தீர்வுதான் என்ன? 
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... ஊருக்குள் இன்னும் எத்தனை ஞானசேகரன்கள்?

அரசு அமைப்புகளும் குற்றச் செயல்களும் ஞானசேகரன்களும் ஒன்றிணையும் இடத்தைப் பற்றி...

எம். பாண்டியராஜன்

ஒரு நாட்டின் மூன்றிலொரு பகுதியைச் சேர்ந்த மக்கள் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாக குறிப்பிட்ட பகுதியில் அரசமைப்பின் செயல்பாடுகள் முற்றிலுமாக அற்றுப்போய்விட்டன; காவல்துறை, ராணுவச் செயல்பாடுகளும் முடங்கிவிட்டன. கிளர்ச்சியாளர்களோ காடுகளுக்குள் இடங்களை மாற்றியவாறு தலைமறைவாக  அலைந்துகொண்டிருக்கிறார்கள். நாட்டில் காவலுக்கு யாருமில்லா இந்த சந்தர்ப்பத்தை சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒருகாலத்தில் திறந்துகிடந்தாலும் திருட்டுகள் நடக்காத பகுதிகளில்கூட பூட்டிக்கிடக்கும் வீடுகள் உடைக்கப்படுகின்றன. தினமும் திருட்டுகள், ஆங்காங்கே வழிப்பறிகள். தனியே இருக்கும் பெண்களிடம் தகாத செயல்கள். நாட்டிற்குள் நிலவும் மோசமான இந்தச் சூழ்நிலை பற்றிக் கிளர்ச்சியாளர்களின் தலைவருக்குத் தகவல் கிடைக்கிறது. இதற்கொரு நிரந்தர முடிவு கட்ட நினைக்கிற அவர், தன் நம்பிக்கைக்குரிய தளபதியை ஒரு நாள் நள்ளிரவுக்குச் சற்று முன்னர் அழைக்கிறார். ஊர்களில் இந்தக் குற்றச் செயல்களைச் செய்வோர், செய்வதாகச் சந்தேகிக்கப்படும் போக்கிரிகள் யார், யார்? எனத் தங்கள் உளவு அமைப்புகள் மூலம் விசாரித்து உடனே பட்டியலிடச் சொல்கிறார். நாளை விடியும்போது நாட்டில் மக்களுக்குத் தொல்லைகளே இருக்கக் கூடாது என ஆணை பிறப்பிக்கிறார். அதே இரவின் முடிவில் அதிகாலை 4 மணிவாக்கில் ஒவ்வொரு ஊரிலும் போக்கிரிகளைத் தேடித் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறார்கள் கிளர்ச்சியாளர்கள். பொழுதுபுலரும்போது ஊர்களுக்கு வெளியே மின்கம்பங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட அவர்களின் சடலங்கள். பிறகு நீண்ட காலம் ஊருக்குள் போக்கிரித் தனம் சுத்தமாக ஒழிந்துபோக, தப்புகள் செய்வதை நினைக்கவே எவரொருவரும் அச்சப்படும் நிலையேற்பட்டுவிட்டது! சுபம்!

இது நிஜம் அல்ல; வெறும் கதைதான்.

எனினும், ஒன்றுமறியா சாமானியர்களைப் பொருத்தவரை இந்தக் கதையைக் கேட்கவோ, படிக்கவோ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய கதைகளையோ அல்லது நிஜங்களையோ யாராலும் எதிர்பார்க்க இயலாது; முடியவும் முடியாது, நாடு முழுவதும் காவல்துறை இருக்கிறது; காவல்நிலையங்கள் இருக்கின்றன. காவலர்கள் இருக்கிறார்கள். நீதிமன்றங்கள் இருக்கின்றன. வழக்குரைஞர்கள் இருக்கின்றனர். நீதிபதிகள் இருக்கிறார்கள். விசாரணைகள் இருக்கின்றன. வாய்தாக்கள் இருக்கின்றன. மேல் முறையீடுகள் இருக்கின்றன.

ஆனால்...

தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் கல்வி பயிலும் மாணவி மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் என்கிற ஒற்றை நபரின் வழக்கை மட்டுமே தொடர்ச்சியாகக் கவனித்தால், பிரித்துப் போட்டு அலசினால், எல்லாமே அதிர்ச்சியளிப்பதாகத் தோன்றுகின்றன – சிறப்புப் புலனாய்வுக் குழு தற்போது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது.

டிசம்பர் 23 ஆம் தேதி இரவு இந்தக் கொடுமை நடக்கிறது. நண்பருடன் மாணவி இருக்கும் விடியோவை எடுத்து வைத்துக்கொண்டு, தன்னுடன் இருப்பதையும் விடியோவாக எடுத்து, தந்தையின் தொலைபேசி எண்ணையும் பெற்றுக்கொண்டு, தான் அழைக்கும்போதெல்லாம் வர வேண்டும் என்றும் மாணவியை மிரட்டி அனுப்பியிருக்கிறார் இந்த நபர்.

இன்னும் எண்ணற்ற எதிர்கால மாணவிகளின் நல்ல காலமோ என்னவோ, நல்லவேளையாக அவருடைய அறைத் தோழிகளும் குடும்பத்தினரும் காவல்நிலையத்தில் புகார் செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர் (இத்தகைய வல்லுறவு சம்பவங்களின் எண்ணிக்கைக்கும் காவல்நிலையங்களில் பதிவு  செய்யப்படும் புகார்களின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை எனலாம். எப்போதுமே இங்கே பெண்களுக்கு எதிரானதாக இருக்கும் பொதுப் புத்தி காரணமாகவும் காவல்நிலையம், வழக்கு விசாரணை, நீதிக்கான காத்திருப்புக் காலம், இவற்றால் வாழ்க்கையில் சமூகத்தால் நேரிடும் தொடர் விளைவுகள் போன்ற பல்வேறு காரணங்களாலும், பாதிக்கப்படும் பெண்களே முன்வந்தாலும்கூட அவருடைய குடும்பத்தினர் அல்லது சுற்றத்தினர் புகார்களைத் தவிர்க்கச் செய்துவிடுகின்றனர். இவற்றையெல்லாம் தாண்டி என்ன நடந்தாலும் சரி, யார் என்ன சொன்னாலும் சரி, எதிர்கொள்ளலாம் என்ற துணிச்சலும் அதற்கான பின்புலமும் உள்ளவர்களே வல்லுறவுகள் பற்றிப் புகார் செய்ய முன்வருகின்றனர். இல்லாவிட்டால் எல்லாமே ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசக் கதைதான்).

கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யவும், ஞானசேகரன் உள்பட சந்தேகப்படுகிற சில நபர்களை அழைத்து விசாரித்து விட்டு அனுப்பிவிட்டார்கள்; அப்போதும் அவரால் நல்லவராகக் காட்டிக்கொள்ள முடிந்திருக்கிறது. சில நாள்களில் மீண்டும் அழைத்து செல்போனை, உரிய முறையில் பரிசோதித்தபோது, விடியோக்கள் எல்லாமும் சிக்கின. ஞானசேகரனும் சிக்கிக்கொண்டார். இதற்குள்ளாகவே பிரச்சினை ஊரறிந்து மிகவும் பெரிதாகிவிட்டது.

உள்ளே செல்லக் கட்டுப்பாடுகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், சிக்கிக் கொள்ளும் வரையிலும் ஞானசேகரன் வீட்டுப் புழக்கடை மாதிரிதான் இருந்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழக வளாகம். நினைத்தபோது உள்ளே சென்று வந்துகொண்டிருக்கிறார் அவர். சற்று யோசித்துப் பார்த்தாலே எளிதில் யாராலும் முடிவுக்கு வர முடியும்; இந்த வளாகத்தில் இவர் இழைத்துள்ள முதல் குற்றம் இதுதான் என்று கூறிவிட முடியாது. ஆனால், இதற்கு முன் ஞானசேகரன் இழைத்திருக்கக் கூடிய இத்தகைய குற்றங்கள் பற்றி யாருமே – ஒருவர்கூட   புகார் எதுவும் செய்யவில்லை. ஒருவேளை இந்த மாணவியும் புகார் செய்யாமல் விட்டிருந்தால் எவ்விதத் தடங்கலுமின்றி ஞானசேகரனின் வேட்டை இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருந்திருக்கும்!

சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையின் மூன்று உயர் பெண் அலுவலர்களைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை அமைத்து விசாரிக்க அறிவுறுத்தியதால் விசாரணை கூடுதல் வேகம் பெற்றது.

இதற்குள்ளாகவே இந்த ஞானசேகரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் நடந்துவருகிற, அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவ, கைது செய்யப்பட்டவர் திமுக உறுப்பினர் அல்லர் என்று அமைச்சர் ரகுபதியே முன்வந்து மறுக்க வேண்டியதானது. கூடவே, வளாகத்தில் மாணவியை மிரட்டிய நேரத்தில் ‘யாரோ ஒரு சாரை’ ஞானசேகரன் குறிப்பிட்டதாகத் தகவல் பரவ, யார் அந்த சார்? என்ற கேள்வி இன்றுவரை மாறி மாறி ஒலித்துக்கொண்டிருக்கிறது (சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானமாக இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டபோது, யார் சார்? என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம்; யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினும் வாக்குறுதியளிக்க நேரிட்டது).

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவியைப் பற்றிய அடையாளங்களும் தகவல்களும் பொதுவெளியில் பரவ (இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையோ அடையாளங்களையோ வெளிப்படுத்தக் கூடாது என்கிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் இவ்வளவு பேர் இருக்க முடியுமா?), செய்தியாளர்களைச் சந்தித்து விலாவாரியான விளக்கங்களை அளித்தார் சென்னை காவல்துறை ஆணையர் அருண். வேறு எந்தப் பெண்ணிடமாவது ஞானசேகரன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தால் அவர்களை வரவழைத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, புகார் மனு பெற்று, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது அருண் தெரிவித்தார். ஆனால், இதுவரையிலும் யாரும் அவ்வாறு முன்வந்ததாகத் தெரியவில்லை. இன்னும் பல பெண்கள் / மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தொடருகிறது.

இந்தப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எல்லாமும் கையிலெடுத்துப் போராட்டங்களை நடத்தின. அரசுத் தரப்பிலும் ஆளுங்கட்சித் தரப்பிலும் மீண்டும் மீண்டும் விளக்கங்கள் தரப்பட்டுக் கொண்டிருந்தன.

போகட்டும். விஷயத்துக்கு வரலாம். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட, 37 வயதுள்ள ஞானசேகரன் என்கிற இந்த நபர், ஏதோ சுயம்புவாகத் தோன்றியவர் அல்லர், அல்லது வெளிநாட்டிலிருந்தோ, வெளி மாநிலங்களிலிருந்தோ இறக்குமதியானவரும் அல்லர். இவருக்கு ‘சிறப்பான’ டிராக் ரெகார்ட் இருக்கிறது!

இவருடைய குற்ற வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், உத்தரமேரூர் பக்கம் ஏதோவொரு கிராமத்தைச் சேர்ந்த இவர், 2013 முதல் 2018 ஆம் ஆண்டு வரை (அதற்கு முன்னதாக என்ன செய்துகொண்டிருந்தார் என்பது பற்றி உள்ளூரில்தான்  விசாரிக்க வேண்டும்) காஞ்சிபுரம் மாவட்டத்தில் மோசமான குற்றவாளியாக கார்கள், ஆடுகள் திருட்டு என ஆல் ரவுண்டராக வலம் வந்திருக்கிறார்.

2018-ல் ரூ. 25 லட்சம் பணம் கேட்டு ஒரு டைல்ஸ் நிறுவன உரிமையாளரைக் கடத்திச் சென்று ரூ. 12 லட்சம் பணம் பறித்துள்ளார். மீதி பணத்தைப் பெற முயன்றபோது, காவல்துறை விரித்த வலையில் சிக்காமல் இவர் மட்டும் தப்பியிருக்கிறார். எனினும், துப்பாக்கியுடனும் நண்பர்களுடனும் பின்னர் கைது செய்யப்பட்டுச் சிறைக்கும் சென்றுவந்திருக்கிறார்.

ஞானசேகரன் தொடர்பாக, பழைய வழக்குகளை எல்லாம் தேடித் துழாவியிருக்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு. இவருக்கு எதிராகச் சென்னை காவல்துறைப் பகுதியில் சுமார் 20 வழக்குகளும் பிற மாவட்டங்களில் தொழிலதிபர் கடத்தல் உள்பட 9 வழக்குகளும் இருக்கின்றன.

ஏற்கெனவே மூன்று முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் சிறைவைக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீது, தற்போது மீண்டும் குண்டாஸ் போடப்பட்டிருக்கிறது (இதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் அவருடைய தாய்).

2019 ஆம் ஆண்டில் நீலாங்கரை, கானாத்தூர் பகுதிகளில் திருட்டுகளில் ஈடுபட்டுவந்த இவர், திருந்தி வாழப் போவதாகக் காவல்துறையினரிடம் எழுதிக் கொடுத்துவிட்டு பிரியாணி கடை வைத்திருக்கிறார். ஆனால், வழக்கம்போல திருட்டுகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

2022 முதல் 2024 வரையில் பள்ளிக்கரணை பகுதியில் காரில் சென்று வில்லா மாதிரியிலுள்ள வீடுகளில் புகுந்து நகைகளைத் திருடியதும் அவற்றை விற்று கார் வாங்கியதும் பெண்களுக்காகச் செலவு செய்ததும் விசாரணையில் அவர் சொல்லிதான் காவல்துறைக்குத் தெரியவந்திருக்கிறது. இந்தப் பகுதியின் 7 திருட்டு வழக்குகளில் இவருக்குத் தொடர்புள்ளதும் உறுதியாகியுள்ளது.

இந்த வீடுகளில் 250 சவரன்கள் வரை இவர் திருடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், 100 பவுன் நகையும் ஒரு காரும் மட்டுமே தற்போது  பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஞானசேகரனின் வீடுகூட ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் - கோவில் இடத்திலும் மாநகராட்சி இடத்திலுமாகத்தான் இருக்கிறது. அகற்றுவதற்குத் தொடர்ந்து அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஞானசேகரனின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டதில், அபிராமபுரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 6 காவலர்கள் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர் எனத் தெரிந்திருக்கிறது. ஆனால், பிரியாணி வாங்குவது பற்றிதான் பேசுவோம் என்று காவலர்கள் தெரிவித்தார்களாம்.

இத்தனை ‘தனிச் சிறப்பு’களைக் கொண்டவரான ஞானசேகரனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அருகே நடந்துவர முடிந்திருக்கிறது; அமைச்சர் மா. சுப்பிரமணியனுடன் படம் எடுக்கவும் முடிந்திருக்கிறது – ஆனால், காவல்துறைக்கு மட்டும் இவரைப் பற்றி எதுவுமே தெரியாதாம்!

பாதிக்கப்பட்ட அந்த மாணவி மட்டும் துணிந்து புகார் செய்யாமல் போயிருந்தால்,  நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இன்னமும் இவர் எத்தகைய குற்றங்களைச் செய்துகொண்டிருப்பாரோ? யார் யாருடன் எல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்வாரோ? (இதற்காகவேனும் அந்தப் பெண்ணை அழைத்துப் பாராட்ட வேண்டும்; துணிச்சலுக்காக விருது வழங்க வேண்டும். ‘அந்தப் பெண் எதற்காக ஆண் நண்பருடன் தனியே செல்ல வேண்டும்? இதெல்லாம் சரியில்லை அல்லவா?’ என்று அப்போது கூச்சலிட்ட கலாசாரக் காவலர்கள் கொஞ்சம் எரிச்சலடைவார்கள், பரவாயில்லை).

உள்ளபடியே இந்த சமுதாயத்தில் இத்தகைய விஷ வித்துகள் ஏராளமாக ஊறித் திளைத்து, முளைத்து, வளர்ந்து, விருட்சங்களாகிப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன – யாருக்குமே தெரியாமலா? என்றால் நிச்சயமாக இல்லை.

பள்ளிகளில் இடைநிற்பதில் தொடங்கி, தெருக்களில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்பதில் தொடர்ந்து, ஒருவர் இருவராகச் சேர்ந்து, அல்லது தனியே சின்னச் சின்னக் குற்றங்களைச் செய்கிறார்கள் இவர்கள். ஏதேனும் ஒரு முறை காவல் நிலையத்தில் சிக்கிக்கொள்ளும்போது பலரும் நினைப்பதுபோல இவர்களில் பெரும்பாலானவர்கள் திருந்துவதில்லை. மாறாக, ‘அக்மார்க் முத்திரை’யைப் பெறுகிறார்கள். குற்றச் செயல்கள் நடைபெறும்போதெல்லாம் காவல்துறையினர் தேடிவர, ஒருகட்டத்தில் இரு தரப்பினருக்கும் நெருக்கமும் இணக்கமும் ஏற்பட்டுவிடுகிறது. சில நேரங்களில் டம்மி கேஸ்களை ஏற்றுக்கொண்டு காவல்துறைக்கே உதவுகிறதாகவும்கூட கூறப்படுகிறது. இவர்களைக் கண்டு அந்தத் தெரு அல்லது பகுதி மக்கள் அச்சம் கொள்ள, அவர்களே இன்னும் பெரிய குற்றங்களைச் செய்யத் துணிவு பெறுகிறார்கள். தொடர்ந்து, இருக்கிற ஏதேனும் அரசியல் கட்சிகளில் அல்லது புதிதாகத் தொடங்குகிற (வான்டட் அதிகமுள்ள) ரசிகர் மன்றத்தில், அரசியல் கட்சியில் அல்லது ஏதேனும் சாதி கட்சியில் / சாதி சங்கத்தில் இடம் பெறுகின்றனர், கூடுதல் பாதுகாப்புக்காக.  காவல்நிலையம் உள்பட லோகலில் பவராக இருக்கிற இவர்களை அந்த அமைப்புகளும் கண்டுங்காணாமல் அரவணைத்துக் கொள்கின்றன. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கிறார்கள். இரு தரப்புமாக வளர்கிறார்கள். இவர்களிலே இன்னும் ஒருபடி மேலே சென்று, சாதிரீதியிலான அடையாளத்தைப் பயன்படுத்தி, அரசியல் கட்சிகளிலும் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமும் செல்வாக்கும்  பெறுகிறார்கள் சிலர். அரசியல் கட்சிகளில் இணைவோர் பட்டம் பதவிகளைப் பெறுவதுடன், சூழ்நிலைக்கேற்ப கட்சிகளையும் மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க்கட்சியானாலும் இந்த அரசியல் கட்சிகள் - காவல்துறை – ஞானசேகரன்கள் என்ற கூட்டணி மட்டும் மாறுவதேயில்லை.

ஒவ்வொரு காவல்நிலைய எல்லையிலும், உணர்ச்சிவசத்தால் திடீரென நிகழும் கொலைகள் போன்ற குற்றங்களைத் தவிர, இதுபோன்ற பிற குற்றச் செயல்களில் ஈடுபடும் வழக்கமான நபர்களைப் பற்றிக் காவல்நிலையத்தினருக்குத் தெரியாதிருக்க வாய்ப்பேயில்லை எனலாம்; தெரியவில்லை என்று சொன்னால், ஒன்று அது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அவர்கள் எல்லாருமே ஏரியாவுக்குப் புதிதானவர்களாக இருக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டும்!

எல்லா இடங்களிலும் காவல்துறையினரை நிறுத்திவைத்து இத்தகைய குற்றச் செயல்களைத் தடுப்பது என்பது நடைமுறையில் இயலாதது. குற்றவாளிகள் மதிக்கப்பட மாட்டார்கள் என்ற எண்ணமும் தவறிழைத்தால் தண்டனை நிச்சயம் என்ற பயமும் மட்டுமே ஒழுங்கான சமுதாயத்தைச் சாத்தியமாக்கும். என்றால்,  இதற்கு அரசியல் – காவல்துறை – சமூகவிரோத சக்திகளின் கூட்டிணைவு முறிக்கப்பட வேண்டியதும் விலக்கப்பட வேண்டியதும் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை மட்டுமல்ல, பிற குற்றங்களை மட்டுப்படுத்துவதுகூட அவ்வளவு எளிதல்ல; ஞானசேகரன்களும் ஒருபோதும் ஒழிய மாட்டார்கள் (தொடக்கத்திலுள்ள கதையை வேண்டுமானால் நாம் மீண்டும் ஒரு முறை வாசித்து திருப்திப்பட்டுக் கொள்ளலாம்).

வெள்ளை மாளிகையில் ‘கட்டப் பஞ்சாயத்து!

கைகட்டி ஸெலன்ஸ்கி - டிரம்ப் - வான்ஸ்...

உன்னோட பிரச்சினையத் தீர்க்க நாங்க முயற்சி செய்யுறோம். நீ என்னடான்னா நாங்க சொல்றத கேட்க மாட்டேங்கிற.

எனக்கு இன்னா பிரச்சினைனு உங்களுக்குத் தெரியுமா? எங்க ஏரியாவுக்குள்ள வந்து பார்த்தீங்கன்னா தெரியும்.

நாங்க அமைதி ஏற்படுத்தலாம்னு பார்க்கிறோம். நீ என்னடான்னா எங்க ஏரியாவுக்கே வந்து எங்களையே தாக்கிப் பேசுற.

ஆமாம், உங்களுக்கு வந்தாதான் தெரியும், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி, உங்களுக்குன்னா ரத்தமா?

ஏய், முன்னாடி லூசா இருந்தவன் உன்ன ஏத்திவிட்டுட்டான். இப்ப நீ ரொம்ப வீக்காயிட்டே. உன்னோட கூட்டத்தையே வச்சு நீ கேம்லிங் பண்ற. உன்னிட்ட இறக்கிவிடறதுக்கு இப்போ கார்டே இல்லை, ஆனால், ஆடுவேன்னு அடம் பிடிக்கிற.

அண்ணன், உனக்கு எவ்ளோ நல்லது பண்ணீருக்காரு, ஒரு நன்றிகூட சொல்ல மாட்டேங்கிற நீ.

நாங்கதான் உனக்கு பொருள் எல்லாம் தந்துகொண்டிருக்கிறோம். இல்லேன்னா நீ ஊத்திக்கினு போயிடுவே. நாங்க எதுவும் தரலன்ன இரண்டு வாரத்துல பூடுவே.

ஆமாமாம், அந்தாளுகூட மூணு நாள்னு சொன்னாரு.

நீ அண்ணனுக்கு நன்றி சொல்லு முதல்ல. ம், மாட்டேங்கற.

நாந்தான் எல்லாருக்கும் நன்றி சொல்லிட்டேனே.

ஆமாம், அண்ணனைப் பாக்க வர்றப்போ, லுங்கி பனியனோட வரலாமா?

அதனாலென்ன, ஏரியால பேஜாரு. சரியான பிறவு சொக்காய் போட்டுக்கறேன்.

(ரஷியாவுடனான போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் துணை அதிபர் வான்ஸும் பேச்சு நடத்தினர். நேரலையாக இந்தப் பேச்சு வார்த்தை ஒளிபரப்பாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. இது அந்தப் பேச்சுவார்த்தை அல்ல; நம்மூர் லோக்கல் வெர்ஷன்!)

இதையும் படிக்க |சொல்லப் போனால்... இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT