முகப்பு
தினமணி கதிர்

எங்களின் சிரிப்பு

நான் எங்கள் மாமரத்து வீட்டையே பார்த்தபடி இருக்கிறேன். என்னால் நம்பவே முடியவில்லை. முதலில் இது என் வீடுதானா? என்ற சந்தேகமே வந்தது.

Updated On : 31 மே 2026, 11:19 am IST
பகிர்:

நான் எங்கள் மாமரத்து வீட்டையே பார்த்தபடி இருக்கிறேன். என்னால் நம்பவே முடியவில்லை. முதலில் இது என் வீடுதானா? என்ற சந்தேகமே வந்தது. பிறகுதான் நாங்கள் இருந்த வீடா என்ற கேள்வியே வந்தது. என் குறும்பையும் கொண்டாட்டங்களையும் சின்ன சிணுங்கல்கூட இல்லாமல், முழுவதும் புன்னகையோடு உள்வாங்கி, என்னை தாங்கிக் கொண்ட வீடு இதுதானா? இத்தனை காலத்துக்குப் பிறகு நான் மூச்சு வாங்க மகிழ்ச்சியோடு ஓடோடி வந்தது இந்த வீட்டைப் பார்க்கத்தானா? என்ற கேள்விகள் என்னை அழுத்த ஆரம்பித்தது. என் அன்பு கணவர் கவினும் அதிர்ச்சியோடு அதே கேள்வியைத்தான் கேட்டார்.

நான் பதில் சொல்லாமல் மேலும் கண்கலங்க அந்த வீட்டையே பார்த்தபடியே நின்றிருந்தேன்.

எங்கள் பழைய கிராமத்து வீட்டைப் பார்க்க வேண்டுமென்ற என் ஆசையை கவினிடம் நான்தான் தெரிவித்தேன். அவர் சரி என்று சொல்லும் விநாடிக்குள்ளாகவே மனதில் அழகழகாய் அத்தனை பூக்கள் எப்படி மலர்ந்தன என்று தெரியவில்லை. சின்ன வயதின் ஞாபகங்கள் அவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு விலகி விடுவதுமில்லை. எல்லா வயதிலும் அது ஓர் அழகான பட்டாம்பூச்சியைப் போல் பின் தொடர்ந்தபடியே இருக்கிறது. எங்கள் அதீத குறும்புகளை, அன்பில் திளைத்த நாள்களை, எங்கள் பெரும் உறவுகள் விட்ட மூச்சுகளை அந்த வீட்டின் அறைகள் நினைவில் வைத்திருக்குமா? என்ற கேள்விகளுடன்தான் நான் கிளம்பினேன்.

Advertisement

Advertisement

''உங்க மாமரத்து வீட்டுல இப்ப யாரு இருக்கா அகல்யா?''

''நம்ம சொந்தம்னு யாருமில்ல கவின்... அந்த வீட்டை வாங்கினவங்க இருக்கலாம். நாம போறோம், பார்க்கிறோம், வந்திடுறோம்...''

நாங்கள் கோயம்புத்தூரிலிருந்து கிளம்பிக் கொண்டோம். கார்தான். பொள்ளாச்சியில் இருந்து அழியார் போகிற வழியில்தான் எங்கள் ஊர் இருந்தது. சமுத்தூர்!

ஊர்த்திருவிழாதான் முதலில் ஞாபகம் வந்தது. சொந்தம் மொத்தமும் கூடியிருக்கும். வரும் சொந்தங்கள் திருவிழாவைப் பார்ப்பதைவிட எங்கள் மாமரத்து வீட்டைப் பார்க்கத்தான் அதிகம் ஆசைப்படும். தாத்தாதான் அந்த வயதிலும் உற்சாகமாய் அந்த வீட்டைக் காட்டும் ஆர்வத்தில் இருப்பார்.

வீட்டின் மையமாக இருக்கும் அந்த ஹாலில் இருந்துதான் தாத்தாவின் விவரிப்புகள் தொடங்கும். வீட்டில் இடது கோடியில் மாமாவின் அறை. அதே வரிசையில் கடைசியில் சித்தப்பா சித்தியின் அறை. அதன் எதிர்ப்புறம் கொஞ்சம் பெரியதான எங்கள் அறை. தோட்டத்தில் விளைந்த நெல், சோளம், கம்பென மூட்டைகள் அடுக்கிய அறை எங்களுக்கு அடுத்து இருந்தது. விறகுகள் மூட்டி புகைப்படிந்த அடுப்படி இருக்கும் சமையலறையென தாத்தா எல்லாம் காட்டுவார்.

உள்ளேயே மாடிக்குப் போகும் படிக்கட்டும் இருக்கும். மாடியில்தான் தாத்தா, பாட்டியின் அறை இருக்கும். அந்த அறைக்கு ஃபேனே தேவையில்லை. வெளிச்சமும் காற்றும் அமோகமாய் இருக்கும் . அந்த அறை எனக்கு மிகப்பிடிக்கும். தாத்தாவின் அகலமான அந்த தேக்குக் கட்டிலில் எல்லோரும் அமர்ந்தார்கள். நான் எப்போதும் போல் மகிழ்ச்சியாய் அதில் உருண்டு பார்த்துக் கொண்டிருந்தேன்.

தாத்தாவின் அறை ஜன்னல் வழியாக எங்கள் தோட்டமும் தெரியும். பிறகு கீழே வந்தோம். வீட்டைச் சுற்றிலும் இருக்கும் தோட்டம் போனோம். தாத்தா எல்லோர்க்கும் இளநீர் வெட்டித் தந்தார். வீட்டின் முன் புறம் இருந்த அந்த மாமரம்தான் எல்லோர்க்கும் பிடித்திருந்தது.

மூன்று வேளையும் அந்த பெரிய கூடத்தில்தான் சாப்பாட்டு பந்தி நடக்கும். சித்தப்பாவும் மாமாவும் சமையலை கவனித்துக் கொள்வார்கள். அப்பாவும் அம்மாவும் வந்தவர்களை கவனிக்க வீடே மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். திருவிழா முடிந்து ஊர் திரும்பும்போது கண்ணீருடன் அந்த வீட்டை திரும்பிப் பார்க்காமல் யாரும் நகர்ந்ததில்லை. தாத்தாவிடம் 'மறுபடியும் திருவிழா எப்ப தாத்தா வரும்?' என்பேன். எனக்கு பதில் சொல்ல திரும்பும் தாத்தாவின் கண்களிலும் கண்ணீர் இருக்கும்.

எங்கள் கார் ஊருக்குள் நுழைந்ததுமே மயில்சாமியின் டீக்கடையில்தான் நிறுத்தச் சொன்னேன். மயில்சாமி அப்பாவின் நண்பர். உடனே அவர் பெஞ்சை துடைத்து, மகிழ்ச்சியோடு உட்காரச் சொன்னார். மனைவியை அழைத்து, ''யார் வந்திருக்கா பாரு?'' என்றார். பிறகு எங்களுக்கு நுரை ததும்பும் டீ வந்தது. சம்பிரதாய குடும்ப விசாரணைக்குப் பிறகு நாங்கள் வந்த விஷயத்தைப் பற்றிச் சொன்னேன்.

''இல்ல மாமா... மாமரத்து வீட்டைப் பார்க்கணும்னு தோணுச்சு... அதான் வந்தோம்...''

கேட்ட மயில்சாமி மாமாவின் கண்களில் சட்டென இருள் சூழ்ந்த மாதிரி இருந்தது.

''எதுக்கு பார்க்கணும் கண்ணு?'' என்றார் அத்தை.

''சும்மாதான் அத்தை...''

''அந்த வீட்டில இருந்த சின்னராசு குடும்பம் அத விக்கணும்னு பார்க்கறாங்க. ஒருவேளை அத கேள்விப்பட்டு வாங்க வந்துட்டீங்கன்னு நினைச்சேன். அப்படி எதுவும் ஆசை இருந்தா உடனே விட்டிரு அகல்யா...''

மனம் உடனே எனக்கு கனமாகிவிட்டது.

''ஏன் அந்த வீட்டுக்கு என்னாச்சு? ஏன் அதை அவங்க விக்கப்பார்க்கறாங்க?''

''உங்ககிட்ட இருந்து வீட்ட அவங்க வாங்கினதுக்கப்பறம் அந்த வீட்டில இருந்தவங்க யாருக்குமே நிம்மதியில்ல. எப்பப்பார்த்தாலும் சண்டைதான். கடைசியா என்ன நடந்துச்சு தெரியுமா கண்ணு?''

''என்ன ஆச்சு மாமா..?''

''அந்த வீடு எப்ப வாங்கினாங்களோ அப்ப இருந்து அந்த வீட்டுல பிரச்னைதான்... தீரவேயில்ல. அந்த வீட்டோட மருமகள் ஜோதி. ஒருநாள் நடுக்கூடத்தில தூக்குப் போட்டு செத்துப் போயிட்டா. அவங்க அத காலிப் பண்ணிட்டு பக்கத்து ஊருக்குக் குடிப்போயிட்டாங்க. அத விக்கப் பாங்கறாங்க... முடியல. ஏன்னா ஜோதியோட ஆவி இன்னும் அந்த வீட்டிலதான் இருக்குன்னு சொல்றாங்க. நீங்க ஏதாவது அந்த வீட்டை வாங்கற ஐடியாவோட வந்துட்டீங்களோன்னு நினைச்சுட்டேன் கண்ணு...''

எல்லாவற்றையும் நான் அதிர்ந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தேன்.

''அப்படி எதுவுமில்ல...'' என்ற என்னால் அதற்குப் பிறகு பேசவும் முடியவில்லை.

எங்கள் மாமரத்து வீடு மீண்டும் என் மனதில் வந்தது. நான் பள்ளிக்கூடம் விட்டு வந்தால் என்னுடன் படிக்கும் மைதிலி, சுமதி, அமுதா, ராஜா என அனைவரும் என்னுடனே என் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ஒரே விளையாட்டுதான். கட்டம் கட்டிய பாண்டி ஆட்டம் நடுக்கூடத்தில் நடக்கும். வீடே எங்கள் சத்தங்களால் அதிரும். தாத்தாவோ அப்பாவோ ஒருநாளும் கோபித்துக் கொண்டதில்லை.

பிறகு மாமர நிழலே கதியென இருப்போம். ராஜா மரமேறுவதில் கில்லாடி. எல்லோர்க்கும் மாம்பழங்களை மேலிருந்தே வீசுவான். எனக்கு மட்டும் அவன் அப்படிச் செய்ததே இல்லை. கீழே இறங்கி வந்து தனியாக கையில் தருவான். நான் என் சட்டை முழுவதும் சாறு ஒழுக அதை ரசித்துச் சாப்பிடுவதை அவன் ஏன் அப்படி ரசித்துப் பார்த்தான் என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

இரவு தூங்குவரை நண்பர்கள் எங்கள் வீட்டிலேயே இருப்பார்கள். நான் ஒருநாள் மாமா அறையில் விளையாடிவிட்டு அங்கேயே தூங்கிக் கொள்வேன். ஒருநாள் சித்தப்பாவின் அறை. மறுநாள் தாத்தாவின் அறை. என்னைத் தேடி வந்துதான் அப்பா தூக்கிப் போவார். அந்த ஆனந்த தூக்கத்தை அதற்குப் பிறகு அனுபவித்தேனா என்பது ஞாபகத்தில் இல்லை.

என் ராஜா. என் இனிய ராஜா. அவனை தனியாகச் சொல்லாமல் என் நினைவை முழுமைப்படுத்த முடியாது. எனக்குப் பிடித்த ஒளிந்து விளையாடும் விளையாட்டில் அவனே பிரதானமாக இருப்பான். அவ்வளவு பெரிய வீட்டில் யார் எங்கு ஒளிந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது கடினம். என்னைக் கண்டுபிடிப்பது இன்னும் கடினம். அரிசி மூட்டைகள் இருக்கும் சந்துகள்தான் மிக மறைவான இடங்கள். அதிகம் நான் அங்குதான் ஒளிவேன். ராஜா பெரும்பாலும் என் பின்னால் வந்துதான் ஒளிவான். ராஜா என்னையே பார்ப்பான். என்னை மிக நெருங்கி வந்து அந்த வியர்வையை விரல்களால் மெல்ல துடைத்து விடுவான். வெளியே போகலாம் என்றாலும் அவன் நகரவிடமாட்டான். அதன் காரணமெல்லாம் எனக்கு அப்போது புரிந்ததில்லை. அந்த முதல் காதலின் வாசனையை நான் உணர்ந்த போது நாங்கள் அந்த வீட்டை இழந்திருந்தோம்.

மாமா கோயம்புத்தூரில் ஒரு பருத்தி மில் ஆரம்பித்ததிலிருந்துதான் எல்லாம் இழப்புகளும் தொடங்கியது. கூட இருந்த நண்பர்கள் செய்த துரோகம் அவரை பெரும் நஷ்டத்தில் கொண்டு போய்தான் நிறுத்தியது. தாத்தா மாமாவைத் தூக்கி நிறுத்த முதலில் தோட்டத்தைத்தான் விற்றார். அப்படியும் மாமாவால் நிமிரவே முடியவில்லை. பிறகு துவண்டு போன தாத்தாவுக்கு வந்த நெஞ்சுவலி அவரை முடக்கிப் போட, அதற்குப் பிறகான இதய சிகிச்சைக்காய் வீட்டையே விற்க வேண்டி வந்தது.

தாத்தா எவ்வளவோ தடுத்துத்தான் பார்த்தார். ''நான் போனா பரவாயில்ல... நம்ம பரம்பரை வீடு என்னைக்கும் இருக்கட்டும்...'' என்றார்.

அம்மா கேட்கவே இல்லை. உங்களைவிட எங்களுக்கு வீடு பெரிசில்லை. வீடு விற்கப்பட்டது. நாங்கள் கண்ணீரோடு கோயமுத்தூருக்குக் குடிபெயர்ந்தோம்.

அதற்குப் பிறகு தாத்தா அதே துயரத்தில் கண்ணீரோடு மறைந்தார். அப்பா ஒரு மில்லுக்கு வேலைக்குப் போனார். மாமா குடும்பம் திருப்பூர் போனது. சித்தப்பா பெங்களூர். நான் இழப்பின் வலிகளோடுதான் படித்தேன். கிடைத்த நல்ல வேலை. சிறப்பான வாழ்க்கை. அங்கேயே கிடைத்த என் காதல் கணவன் கவினுடன் நடந்த கல்யாணம். இப்போது கை நிறைய சம்பாரித்தாலும் இழப்புகளின் வலி குறைந்த மாதிரியே தெரியவில்லை. ஆறுதலுக்காக எங்கள் மாமரத்து வீட்டைப் பார்க்க வேண்டும் என்று தோன்ற, நான் சொன்ன உடனேயே கவின் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.

எங்கள் ஊரின் ஓரமாகத்தான் அந்த அம்மன் கோயில் இருந்தது. அங்கே வந்து அமர்ந்து கொண்டோம். நண்பர்களைப் பார்க்கத் தோன்றவில்லை. கவின் என்னிடம் எந்தப் பேச்சும் கொடுக்கவில்லை. என்னை அமைதியாக விட்டுவிட்டான். காலத்தின் குணம் மட்டும் புரிவதே இல்லை. அது வில்லனா, கதாநாயகனா எனப் புரியாத குழப்பத்தில் இருந்தேன். நான் அந்த கோயிலையே பார்த்தேன்.

''அம்மா... நீங்க யாரைப் பார்க்க வந்தீங்க?''

நான் திரும்பிப் பார்த்தேன். அந்தக் கோயிலின் பூசாரிதான் நின்றிருந்தார்.

''என்ன மாதவண்ணா... மறந்துட்டீங்களா?''

மாதவண்ணா என்னை உற்றுப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தார்.

''அடடா... அகல்யாம்மாவா! நல்லாயிருக்கீங்களா? வீட்டுல எல்லாம் சௌக்கியமா? பார்த்து வருசமாச்சில்ல... அதான், கொஞ்சம் மறந்துட்டேன். என்னம்மா திடீர்னு நம்ம ஊர்ப்பக்கம்?''

''எங்க மாமரத்து வீட்டைப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தோம்...'' என்று நான் சொன்னதும் அவர் முகம் மாறியது.

''பார்த்துட்டுப் போங்க... ஆனா, அத வாங்கற எண்ணமிருந்தா விட்டுருங்கம்மா...''

நான் பதில் சொல்லாமல் அவரையே பார்த்தேன். அவரே தொடர்ந்தார்.

''எப்படியிருந்த வீடு. நினைச்சாலே கஷ்டமாயிருக்குமா... வாழ்ந்து கெட்டவங்களோட வீடுன்னு முதல்ல பேரு இருந்துச்சு. அப்புறம் அந்த வீட்டுல சாவெல்லாம் ஆகி... இன்னைக்கு பேய் வீடுன்னு பேராயிடுச்சு. அந்த வீட்டுக்காரங்க அத விரட்ட என்னைத்தான் கூப்பிட்டு பூஜையெல்லாம் போடச் சொன்னாங்க... அதுகிட்ட ஒண்ணும் பலிக்கல... ராத்திரியெல்லாம் அழுதுட்டே இருக்கு... அந்த அழுகையை இன்னைக்கும் நிறுத்தவே முடியலம்மா...''

நான் அமைதியாக இருந்தேன்.

பிறகு நான் சொன்னேன், ''கவின்... நம்ம மாமரத்து வீட்ட போய்ப் பார்த்துட்டு வரலாமா?''

நான் மாமரத்து வீட்டைப் பார்த்தபடியே நின்றிருந்தேன். முன்னால் வீட்டின் அடையாளமான அந்த மாமரம் பச்சையே காணாமல் முற்றிலும் காய்ந்த கிளைகளோடு இருந்தது. சுற்றியிலும் இருந்த அந்த தென்னைமரங்களையும் காணவில்லை. மரங்கள் சூழ்ந்த ஒரு காட்டுக்கு நடுவே இருப்பதாகத் தோன்றும். அந்த வீடு இப்போது அப்படியில்லை. ஓர் அரச மரம் மட்டும் தப்பித்து வீட்டின் சுவரில் ஏறி மறைய முயற்சிப்பதைப் போலிருந்தது. வீட்டில் பல பகுதிகள் உடைந்து எலும்புகளைப் போல் செங்கல் தெரிந்தது. நொடிந்து போய் தனித்து விடப்பட்ட ஒரு வயதான கிழவியின் தோற்றம் போலிருந்த அந்த வீடு எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அந்த வீட்டுக்குள் போய் மோதித் திரும்பும் காற்றில் சோகத்தில் ஓர் அமானுஷ்யம் கலந்திருப்பதாய் உணர்ந்தேன்.

'எங்கள் ஆனந்த சிரிப்புகள் எப்படி ஒரு பெண்ணின் அழுகையாய் மாறியது?' என்ற கேள்வி வந்தது.

''அகல்யா... சல் வீ மேக்கிய மூவ்? ப்ளீஸ்...''

''நினைவுகள் சாதாரண விஷயமல்ல கவின். நிறைய மகிழ்ச்சிகளால... நிறைய வலிகளால உருவாகக் கூடியது. அவ்வளவு சீக்கிரத்துல அதிலிருந்து விடுபட முடியாது. அதுதவிர... நினைவுகளோட முடிவு துயரமா இருக்கக்கூடாது இல்லையா...''

''என்ன சொல்ற அகல்யா?''

''நானே இந்த வீட்ட வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அந்த மாமரத்துல மறுபடியும் ஒரு துளிரையாவது நிச்சயம் வரவைப்பேன் கவின்...'' என்று நான் சொல்ல சொல்ல, வீட்டின் உள்ளிருந்து சிரிப்பு சத்தம் கேட்பதாக உணர்ந்தேன். அது எங்களின் பழைய சிரிப்பு சத்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.