சிறப்புக் கட்டுரைகள்

மனிதகுலம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் 'சுற்றுச்சூழல்'

சோ.தெஷ்ணாமூா்த்தி

உலக சுற்றுச்சூழல் தினம் 1972 ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

சுற்றுச்சூழல்தான் உலகின் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக உள்ளது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் நாம் வாழும் இந்த உலகம். மரங்கள் முதல் மனிதர்கள் வரை நிலைத்து வாழ்வதற்கு இவை அனைத்தும் மிகவும் அவசியமானவை. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் அதன் எதிரொலியாக மற்ற நான்கும் பாதிப்புக்குள்ளாகும்.

21 ஆம் நூற்றாண்டில் மனித குலம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் சுற்றுச்சூழல் தொடர்பானதாகத்தான் இருக்கும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் இணக்கமாக இருந்த சுற்றுச்சூழல், வளர்ச்சி என்ற பெயரில் பொருளாதாரப் போட்டியில் நாடுகள் களம் இறங்கியபின் வெகுவாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி வசதியான வாழ்க்கையை அளித்த போதிலும் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டில் வளரும் நாடுகளைவிட வளர்ச்சி அடைந்த நாடுகளின் பங்கே அதிகம். காரணம் வளரும் நாடுகள் வாழ்வைப் பற்றி கவலை கொண்டுள்ளன. மாறாக வளர்ச்சி அடைந்த நாடுகள் வசதியைப் பெருக்குவது பற்றிக் கவலை கொள்கின்றன.

ஒரு அமெரிக்க குடும்பம் சராசரி இந்தியக்குடும்பத்தைவிட 40 மடங்கு அதிகமாகச் சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்கிறது. இந்நூற்றாண்டின் இடைக்காலம் வரையில் இயற்கை மீது அதிக அளவில் தாக்குதல் இல்லை. ஆனால், அண்மைக் காலத்தில் இயற்கை வளங்கள் தொலை நோக்கில்லாமல் சுரண்டப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இயற்கையை அத்துமீறிச் சீண்டுவதால் அதுவும் சீற்றம் கொள்கிறது. அதன் விளைவு வெள்ளம், வறட்சி, வறுமை, நிலநடுக்கம், உடல் நலக்கேடு, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சனைகள்.

இயற்கை அன்னை இலவசமாகத் தந்த இரு கொடைகள் நீரும், காற்றும். இன்று இரண்டுமே விலை பொருளாகிவிட்டன. தொழிற்சாலைகளின் கழிவால் நதி நீர் நஞ்சாகிறது. நீர் வங்கிகளான குளங்கள் குப்பை மேடுகளாகின்றன. ஒரு லிட்டர் பாலின் விலையைக் காட்டிலும், ஒரு லிட்டர் மினரல் வாட்டரின் விலை அதிகமாக உள்ளது. ஆலைப் புகையும், வாகனப் புகையும் காற்றை நோயின் தூதுவனாக்கி விட்டன. பியூட்டி பார்லர்கள்போல் ஆக்சிஜன் பார்லர்கள் பெருநகரங்களில் முளைக்கின்றன. நல்ல காற்றை சுவாசிக்க மணிக்கு 100 ரூபாய் தேவைப்படுகிறது.

உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும் உபயோகத்துக்கு உகந்த நீர் 0.66 சதவீதம் மட்டுமே. (கடல் நீராக 97.2 சதவீதமும், உறைந்த பனிக்கட்டிகளாக 2.14 சதவிதமும் உள்ளது) இந்த நீரும் நகர்ப்புறத்தின் வேகமான வளர்ச்சி, தொழிற்சாலைகளின் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசடைந்து வருகின்றன. உலகத்திலேயே அதிக அளவில் மழை பெய்யக் கூடிய சிரபூஞ்சியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அன்று எந்த நதிக்கரைகள் நாகரிகத்தின் ஊற்றுக்கண்ணாய் இருந்ததோ இன்று அதே நாகரிகத்தின் சின்னங்கள் நதிகளை நாசப்படுத்தி வருகின்றது.

ஆம்பூர், வாணியம்பாடி போன்ற நகரங்கள் பாலாற்றுப் படுகையையும், திருப்பூர், கோவை நகரங்கள் நொய்யலாற்றையும் பாழ்படுத்திவிட்டன என்பதை மறுக்க இயலாது. பூமித்தாயின் மடியில் தாவர இனம், விலங்கினம், மனித இனம் ஆகியவற்றிற்கிடையே சமச்சீர் நிலை உள்ளது. இவற்றில் ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுந்தாலோ இயற்கையின் சமநிலை சீர்குலைகிறது.

இயற்கையின் படைப்பில் காரணமின்றி படைக்கப்பட்ட உயிர்கள், பொருள்கள் எதுவுமேயில்லை. வன விலங்குகளையும், பறவைகளையும் போற்றும் பழக்கமும், பண்பாடும் உள்ள நாடு நம் பாரத நாடு. இயற்கைச் சூழ்நிலையில் பறவைகளையும், விலங்குகளையும் காண்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் தரக் கூடியது. உல்லாசப் பயணிகளை ஈர்த்து அந்நிய செலவாணியைப் பெற்றுத் தரக்கூடியது.

மரங்கள், செடிகள், கொடிகள், மலர்கள், வண்டுகள், ஊர்வன, பறப்பன என அனைத்துமே மண்ணிற்கு மகுடம் சேர்த்து மனித வாழ்க்கைக்கு வளமும், பொலிவும் சேர்க்கின்றன. இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொள்ளாமல் அழிவுப்பாதையை நோக்கி வீறுநடை போடுகிறோம் என்பது மிகவும் வேதனைக்குரியது. மரங்கள் இயற்கை கொடுத்த குளிர் சாதனம். நச்சுப் புகைகள், மாசுகள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தும் சாதனங்களாகவும் இவை உள்ளன. மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துவதுடன், மண் வளத்தை அதிகப்படுத்துவதும் மரங்களே. இதைக் கருத்தில் கொண்டே வன மகோத்சவ வாரம், அதாவது வன விழா வாரம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வனம் என்பது லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வை கொடுப்பது. மரம் என்றால் நீர், நீர் என்றால் உணவு, உணவு என்றால் வாழ்வு என்பதை நினைவில்கொள்ள வேண்டும். மனித குலத்தின் துணையின்றி இயற்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், இயற்கையின் துணையில்லாமல் மனிதனால் ஒரு நிமிடம் கூட உயிர் வாழ முடியாது. இயற்கையை அண்டிப் பிழைக்கும் ஒரு சாதாரண படைப்புதான் மனிதன் என்பதை நன்கு உணர வேண்டும். நம் வாழ்க்கைத் தரம் உயரவும், எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கைத் தரத்தைக் காக்கவும் இயற்கையைக் காக்கும் வகையிலும் சில ஒழுக்க நெறிகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

இயற்கை அனைத்து ஜீவராசிகளுக்குமாகத்தான் உண்டானதே தவிர மனிதத் தேவைக்காக மட்டுமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இயற்கை வளங்கள் எல்லையற்றவை அல்ல. எனவே அவற்றை வீணாக்கக் கூடாது. இயற்கையைப் பற்றிய ஆர்வமே இல்லாத போக்கை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். குடிப்பது, அசைவம் உண்பது, இயற்கையின் எந்த வளத்தையும் அல்லது அதன் உப வளங்களையும் ஊதாரித்தனமாக, முரண்பாடாகப் பயன்படுத்துதல் போன்ற தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும். அளவாக நுகர்வதும், அதன் விளைவாகக் கழிவுப் பொருட்களைக் குறைத்து, அசுத்தத்தையும் குறைப்பதாகிய எளிய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்.

இயற்கை வளங்களை பாதுகாத்தலுக்கு நான்கு சொற்களை நினைவில் நிறுத்த வேண்டும். கழிவுகளைக் குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், வளங்களை மீட்டல் என்ற நான்கு வகையாகும். இதனை கடைப்பிடித்தால் இயற்கை நலம் பேணுதலும், மக்கள் நலம் காத்தலும் இயலும்.

இயற்கையின் முக்கியத்துவம் உணராமல் மாசுபடுத்தியதால் நமக்கு மாபெரும் ஆபத்துக்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் வெப்பம் 6 முதல் 10 டிகிரி வரை உயரும். பருவ நிலை மாறும். விளைச்சல் குறையும். வறட்சியும், வறுமையும், பட்டினிச் சாவும் தினசரி நிகழ்வாகும். பனி மலை உருகும். வெள்ளம் கரை உடைக்கும். கடலோர நகரங்கள் காணாமல் போகும். தீவுகள் மூழ்கும் எனப் பிரளய எச்சரிக்கைகள் தொடர்கின்றன. இதுபோன்ற எச்சரிக்கைகள் மிகையான கற்பனைகள் அல்ல என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் உறுதிப்படுத்திக் கொண்டு வருகின்றன. வாழ்வதற்கான உரிமையை அரசியல் சட்டம் வழங்கியிருந்தாலும் இயற்கை வளமாக இருந்தால்தான் அது சாத்தியமாகும். மலர்களைச் சிதைக்காது தேனெடுக்கும் வண்டுபோல் இயற்கையை சிதைக்காது அதன் வளத்தைப் பெற வேண்டும்.

'இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் நிறைவேற்றுகிறது. ஆனால், பேராசைகளை அல்ல' என்ற மகாத்மாவின் கருத்தையும், அப்துல் கலாமின் தேசத்தைக் காத்திடுங்கள் என்ற நினைவையும், சுற்றுச் சூழலைக் காக்க அனைவரும் மரங்களை நடுங்கள் என்ற சமூக ஆர்வலரும், நற்சிந்தனையாளருமான விவேக்கின் எண்ணத்தையும் நினைவில் நிறுத்தி, இயற்கை அன்னையை புரிந்து கொண்டு அவளது மடியில் ஆனந்தம் கொள்வோம்.

அரசு மற்றும் அரசு சாரா துறைகள், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, நேரு யுவகேந்திரா, அரிமா சங்கம் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களும் சமூக உணர்வோடு இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டால்தான் எதிர்கால சந்ததியினருக்கு இந்த உலகை மிச்சம் வைக்க முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சி மட்டும் போதாது. வளர்ச்சியுடன் இணைந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அவசியம். பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாகக்கொள்ளாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சிந்தையில் கொண்டு செயல்பட்டால்தான் நினைத்த நிலைத்த வளர்ச்சி சாத்தியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

மூத்த வழக்குரைஞா்களுக்குப் பாராட்டு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்

பெருந்துறை சோழீஸ்வரா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழா

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆசிரியா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT