தலையங்கம்

ஏன் இப்படியொரு ஆசை?

ராணுவத்துக்கு ஜீப் வாங்கியதிலும் விமானம், ஹெலிகாப்டர் வாங்கியதிலும் பேரம் நடந்தது மற்றும் லஞ்சம் கைமாறியது தொடர்பான புகார்கள் ஓய்ந்தபாடில்லை.

ஆசிரியர்

ராணுவத்துக்கு ஜீப் வாங்கியதிலும் விமானம், ஹெலிகாப்டர் வாங்கியதிலும் பேரம் நடந்தது மற்றும் லஞ்சம் கைமாறியது தொடர்பான புகார்கள் ஓய்ந்தபாடில்லை. இதுவே இந்தியாவுக்கு அவமானம் என்றால், ராணுவ நிதி அரசியல் முன்னெடுப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக எழுகின்ற, மறுக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் பெருத்த அவமானத்தை கொண்டு வந்திருக்கின்றன.

ஏதோ பிறந்த நாள் நிகழ்வில் ஒருவர் மீது ஒருவர் கேக் கிரீம்களை முகத்தில் பூசி மகிழ்வதைப் போல, இந்திய ராணுவ ரகசியத்தை அரசியலாக்கி, மாறிமாறி சேறு வீசிக்கொண்டிருக்கின்றார்கள் அரசியல்வாதிகள்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங்கும் ரேவாரியில் நடைபெற்ற படை வீரர்களுக்கான பேரணி மற்றும் கூட்டத்தில் கைகோத்து நின்ற மூன்றாம் நாளே, ஓர் ஆங்கில பத்திரிகையில் சிறப்பு செய்தி வெளியாகிவிட்டது.

அதாவது - வி.கே.சிங் ராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில், "டெக்னிகல் சர்வீஸ் டிவிஷன்' என்ற பிரிவை உருவாக்கி, கணக்குக்காட்ட அவசியமில்லாத ராணுவநிதியை, ஜம்மு-காஷ்மீர் அரசை கவிழ்ப்பதற்காக செலவிட்டதாகவும் இதுகுறித்து ராணுவத் தளபதி விக்ரம் சிங் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து அதன் அறிக்கையை மார்ச் மாதமே பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளித்துவிட்டதாகவும் அந்த ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த செய்திப் "பொறி' விழுந்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விட்டனர். இதற்கு எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டு பாஜகவும் களத்தில் இறங்கியது. "மார்ச் மாதம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை மீது ஏன் நடவடிக்கை இல்லை' என்று கேட்டது. அடுத்த நாள், வி.கே.சிங் தானே களத்தில் இறங்கி, காங்கிரஸ் மீதான இன்னொரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

"ஜம்மு காஷ்மீர் அரசு நீடிக்க, ராணுவ நிதியை சில அமைச்சர்களுக்கு வழங்கியது காங்கிரஸ் அரசு' என்று சொன்னார். உடனே அதனை காங்கிரஸ் மறுத்ததோடு மட்டும் நிற்காமல், "அந்த அமைச்சர்கள் பெயரைச் சொல்ல முடியுமா?' என்றும் கேட்டது. இந்த அவதூறு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்கிறது ஜம்மு காஷ்மீர் அரசு.

ஆளாளுக்கு மாறி மாறி குற்றம் சாட்டுகிறார்கள். இது இந்திய ராணுவத்தின் கௌரவத்தைக் குலைக்கிறது, ராணுவ வீரர்களிடையே பேதத்தை விதைக்கிறது என்ற உணர்வே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்திய ராணுவத்தின் மரியாதை சர்வதேச அளவில் குலைகிறது என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் பொறுப்பற்ற முறையில் நமது அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டிக் கொள்வதை சகித்துக்கொள்ள முடியவில்லை.

ராணுவ ரகசிய நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை வெளிப்படையாக ஆராய்வதும் பேசுவதும் ஆபத்தானது. உளவு அறியவும், எதிரியை திசை திருப்பவும் ராணுவம் எதையெல்லாமோ செய்யும். அதையெல்லாம் அம்பலப்படுத்திக்கொண்டிருப்பது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு நல்லதல்ல. சில விவகாரங்கள் நாட்டுக்கு நன்மையாகவும் ஆனால் ராஜியஉறவுகளுக்கு எதிரானதாகவும்கூட இருக்கலாம். அது ராணுவத்தின் தற்காப்பு நடவடிக்கை. இதற்காக செலவிடப்படும் ரகசிய நிதி குறித்து ஆளாளுக்குப் பேச முடியுமா? விமர்சிப்பது முறைதானா?

பிறந்த தேதி பிழையாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் முதலாகவே முன்னாள் ராணுவத் தளபதி வி.கே. சிங் சர்ச்சைக்கு ஆளானார். இந்த சர்ச்சை ஓய்ந்த பிறகு அவர் அமைதியாக ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு இருந்திருந்தால் எந்தச் சிக்கலும் ஏற்பட்டிருக்காது. அவருக்கு இத்தகைய களங்கமும் ஏற்பட்டிருக்காது. முன்னாள் ராணுவத்தினர் நடத்திய பேரணியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் அவர் ஒரே மேடையில் இணைந்து நின்றது தேவையில்லாத ஒன்று. அவருக்கு அரசியல் ஆசை ஏற்பட்டிருக்கக் கூடாது.

இந்தியா விடுதலை அடைந்தது முதல், ராணுவத் தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர்கள் 26 பேர். இவர்களில் யாரும் அரசியல்வாதிகளுடன் தங்களை அடையாளப் படுத்திக்கொண்டதில்லை. கரியப்பா, திம்மய்யா, குமாரமங்கலம், மானேக்ஷா போன்றோர் மிக உயரிய மதிப்பும் பாராட்டும் பெற்றவர்கள். அவர்கள் அரசியல் பேசியதில்லை. பாதுகாப்பு அமைச்சகம் எடுத்த தவறான முடிவுகள் குறித்து, ஓய்வுக்குப் பிறகும்கூட, விமர்சனம் செய்ததும் இல்லை.

அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்கள் பணிஓய்வுக்குப் பிறகு அரசியலுக்கு வரும்போது, அவர் பணியாற்றிய காலத்தில் எடுத்த நடவடிக்கைகளும், அவரது செயல்பாடுகளும் விமர்சிக்கப்படுவதையும் அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியோடு இணைத்துப் பேசப்படுவதையும் தவிர்க்க முடியாது.

வி.கே.சிங் தன்னை அரசியல் வட்டத்துக்கு வெளியே நிறுத்திக்கொள்வதுதான், அவருக்குப் பெருமை சேர்க்கும். ராணுவத்துக்கும் களங்கம் ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT