தலையங்கம்

இனிதான் பிரச்னை...

இந்தியாவின் 29ஆவது மாநிலமாக உதயமாகியிருக்கும் தெலங்கானாவின் முதல் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ்.

ஆசிரியர்

இந்தியாவின் 29ஆவது மாநிலமாக உதயமாகியிருக்கும் தெலங்கானாவின் முதல் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ். தெலங்கானா ஒரு முன்மாதிரி மாநிலமாக இருக்கும் என்றும் ரூ.50,000 கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், ரூ.50,000 கோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் செலவிடப்படும் என்றும் அறிவிப்புகள் செய்தபோதிலும் முதலமைச்சர் பதவி என்பது முள்இருக்கை என்பதை முதல்வர் சந்திரசேகர ராவ் விரைவிலேயே உணரக்கூடும்.

தெலங்கானாவின் பொருளாதாரம் மிகவும் பலவீனமானது. இனிமேல்தான் கட்டமைக்கப்பட வேண்டியிருக்கிறது. இவை முழுவதும் மத்திய அரசின் நிதியுதவியில்தான் நடந்தாக வேண்டும். அரசுக்கு தொழில் மூலம் வருவாய் என்பது ஹைதராபாத் நகரத்தில்தான் அதிகம். ஆனால் அங்கே முதலீடு செய்திருப்போர் அனைவரும் சீமாந்திரத்தைச் சேர்ந்தவர்கள். சீமாந்திராவுக்கு என்று தலைநகரம் நிர்மாணம் செய்யப்பட்டவுடன் இடம் பெயர்ந்து விடுவார்கள்.

தெலுங்கு தேசம் ஆட்சியின் போது சந்திரபாபு நாயுடுவால் உருவான கணினி தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி, இப்போது சந்திரபாபு முதல்வராகப் பொறுப்பேற்று அமைக்க இருக்கும் சீமாந்திரத்தின் தலைநகருக்கு இடம்பெயரும் சாத்தியக்கூறுகள்தான் அதிகம்.

மேலும் தெலங்கானா ஒரு போராட்ட பூமி. தெலங்கானா - ஒடிசா மாநிலங்களின் எல்லையில் தண்டேவாடா காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் செயல்படுகிறார்கள் என்பதை மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை. தெலங்கானாவின் சில மாவட்டங்களில், அரசு ஊழியர்கள் பணியில் சேரவே அஞ்சும் நிலைமை அண்மைக்காலம் வரை இருந்தது. அங்கே தொழில் வளர்ச்சி இல்லாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆகவே தெலங்கானாவில் புதிய உயர்கல்வி நிறுவனங்கள், புதிய தொழிற்சாலைகள், விவசாய மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றுக்குத்தான் சந்திரசேகர ராவ் முன்னுரிமை தந்தாக வேண்டும். இதில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுவார் என்பதைப் பொருத்தே அந்த மாநிலத்தின் வளர்ச்சி அமையும். இல்லையானால் எந்த முன்னேற்றமும் காண முடியாமல், மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் முடியாமல் மிகவும் பின்னடைந்த ஒரு மாநிலமாக தெலங்கானா இருக்கும்.

சந்திரசேகர ராவ் அரசு எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய பிரச்னை நிர்வாகம் தொடர்பானது. தனித் தெலங்கானா கிளர்ச்சிக்குக் காரணமே, தெலங்கானா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்தான். தெலங்கானாவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், சீமாந்திராவில் பணிபுரியத் தயாராக இல்லை என்பது மட்டுமல்ல, தெலங்கானாவில் சீமாந்திராவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பணிபுரிவதை அவர்கள் விரும்பவுமில்லை. சீமாந்திராவைச் சேர்ந்த ஊழியர்கள் போய்விட்டால், அந்த இடங்களில் தெலங்கானா பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்கிற தவறான எதிர்பார்ப்பு பரவலாக எழுந்திருக்கிறது.

ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தில் கீழ்மட்ட அரசு ஊழியர்களைப் பொருத்தவரை, தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் அதிகமாகவும், உயர்மட்ட அதிகாரிகளைப் பொருத்தவரை சீமாந்திரத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாகவும் இருந்தனர். சீமாந்திர பகுதியில் பணிபுரியும் தெலங்கானா பகுதியைச் சேர்ந்த ஊழியர்கள் தெலங்கானா அரசுக்குத் திரும்பினால், அவர்களுக்குத் தரவே வேலைவாய்ப்பு இல்லை எனும்போது, புதிய இளைஞர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பளிக்கப் போகிறது சந்திரசேகர ராவ் அரசு?

மத்திய அரசு நியமித்திருக்கும் பிரத்யுஷ் சின்ஹா குழு தெலங்கானாவுக்கு 163 இந்திய அரசுப்பணி, 112 இந்தியக் காவல்பணி, 65 இந்திய வனக்காவல்பணி அதிகாரிகளையும், அதேபோல சீமாந்திராவுக்கு 211, 144, 82 அதிகாரிகள் என ஒன்றுபட்ட ஆந்திர அரசில் பணியாற்றிய உயர் அதிகாரிகளைப் பிரித்துப் பரிந்துரைத்திருக்கிறது. இதில் பிரச்னை எழ வாய்ப்பில்லை. ஆனால், அதுவல்லவே கீழ்மட்ட ஊழியர்களின் நிலைமை.

சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தரகாண்ட் மாநிலங்கள் உருவானதுபோல, தெலங்கானா மாநிலம் உருவாகவில்லை. மிகப்பெரிய போராட்டமும், துவேஷமும் இந்த மாநிலம் உருவாகக் காரணமாக அமைந்தன. அதுவே இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக மாறக்கூடும்.

"மண்ணின் மைந்தர்கள்' கோஷத்துடன் தெலங்கானா போராட்டத்தை நடத்தி, அதன்மூலம் ஆட்சியையும் கைப்பற்றி இருக்கும் முதல்வர் சந்திரசேகர ராவ் தெலங்கானா பகுதி மக்களின் எதிர்பார்ப்பை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதுதான் புரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

SCROLL FOR NEXT