தலையங்கம்

தீவிரவாதத்துக்கு இடமில்லை!

அண்மைக் காலமாக வனத் துறை அலுவலகங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்

ஆசிரியர்

அண்மைக் காலமாக வனத் துறை அலுவலகங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தீவிரவாதிகளின் இருப்பை உணர்ந்த நான்கு மாநில காவல் துறையும் கூட்டாகச் செயல்பட்டு, உளவுத் தகவல்களைப் பரிமாறத் தொடங்கின. அதன் வெற்றியாக இப்போது கோவை கருமத்தம்பட்டி அருகே தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் 5 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
 அவர்களிடம் பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றன.
 கர்நாடகம், கேரளம், தமிழகம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் 193 மலைக் கிராமங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்ததாகவும் நான்கு மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக மலைவாழ் மக்களைத் திருப்பிவிட்டு, தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ள தகவல் நான்கு மாநில அரசுகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால்.
 கைதாகியிருக்கும் ரூபேஷ், அவரது மனைவி ஷைனா மற்றும் அனூப் ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். ஈஸ்வரன் என்கிற வீரமணி கடலூரைச் சேர்ந்தவர். கண்ணன் மதுரையைச் சேர்ந்தவர். இவர்கள் பொதுவுடைமை இயக்கங்களில் இருந்து பிரிந்து வந்து தீவிரவாதத்தில் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்துக்கும் 4 பேர் வீதம் சென்று மலைவாழ் மக்களை அரசுக்கு எதிராக மனமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, இவர்களுடன் தொடர்புடையவர்கள் குறைந்தபட்சம் மேலும் 100 பேர் இருக்கக்கூடும். அனைவரையும் கைது செய்வதும், அவர்கள் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களைக் கைப்பற்றி, மூளைச் சலவைக்கு ஆளான நபர்கள் அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவருவதும்தான் காவல்துறை எதிர்கொள்ளும் இமாலயப் பணி.
 1980-களில் தமிழ்நாட்டில் திருப்பத்தூர் பகுதியில் மாவோயிஸ்ட் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன. அப்போதைய காவல் துறை உயர் அதிகாரியாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையிலான குழு அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டு, பலரையும் கொன்றது தொடர்பான மனித உரிமை மீறல் பிரச்னை விவாதங்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தன.
 அதற்குப் பிறகு காவல் துறையை எதிர்த்துப் போராடும் அளவுக்கு வலிமை பெற்ற அமைப்பாக இல்லாவிட்டாலும், தீவிரவாதச் சிந்தனை உள்ளவர்கள் உதிரிகளாக அரியலூர், தருமபுரி மாவட்டங்களில் வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டனர். அந்த நாளில் இந்த அமைப்புகள் தங்களுக்கான நிதியைத் தாங்களே திரட்டிக் கொண்டதுடன், தங்களுக்கான ஆயுதத்தை தாங்களே வடிவமைத்து நாட்டுத் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவோராக இருந்தனர். ஆனால், இன்று நிலைமை அதுவல்ல.
 தீவிரவாத இயக்கம் என்று அடையாளப்படுத்தினாலே போதும், இந்திய இறையாண்மையைத் தகர்ப்பதற்காக மறைமுகமாகச் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு நிதியுதவி பல லட்சம் ரூபாய் வருகிறது. ராணுவத்துக்கு இணையான ஆயுதங்களும் கடத்தி வரப்பட்டு, வழங்கப்படுகின்றன. இந்தியாவின் அமைதி எவ்வகையில் குலைந்தாலும் அதற்காக நிதி வழங்க பல நாடுகள் தயாராக இருக்கின்றன.
 தமிழ்நாட்டில் 1980-களில் சிறு கிராமங்களில் நிலவிய ஆதிக்கச் சூழல், அடக்குமுறை இப்போது இல்லை. இன்று கிராமங்களில் நிலவும் பிரச்னை சாதி சார்ந்ததாக இருக்கிறது. நடுக்கட்டு ஆதிக்கச் சாதியினர், தலித்துகள் இருவருமே பொருளாதார சமநிலை பெற்று வருவதை சகித்துக்கொள்ள முடியாததன் வெளிப்பாடாகவே சாதிச் சண்டைகள் எழுகின்றன. ஆகவேதான், மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாத அமைப்புகள் இப்போது மலைவாழ் மக்களையே குறி வைக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் கையாளும் அதே உத்திகளைப் பயன்படுத்தி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அரசு எந்தவித நன்மையையும் மலைவாழ் மக்களுக்கு அளித்துவிடாதபடி பார்த்துக்கொள்வதே மாவோயிஸ்டுகளின் நோக்கம்.
 தமிழ்நாட்டில் 90 சதவீத மலைக் கிராமங்கள் மின்சார வசதி பெற்றுள்ளன. பல கிராமங்களில் செல்லிடப்பேசி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு போக்குவரத்து வசதி அளிப்பது சாத்தியமில்லை. ஏனெனில், பல கிராமங்கள் காப்புக் காடுகளில் அமைந்துள்ளன. எண்ணிக்கை அளவில் மிகக் குறைவாக இருப்பதால் நான்கு அல்லது ஐந்து மலைக் கிராமங்களுக்கு ஒரு பொது விநியோக மையம் நிர்ணயிக்கப்படுகிறது. பல மைல்கள் நடந்து வந்துதான் பொருள்களை வாங்கிச் செல்கிறார்கள்.
 உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்பட்டாலும், ஆசிரியர்கள் ஒப்புக்கு வருகிறார்கள். அதிகாரிகள் அங்கே சென்று பார்ப்பது என்பது மிகமிக அரிதானதாக இருக்கிறது. இது போதாதென்று, வனத் துறையினரின் அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் ஆகியன மலைவாழ் மக்களை அரசுக்கு எதிரான மனநிலைக்குத் தள்ளுகின்றன. இதன் காரணமாகத்தான் மலைவாழ் மக்களில் சிலர் மாவோயிஸ்டுகளின் மூளைச்சலவைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
 தீவிரவாதச் சிந்தனை முளையிலேயே கிள்ளி எறியப்பட்டாக வேண்டும். வருவாய்த் துறை, வனத் துறை அதிகாரிகள் இந்த மலைவாழ் மக்களிடம் அனுசரணையாக இருந்தாலே போதும், மாவோயிஸ்டுகள் இங்கே பிழைப்பு நடத்த முடியாது. மலைவாழ் மக்கள் அரசின் மீது நம்பிக்கை கொள்வார்கள்.
 மாறிவிட்ட பொருளாதாரச் சூழலில், ஆயுதப் புரட்சி சாத்தியமல்ல. இன்றையத் தேவை, கடையனுக்கும் கடைத்தேற்றம் ஏற்
 படுத்தும் பொருளாதாரப் புரட்சி. அதற்கு, ஆயுதம் தேவையில்லை. கல்வியறிவும் தொழில்நுட்பமும் உழைக்கும் உறுதியும் எல்லாவற்றுக்கும் மேலாக அனைவருக்கும் சம வாய்ப்பும்தான் தேவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT