கொடுங்குற்றம் புரியும் 16 வயது கடந்த சிறார்களையும் 18 வயது இளையோருக்கான பொதுச் சட்டத்தின் கீழ் விசாரித்து தண்டிக்க வகை செய்யும் சிறார் சட்டத் திருத்த மசோதா 2015 மக்களவையில் அண்மையில் நிறைவேறியது.
இதே சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்பட்ட நேரத்தில் எதிர்ப்பு இருந்ததால் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக் குழு பரிந்துரைத்த 40-க்கும் மேற்பட்ட திருத்தங்களை அரசு ஏற்றுக்கொண்டாலும், 18-லிருந்து 16-ஆகக் குறைக்கும் முடிவைத் தவிர்க்கலாம் என்ற பரிந்துரையை அரசு ஏற்கவில்லை.
இந்தச் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் சிறார்களுக்கு ஆதரவானதாக இருக்கிறது என்று சொல்லும் சிறார் ஆதரவு அமைப்புகள், கொடுங்குற்றத்தில் ஈடுபடும் சிறாரின் வயதை 18-லிருந்து 16-ஆகக் குறைப்பதற்கு மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவ்வாறு வயதைக் குறைத்து, சிறார்களை வயதுவந்தோர் போல பொதுச் சட்டத்தின் முன்பு நிறுத்துவது, சிறார் நலன்களுக்கு எதிரானது என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வல்லுறவு மற்றும் வல்லுறவுக் கொலைகளில் (நிர்பயா வழக்கு உள்பட) 18 வயது நிறைவடையாத சிறார்கள் ஈடுபட்டு இருந்ததும், இவர்களை சிறார் சட்ட நடவடிக்கைப்படி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பும் சம்பவங்களும் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தின. ஆதலால், இத்தகைய சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டது.
வல்லுறவு மற்றும் கொலை போன்ற கொடுங்குற்றங்களில் சிறார்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. 2013-ஆம் ஆண்டில் 28,000-க்கும் மேற்பட்ட குற்றங்களில் சிறார்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுங்குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 3,887.
வயதைக் குறைக்கும் முடிவை அரசு மேற்கொண்டபோதிலும், எடுத்த எடுப்பில் சிறாரை கொடுங்குற்றவாளியாக அறிவிக்காமல், அந்த முடிவை மேற்கொள்ள சிறார் நீதி வாரியம், சிறார் நலக் குழு ஆகியவற்றை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க மசோதா வழிகோலுகிறது. அவர்கள் இந்தச் சிறார்களிடம் வழக்கமான நீதிமன்ற விசாரணை போல் அல்லாமல், சிறார் சட்டத்துக்குள்பட்ட முறையில் அவர்களிடம் பேசி, அவர்கள் செய்த குற்றத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு, அது கொடுங்குற்றம்தான் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகுதான் இந்தச் சிறார்களை வயதுவந்தோராகக் கருதி, வழக்கமான நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
ஒரு சிறுவன் அல்லது சிறுமி, 16 முதல் 18 வயதுக்குள்ளாக ஒரு குற்றம் புரிந்து, தலைமறைவாகி, பின்னர் 21 வயதில் கைதாகும்போது, அந்தச் சிறுவனை வழக்கமான சட்டத்தின்படி தண்டிக்கலாம் என்ற புதிய விதிமுறைக்கும் சிறார் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அரசு நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டே இத்தகைய திருத்தத்தைச் செய்துள்ளது. இருசக்கர வாகனத் திருட்டு, கவனத்தைத் திசைதிருப்பி திருடுதல், குழந்தைகளைக் கடத்துதல் போன்றவை சிறார்களை முன்னிலைப்படுத்தி நடத்தப்படுகின்றன. இந்தச் சிறார்கள் பிடிபட்டாலும், அவர்கள் தப்பியோடும்படி செய்யப்படுகிறார்கள். பல நேர்வுகளில், சிறார்களைக் குற்றவாளிகளாகக் காட்டுவதையே காவல் துறையினர் தவிர்த்துவிடுகின்றனர்.
சிறார்களின் மனம் வக்கிரமானதற்குக் காரணம் - தகவல் தொழில்நுட்பம், திரைப்படங்கள், நவீன கலாசாரத்துக்கு மாறிவிட்ட வாழ்க்கைச் சூழல் ஆகியவை. இந்தச் சூழல்களை மாற்றாமல், சிறார் வயதைக் குறைக்கக் கூடாது என்று மட்டும் சொல்வது பொருந்தாத வாதம். பத்து வயதுச் சிறார்கள் செல்லிடப்பேசி இல்லாமல் இருப்பது அரிதாக இருக்கிறது. அவற்றை அந்தச் சிறார்கள் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்துவதில்லை.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 பயிலும் மாணவர்கள் மது அருந்துகிறார்கள். 18 வயதுக்குக் குறைவானவர்கள் மது அருந்துவது குற்றம் என அறிவிக்கப்படவில்லை. ஆகவே அருந்துகிறார்கள். திரைப்படங்களின் தாக்கத்தால் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் காதலிக்கிறார்கள். எல்லாமும் இளம் பருவத்தின் இயல்பு என்று தள்ளிவிட முடியாது. இவை வல்லுறவு மற்றும் கொலையாக மாறும்போது அவர்களை இளம் குற்றவாளிகளாக நடத்தாமல் இருப்பது மட்டும் எப்படி சரி?
குற்றம் புரியும் சிறார்களின் குடும்பச் சூழல், அவர்கள் வளர்ந்த சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனைகளையும், திருந்தக்கூடிய வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்களது குற்றம் சாதாரண சிறார் செய்யக் கூடியதாக இல்லாதபோது, அவர்களை எப்படி வெறும் ஆலோசனையாலும் கூர்நோக்கு இல்லங்களாலும் மட்டுமே திருத்திவிட முடியும்?
வல்லுறவுக் கொலை போன்ற கொடுங்குற்றம் புரிந்த சிறார்கள் தற்போது கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால், கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் சிறு குற்றம்புரிந்த சிறார்கள் மீது நடத்தப்படும் பாலியல் தொல்லை, மிரட்டல்கள் போன்றவற்றுக்கு கொடுங்குற்றம் புரிந்த சிறார்கள்தான் தலைமை ஏற்கிறார்கள். இத்தகைய கொடுங்குற்றம் புரிந்த சிறார்களை பொதுச் சிறைக்கு கொண்டு செல்வதுதான், கூர்நோக்கு இல்லங்களில் நடக்கும் சிறார்களுக்கு எதிரான அநீதிகளைக் குறைக்கும்.
மேலைநாட்டுச் சிந்தனையுடன் இன்றையச் சூழலில் நடக்கும் செயல்பாடுகளை நாம் எதிர்கொள்ளலாகாது. இந்தியச் சூழலை மனதில் கொண்டு அரசு கொண்டு வந்திருக்கும் "சிறார் சட்டத் திருத்த மசோதா 2015' என்பது காலத்தின் கட்டாயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.