தலையங்கம்

மறுக்கப்படும் ஒதுக்கீடு!

மேல்நிலைப் பள்ளித் தேர்வு முடிவு மே 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மே 21-ஆம் தேதியும் வெளியாகும் என்பதால், பள்ளிகள் அனைத்தும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, முன்பள்ளி மாணவர் சேர்க்கையிலும், அதற்கான விண்ணப்ப விற்பனையிலும் தீவிரமாக உள்ளன.

ஆசிரியர்

மேல்நிலைப் பள்ளித் தேர்வு முடிவு மே 7-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மே 21-ஆம் தேதியும் வெளியாகும் என்பதால், பள்ளிகள் அனைத்தும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, முன்பள்ளி மாணவர் சேர்க்கையிலும், அதற்கான விண்ணப்ப விற்பனையிலும் தீவிரமாக உள்ளன.

ஆனால், கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ், முன்பள்ளி தொடங்கி 8-ஆம் வகுப்பு வரை 25% ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களைச் சேர்ப்பது குறித்து எந்த சிந்தனையும் தனியார் பள்ளி நிர்

வாகத்தினரிடம் இல்லை. அதிலும், குறிப்பாக சிறுபான்மையினர் பள்ளிகள் வெகு அலட்சியமாக இருக்கின்றன.

14 வயது வரை அனைத்துச் சிறார்களுக்கும் இலவசக் கல்வியை உறுதிப்படுத்தும் சட்டம் அமலுக்கு வந்த நாள் முதலாக, தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு கட்டாயப்படுத்தப்பட்டபோதிலும், ஆண்டுதோறும் பள்ளிகள் இந்த உத்தரவு குறித்து அக்கறை கொள்வதில்லை. பள்ளிக் கல்வித் துறையும் களத்தில் இறங்குவதில்லை.

ஒவ்வோர் ஆண்டும் மே 3-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை தனியார் பள்ளிகள் அனைத்தும் 25% ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களை பெற்றோருக்கு இலவசமாக வழங்க வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மே 9-ஆம் தேதி பெற்று, தகுதி

யுடைய மாணவர்கள் பட்டியலை மே 11-ஆம் தேதி வெளியிடவும், பெற்றோர் முன்னிலையில் மே 14-ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்து சேர்க்கவும் வேண்டும்.

இது பொது விதி. தமிழ்நாட்டில் உள்ள ஏழைப் பெற்றோர் பலருக்கும் இந்த விவரம் தெரிந்திருக்கவில்லை. இலவசக் கல்வி என்பது அரசுப் பள்ளிகளில் மட்டுமே சாத்தியம் என்ற எண்ணமே பெற்றோரிடம் உள்ளது. 25% ஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வு பரவலாகச் சென்று சேரவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில், கட்டாயக் கல்வித் திட்டத்தின் 25% இடஒதுக்கீட்டில் 2013-14 கல்வியாண்டில் 49,864 மாணவர்களும், 2014-15 கல்வியாண்டில் 74,127 மாணவர்களும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சேர்க்கையும்கூட புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் மட்டுமே நடைபெற்றுள்ளது. மாநகர், பெருநகரத்தில் மிகமிகக் குறைந்த அளவிலேயே இத்திட்டத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பள்ளிக் கல்விப் பிரிவு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறியில், "முதல் வகுப்பில் (முன்பள்ளி வகுப்பு இருப்பின் அது முதலாகவே) உள்ள மாணவர் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25% இடங்களை பள்ளியில் சுற்றுப்பகுதியில் உள்ள ஏழை (டிஸ்அட்வான்டேஜ்டு குரூப்) பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்து, அவர்களுக்குத் தொடக்கப் பள்ளி நிறைவு வரை இலவசமாகக் கல்வி வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற 75% இடஒதுக்கீட்டை நிறைவு செய்யும்போது, அனுமதிக்கப்பட்ட கட்டணத்துடன், சேர்க்கை நடத்த வேண்டும். மாணவர்களிடம் நேர்காணல் நடத்தாமல், பெற்றோரின் கல்வித் தகுதியைக் கருதாமல் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பது அந்தச் சட்டத்தின் இன்னொரு நிபந்தனை.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை, தனியார் பள்ளிகள் இலவசமாகக் கல்வி வழங்க வேண்டும் என்று கூறியிருந்த போதிலும், இந்தத் திட்டம் தொய்வில்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காகவும், தனியார் பள்ளிகள் தயக்கம் காட்டக் கூடாது என்பதற்காகவும், இந்த 25% ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்தும்கூட தனியார் பள்ளிகள் சட்டை செய்வதில்லை.

இருப்பினும், இந்த 25% ஒதுக்கீடு என்பதன் வரன்முறை குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளே தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள். தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை எத்தனை மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனரோ அந்த மொத்த எண்ணிக்கையில் 25% என்று ஒரு மாவட்ட கல்வி அதிகாரி கூறு

கிறார். தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அரசாணையோ, பள்ளியின் சேர்க்கை அளவில் 25% என்கிறது (இன்டேக் கெபாசிட்டி). அப்படியானால், முதலாம் வகுப்புக்கு மட்டும்தான் விண்ணப்பிக்க முடியுமா, மற்ற வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாதா? ஒரு மாணவர், இலவசக் கல்வி பெற்று இடம்பெயர்ந்து வந்தால் (4 அல்லது 5-ஆவது வகுப்பில்) சேர்த்துக்கொள்ள முடியுமா, முடியாதா என்பதில் குழப்பம் நிலவுகிறது.

இப்போதாவது, பள்ளிகளுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கும் இதுகுறித்த தெளிவான அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிடுவது அவசியம். தனியார் பள்ளிகளில் பலவும் சிறுபான்மையினர் பள்ளிகளாக இருந்தாலும், அவர்களையும் இந்தச் சட்டத்துக்கு கீழ்படியச் செய்ய அழுத்தம் தர வேண்டியதும் அவசியம்.

இந்த விவகாரத்தில் பெற்றோர் அலைக்கழிக்கப்படுவதைத் தவிர்க்க, கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான பொது விண்ணப்பத்தை இணையதளத்தில் வெளியிடுவதும், மாணவர்களைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும்போது, அதைக் கண்காணிக்கும் குழு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நெறிப்படுத்துவதும் இன்றியமையாதது.

இவை எல்லாவற்றையும்விட இன்றியமையாத ஒன்று: அரசின் வழிகாட்டுதல்படி 25% ஏழை மாணவர்களைச் சேர்த்த பிறகுதான் அந்தப் பள்ளி அந்தக் கல்வியாண்டின் வகுப்புகளை நடத்தலாம் என்கிற அதிரடியான நிபந்தனை மட்டுமே இந்தத் திட்டத்தின் 100% வெற்றிக்கு வழிவகுக்கும்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் ஒன்றுகூட ஏன் இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய களம் இறங்கவில்லை. ஏழைக்கான ஒதுக்கீடுதானே என்பதால் அக்கறையில்லையோ? கட்சி வேறுபாடின்றி அரசியல்வாதிகள் பலரும் தனியார் பள்ளிகள் நடத்துவதுதான் இதற்குக் காரணமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT