கூட்டி கழித்துப் பார்த்தால்...
தனது பத்தாண்டு கால ஆட்சியில் மூன்றாவது முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், ஒன்றே கால் மணி நேரம் பொறுமையாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததற்கு அவரைப் பாராட்ட வேண்டும்.
தனது பத்தாண்டு கால ஆட்சியில் மூன்றாவது முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், ஒன்றே கால் மணி நேரம் பொறுமையாக பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததற்கு அவரைப் பாராட்ட வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்பில் அடுத்த முறை பிரதமர் பதவிப் போட்டியில் தான் பங்கேற்பதில்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு அமையப் போகும் அரசு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாக இருக்க வேண்டும் என்றும் அந்தக் கூட்டணியின் சார்பில் ஒருவர் பிரதமராக வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பிரதமர்.
ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான எல்லா தகுதிகளும் படைத்தவர் என்று அவருக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்த மன்மோகன் சிங், "எங்களது பிரதமர் வேட்பாளரை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும்' என்று அறிவித்தபோது, அவரைப் பார்த்து பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. அந்த அறிவிப்பை வெளியிடும் அதிகாரம்கூட இல்லாத ஒருவர் பத்து ஆண்டுகளாக பிரதமராக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான், அவர்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று தைரியமாகச் சொல்ல அவருக்கு மனமில்லையா அல்லது காங்கிரஸ் தலைமை அவரை அனுமதிக்கவில்லையா என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.
நரேந்திர மோடி பிரதமராவது என்பது இந்தியாவுக்கு ஏற்படும் மிகப்பெரிய வீழ்ச்சியாக இருக்கும் என்று கூறும் டாக்டர் மன்மோகன் சிங், "குஜராத்தில் 2002 ஆம் ஆண்டில் நடந்த இனப் படுகொலைக்குத் தலைமை தாங்குவதுதான் வலிமையான பிரதமருக்கு அடையாளம் என்று நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்று நரேந்திர மோடியைச் சாடியிருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த வரலாறு காணாத ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் காரணமாக இருந்த ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் இப்படிக் கூறும்போது, அவரது குற்றச்சாட்டு முனை மழுங்கி விடுகிறது.
Advertisement
பாவம், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வகுப்புக் கலவரங்கள் பற்றிய பழைய சரித்திரம் தெரியாது போலிருக்கிறது.
1969இல் ஹிதேந்திர தேசாய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்த குஜராத் வகுப்புக் கலவரங்களில் 660 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். லட்சக்கணக்கானோர் வீடு வாசல் இழந்தனர் என்கிறது அதிகாரபூர்வ செய்திகள். ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2000க்கும் அதிகம் என்று எழுதின பத்திரிகைகள். அந்த வகுப்புக் கலவரத்தின்போது தலைமைப் பொறுப்பில் இருந்தவர் நரேந்திர மோடியல்ல, காங்கிரஸ்!
1989இல் பிகாரில் உள்ள பாகல்பூரும் அதைச் சுற்றியுள்ள 250 கிராமங்களும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அன்றைய பிகாரின் முதல்வர் காங்கிரஸ் கட்சியின் சத்யேந்திர நாராயண் சின்ஹா. காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு இந்த இனக் கலவரத்தில் பங்கு உண்டு என்று வெளிப்படையாக முதல்வர் சின்ஹாவே அறிவித்தார். அப்போது பிகாரில் ஆட்சியில் இருந்தது பா.ஜ.க. அல்ல, காங்கிரஸ்.
1984இல் தில்லியில் நடந்த சீக்கியர் இனப் படுகொலைக்கு நேரடியாகவே காரணமான காங்கிரஸ் கட்சியா பேசுவது, இனப் படுகொலையின்போது தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் பிரதமரானால் அது இந்தியாவின் சீரழிவுக்கு வழிகோலும் என்று? தில்லியில் நடந்த சீக்கியர் இனப் படுகொலையை முன்னின்று நடத்திய கட்சியின் சார்பில் பிரதமராக இருக்கும் டாக்டர் மன்மோகன் சிங், கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிகிறார். இனப் படுகொலை பற்றி இடதுசாரிகளோ ஏனைய கட்சிகளோ பேசலாம். காங்கிரஸýக்கு அதுபற்றி பேசும் உரிமையோ அருகதையோ கிடையாது.
பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் வெளியிட்டிருக்கும் இன்னொரு கருத்து வேடிக்கையாக இருக்கிறது. ""மக்கள் எனது ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தவில்லை'' என்கிறார். ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்திருப்பதை அவர் மறுக்கவில்லை. ஆனால் அதனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பு பெரிதுபடுத்தப்படுகிறது என்கிறார்.
பத்திரிகையாளர்களை அழைத்து ""நான் சோனியா காந்தியின் "பினாமி'யாகத்தான் பிரதமர் பதவியில் இருந்தேன்'' என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அடுத்த முறை பிரதமர் போட்டியில் தான் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆனால் அரசியலிலிருந்து தான் ஓய்வு பெறப் போவதாக அவர் கூறவில்லை. ஒருவேளை ராகுல் காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தால், நிதியமைச்சர் பதவிக்கு அவர்கள் யாரையும் தேடி அலைய வேண்டியதில்லை. மன்மோகன் சிங் தயார்!
கூட்டி கழித்துப் பார்த்தால் பிரதமரின் பத்திரிகையாளர் கூட்டம் வெளிப்படுத்தும் செய்தி இதுதான்!