கையிலிருப்பது தங்கத் தட்டு
ஒரு அரசன். அவனுக்கு இரண்டு வயதில் ஒரு மகன். அரசனை பழிவாங்க நினைத்தது ஒரு கூட்டம். ஒரு நாள் அந்த குழந்தையை கடத்திச் சென்றனர்.
ஒரு அரசன். அவனுக்கு இரண்டு வயதில் ஒரு மகன். அரசனை பழிவாங்க நினைத்தது ஒரு கூட்டம். ஒரு நாள் அந்த குழந்தையை கடத்திச் சென்றனர். அதை ஒரு பிச்சைக்கார கூட்டத்துடன் சேர்த்து விட்டனர். அந்த குழந்தை தான் ஒரு இளவரசன் என்பதை அறியாமல் பிச்சைக்காரர்களுடன் வளர்ந்து வந்தது.
பதினைந்து வருடங்கள் ஓடின. ஒருவழியாக தொலைந்த குழந்தையை கண்டுபிடித்தான் அரசன். இரண்டு வயதில் காணாமல் போன குழந்தை, பதினேழு வயதில் அரண்மனைக்கு திரும்பினான். அரசனுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சி. நாடே திருவிழாக்கோலம் பூண்டது.
அரசனுக்கு தங்கத் தட்டில் உணவளித்தார்கள். ஆனால் இளவரசன் சாப்பிடாமல் அமர்ந்திருந்தான். சோகத்தோடு அவனைப் பார்த்தார் அரசர்.
‘தந்தையே எனக்கு பசிக்கவில்லை. எனக்கு பசியெடுக்க வேண்டுமென்றால் நான் ஒரு காரியம் செய்ய வேண்டும்', என்று புதிர் போட்டான் இளவரசன்.
‘அது எந்த காரியமாக இருந்தாலும் அதை செய். உன்னுடைய நலனே முக்கியம்', என்றார் அரசர்.
சட்டென்று எழுந்தான் இளவரசன். தங்கத் தட்டை தூக்கிப் போட்டான். அழுக்கடைந்த தகர தட்டை கையிலெடுத்தான்.
‘அம்மா, தாயே பிச்சை போடுங்கம்மா', என்று உரக்க கத்தினான்.
அவ்வளவுதான் உடனடியாகக் அகோர பசி எடுத்தது இளவரசனுக்கு. வேகவேகமாக சாப்பிடத் தொடங்கினான்.
எவ்வளவு உயரத்தில் உட்கார வைத்தாலும் தனது பதினைந்து வருட பிச்சைக்கார வாழ்க்கையை அவனால் மறக்க முடியவில்லை.
இந்தக் கதை எதற்கு? சரி, இப்போதைக்கு இதை ஒரு ஓரமாக வைப்போம். கட்டுரையின் இறுதியில் சேர்ப்போம்.
இன்று 68வத் குடியரசு தினம். கொடியேற்றி மிட்டாய் கொடுத்து, விடுமுறை அளித்து எல்லோரும் கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னாவைப் பற்றி படிப்போம்.
பாரத் ரத்னா விருது 1954ம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 45 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டை அதிக காலம் காங்கிரஸே ஆட்சி செய்தது இது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. தற்போது வரை, அரசியல் சார்ந்தவர்களில் காங்கிரஸ் சார்புடையவர்களுக்கு மட்டுமே பாரத் ரத்னா விருது அதிகமாக வழங்கப்பட்டுள்ளது என்ற உண்மையையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் சாராத தியாகிகள் எவ்வளவு பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பினால், நமக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சும்.
2015ல் பாஜக அரசு மதன் மோகன் மாளவியாவிற்கும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும் வழங்கியது.
பதினான்கு வருடம் அந்தமான் சிறையில் கடும் தண்டனையை அனுபவித்த வீர சாவர்க்கருக்கு என்ன மரியாதை செய்தோம்? பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு அதைக்கூட அவரிடம் திருப்பித் தரவில்லை. சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது என்று பேசும்போதெல்லாம் அவரை அசிங்கப்படுத்தும் விதத்தில் பேசி வருகிறது காங்கிரஸ். இந்திய அரசியல் வரலாற்றில் அவர் செய்த தியாகங்களை எவரும் செய்ததில்லை.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், காங்கிரஸ் அல்லாத சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை அழுத்தி வைத்ததுதான் காங்கிரஸ் செய்த சாதனை. இதைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு வரலாற்று நிகழ்வை பார்ப்போம்.
சுதந்திர பிரகடனம் செய்வதற்கு முன் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரிட்டிஷ் அரசு ‘தி இண்டிபெண்டென்ஸ் ஆஃப் இந்தியா ஆக்ட்' சட்டத்தை நிறைவேற்றியது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டவுடன் பிரிட்டிஷ் அரசின் சாம்ராஜ்யவாதியான சர் வின்ஸ்டன் சர்ச்சில் வருத்தமடைந்தார்.
‘இந்த சட்டத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறுவழியில்லையா? இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்காமல் நம் பிடியிலேயே வைத்துக் கொள்ள முடியாதா?' என்று கேட்டார்.
‘இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதற்கான காரணம், அங்குள்ள ராணுவம் இப்பொழுது வெறும் ரொட்டிக்காக ஏங்கிக் கொண்டு இல்லை. மேலும், தற்போதைய நிலையில் பிரிட்டனுக்கு, இந்திய ராணுவத்தை அடக்கிவைக்கும் சக்தியும் இல்லை', என்று பதிலளித்தார் பிரதமர் கிளமெண்ட் அட்லி.
அட்லியின் கருத்தையே பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படுத்தினர்.
இது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வாதம். இதன் தொடர்ச்சியாக ‘தி இண்டிபெண்டென்ஸ் ஆஃப் இந்தியா ஆக்ட்' நிறைவேறியது.
இந்தக் கருத்துக்களை எழுதிய சாவர்க்கர், “சுதந்திரம் என்பது, புரட்சிக்காரர்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்திருந்தார். சாவர்க்கரின் கருத்தில் உண்மை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
யார் சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள் என்பது இப்போது முக்கியமல்ல. சுதந்திரம் என்பது ஒரு அணியின் சிறப்பான பணிக்கு கிடைத்த வெற்றி. இந்த அணியில், தீவிரவாதிகள், மிதவாதிகள் என்று எல்லோரும் இருந்திருக்கிறார்கள். தனித்தனியே செயல்பட்டாலும் இலக்கு சுதந்திரம் மட்டுமே.
பெற்ற சுதந்திரம் காங்கிரஸுக்கு மட்டும் சொந்தம் என்று தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் என்ற கட்சியின் பெயரில் செயல்படும் ஒரு அமைப்பு சொல்லிக் கொள்ளலாம். ஆனால், காங்கிரஸ் சொல்வதையும் தாண்டி சுதந்திரத்தில் காங்கிரஸ் சாரா சுதந்திர போராட்ட வீரர்களின் பங்கும் அதிகமாக இருக்கிறது. இதை சரியான முறையில் சந்தையிட பாஜக அரசு தவறிவிட்டது என்ற மனக்குறை எனக்கு உண்டு.
சரி, மீண்டும் முதலில் படித்த கதைக்கு வருவோம். கதையில் வரும் இளவரசனைப் போலவே இன்றைய பாஜக அரசும் செயல்படுகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.
‘பாஜகவே, மத்தியில் ஆட்சி பீடத்தில் இருப்பது நீங்கள். இதை நினைவில் கொள்ளுங்கள். இளவரசனுக்கு வந்த மனக்கலக்கம் உங்களுக்கும் இருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் மத்தியில் நீங்கள்தான் ஆட்சியில் இருக்கிறீர்கள். தியாகிகளை கெளரவப்படுத்தும் விஷயத்தில், இது நாள்வரை காங்கிரஸ் ஆட்சிக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னைப் போன்ற சாதாரண மனிதர்களால் உணரமுடியவில்லை.
திலகர், சாவர்க்கர், வ.உ. சிதம்பரம் பிள்ளை, பாரதியார், வாஞ்சிநாதன், பகத்சிங் போன்ற பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழந்தவர்களுக்கு இதுவரை ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை?
ஒரே இரவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற முரட்டு முடிவை எடுத்த மத்திய அரசுக்கு, காங்கிரஸ் சாரா சுதந்திர போராட்ட வீரர்களை கெளரவிப்பதில் எந்த பயமும் இருக்காது என்றே நினைக்கிறேன். மனமில்லை என்று வேண்டுமானால் அர்த்தம் கொள்ளலாம், தைரியமில்லை என்று சொல்ல முடியாது.
அதனால் மீதமிருக்கிற நாட்களிலாவது காங்கிரஸ் சாரா சுதந்திர போராட்ட வீரர்களை கெளரவப் படுத்தும் முயற்சியை எடுங்கள். தங்கத் தட்டை கையிலெடுங்கள். உண்மையான வரலாறு என்றுமே உங்கள் பக்கம் இருக்கும்.
ஜெய்ஹிந்த்
- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com