதும் என்ற விதி உண்மையான ஜனநாயக ஆட்சியை கொடுக்காது. பதிலாக நேற்று நடந்தது போன்ற கேளிக்கூத்துகளை அரங்கேற்றும்.

நேற்று ரகசிய வாக்கெடுப்பு நடந்தியிருந்தாலோ, அல்லது நியாயமான வாக்கெடுப்பு நடந்திருந்தாலோ முடிவு மாறியிருக்க வாய்ப்புகள் அதிகம். நேற்றைய நாடகம் பன்னீர் செல்வத்தின் திட்டம் தவிடுபொடியாக்கியதுதான் மிச்சம். அரசு தோற்க வாய்ப்பிருக்கிறது என்ற நிலை ஏற்பட்டிருந்தால், நிச்சயமாக பல அதிமுக உறுப்பினர்கள் பன்னீர் செல்வத்தின் நிலைப்பாட்டை ஆதரித்திருப்பார்கள். அப்படியில்லாமல், சும்மா உட்கார்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் முதல் பரிசை பத்திரமாக கொண்டுபோய் சேர்த்தது திமுகவின் வன்முறை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. நேற்று சபாநாயகரை அவமானப்படுத்தும் வகையில்தான் திமுகவின் ஒவ்வொரு நடவடிக்கையும் இருந்தது. திமுகவின் எண்ணம் மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதுதான் என்பது மாலையில் நடந்த நிகழ்வுகள் நமக்கு புரியவைத்தது.

ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் வன்முறையிலும், அராஜகங்களிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை கடந்த பத்து நாட்களாக நடந்த சம்பவங்களும், நேற்றைய சட்டசபை அராஜகங்களும் நமக்கு புரியவைத்துள்ளன. ஸ்டாலின் குழப்பத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டுள்ளார் என்று பலர் பேசுகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அராஜகம் செய்வதில் தானும் சளைத்தவன் அல்ல என்பதை ஸ்டாலின் உலகிற்கு புரியவைத்துள்ளார். திமுக கடந்த காலங்களில் செய்த தவறுகளை தேவைப்பட்டால் செய்யத் தயங்காது என்பதை நேற்றைய சம்பவங்கள் நமக்கு புரியவைத்துள்ளது.

ஒரு அராஜகமும், மற்றொரு அராஜகமும் மோதிக்கொள்ளும் போது வேடிக்கை பார்ப்பது வெற்றி பெருபவர்களே ஏற்றுக் கொள்வதற்காக அல்ல. நம் கண் முன்னே ஒரு அராஜகர் அழிவதைப் பார்க்கத்தான். இதை அராஜகவாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு விஷயம். ஸ்டாலின் அவர்களே! நேற்றைய தினத்தை “ஜனநாயகத்தில் கருப்பு நாள்” என்று உங்கள் முகநூலில் பதிவிட்டிருக்கிறீர்கள். இதே வார்த்தையை தங்களுக்கு எதிராக சபாநாயகர் பதிவிட்டிருந்தால், அதுவும் சரியான வாதமாகத்தான் இருக்கும்.
-சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.