முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

பசியாற சோறு... நினைவாக மரக்கன்று..!

கோவை மாவட்டத்தில் சமூகச் சேவையில் ஈடுபட்டு வரும் கே. ராஜசேதுமுரளி பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 3:50 pm IST
கே. ராஜசேதுமுரளி - படங்கள்: மு.சச்சின் துவாரகா
பகிர்:

கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்தவர் கே. ராஜசேதுமுரளி (55). குடும்பச் சூழலால் 9 ஆம் வகுப்புடன் தனது பள்ளிப் படிப்புக்கு விடை கொடுத்தவர். தனது இளமைக் காலங்களில் வறுமை, குடும்பச் சூழலால் படிக்க முடியாத வருத்தம் கொண்ட நிலையிலும், தனக்கு வசதி, வாய்ப்புகள் பெருகினால் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதுடன், அடித்தட்டு மக்களின் பசியைப் போக்க உணவளிக்க வேண்டும் என சிறு வயதிலேயே சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.

அதன் தொடக்கமாக, பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் வீட்டு விஷேசங்களில் மீதமாகும் உணவுகளைச் சேகரித்து கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வழங்கத் தொடங்கினார். அத்துடன் வெளியூர்களில் இருந்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து தங்கும் நோயாளிகளின் குடும்பத்துக்கு இலவசமாக உணவு வழங்கி உதவினார். அவரது இந்த சேவை மனப்பான்மையைப் பாராட்டிய மக்கள், விழாக்களில் உணவு சமைத்து, ஏழை மக்களுக்கு உதவும் வகையில் அவரிடம் ஒப்படைக்கத் தொடங்கினர். இந்த உந்துதலால், கடந்த 2000ஆம் ஆண்டு பசியாற சோறு என்ற அறக்கட்டளையை நிறுவி, ஆயிரக்கணக்கான பசித்த மக்களுக்கு உணவளிக்கும் சேவகனாக உருவெடுத்தார். அவரது சேவையைப் பாராட்டி, பலரும் அவரிடம் ஏழைக் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருமாறு கூறுவதுண்டு. அவர்களிடம் பெறும் தொகையில், பிரபலமான உணவகங்களில் இருந்து, குழந்தைகளுக்கு உயர்தர உணவுகளை வாங்கித் தருகிறார். அதேபோல், கிராமங்கள் மற்றும் அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளை அழைத்துச் சென்று தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

வறுமையால் படிப்பைக் கைவிட்டதால், படிப்பின் முக்கியத்துவத்தை அறிந்த அவர், உணவு மட்டுமன்றி, ஏழைக் குழந்தைகளுக்கு சீருடைகள், நோட்டு, புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறார். இச்சேவைக்கு பெரும் பணக்காரர்கள் மட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் கூட தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். அவர்களின் ஆதரவால் ஏழை மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள் மற்றும் கல்வி உதவிகள் வழங்கப்படுகின்றன. இவர்களுடன் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குடும்பத்தினரின் ஆதரவற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு வைபவங்களும் சிறப்பாக நடத்தி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வரை 167 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சேவைப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள கே.ராஜசேதுமுரளி, நம்மிடம் கூறுகையில், கடந்த 2018ஆம் ஆண்டு ஒருநாள் இரவில் வந்த கைப்பேசி அழைப்பு தான் என் சேவையை புதிய திசைக்கு மாற்றியது எனலாம். அந்த கைப்பேசி அழைப்பில் பேசிய நபர், குனியமுத்தூர் அருகே குப்பைமேட்டில் வயதான பெண்ணொருவரின் உடல் அநாதையாக கிடப்பதாகத் தெரிவித்தார். பின்னர், இறந்தவர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட, குப்பைகளை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு மூதாட்டி என்பதை அறிந்து கொண்டேன். உயிரிழந்த அவர் ரூ. 32 ஆயிரம் பணத்தை தனது உடைமைகளில் வைத்திருந்தார். அந்த மூதாட்டிக்கு இறுதி சடங்கு முடிந்த பிறகு, அப்பெண்ணிடம் இருந்த பணம் குறித்து போலீஸாரிடம் தெரிவித்தேன். அப்பணத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துமாறு தெரிவித்தனர். இச்சம்பவம் எனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மரியாதையின்றி, அடக்கம் செய்ய ஆளில்லாமல் யாரும் இவ்வுலகை விட்டு செல்லக் கூடாது என நினைத்தேன்.

அதன் விளைவாக, கோவை ஆத்துப்பாலம் மின் மயானத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ஏற்றுக் கொண்டேன். மயானம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு உடல்களை எரியூட்ட, மாநகராட்சி நிர்ணயித்துள்ள ரூ. 2,000 தகனக் கட்டணத்தை செலுத்த முடியாத குடும்பங்களுக்கு எனது சொந்தப் பணத்தில் கட்டணம் செலுத்தப்படுகிறது. தற்போது வரை 15 குடும்பங்களுக்கு கட்டணம் செலுத்தி உதவியுள்ளேன்.

இறுதிச் சடங்குக்கு தேவையான மஞ்சள், எண்ணெய், சேலை, வேஷ்டி உள்ளிட்ட 23 வகையான பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. உடல் தகனம் செய்யப்பட்ட பிறகு, அந்த குடும்பத்துக்கு உணவு அளிக்கப்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு மரக்கன்று வழங்கப்படுகிறது. உடல் தகனத்துக்கு பிறகு மரக்கன்று வழங்கும் ஒரே மயானம் எங்களுடையது தான். அந்த மரக்கன்றை இறந்தவரின் குடும்பத்தார் நட்டு வளர்க்கும் போது, அது அன்புக்குரியவர்களின் உயிருள்ள நினைவாக மாறுகிறது. நான் பொறுப்பேற்ற பிறகு ஆத்துப்பாலம் மின் மயானத்தில் 370 உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் இறுதிச் சடங்கு பொருள்களும், மரக்கன்றுகளும் எவ்விதக் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.

வாழ்வதற்கு வயிறார உணவு வழங்கி, வாழ்க்கையை முடித்தவர்களைத் தகனம் செய்ய சடங்குப் பொருள்கள் கொடுத்து, இறந்தவர் நினைவாக மரக்கன்றுகள் அளிப்பதும் மனிதநேயத்தின் உச்சம் என்றால் அது மிகையில்லை.

summary

K. Rajasethumurali, who is engaged in social service in Coimbatore district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments