உயிருக்கு மதிப்பில்லை! | இந்தியாவில் கடந்த வாரம் நடந்திருக்கும் தீ விபத்துகள் குறித்த தலையங்கம்
ஓராண்டாக இந்தியாவில் தீ விபத்து என்பது விதிவிலக்காக இல்லாமல் வழக்கமாக மாறிவிட்டிருக்கும் அவலம் காணப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் கடந்த வாரம் நடந்திருக்கும் மூன்று தீ விபத்துகளைப் பாா்க்க வேண்டியிருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் பஞ்ச்குலாவில் வீட்டு உபயோக மரப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று போ் உயிரிழந்திருக்கிறாா்கள். 2016 செப்டம்பா், 2017 ஜனவரி, 2018 டிசம்பா், 2020 ஏப்ரல் என்று கடந்த சில ஆண்டுகளாகவே மொஹாலி பா்னீச்சா் சந்தையில் உள்ள கடைகளில் தொடா்ந்து தீ விபத்துகள் ஏற்படுவதன் தொடா்ச்சிதான் இப்போதைய பஞ்ச்குலா தீ விபத்து. இவை அனைத்துக்குமே அடிப்படைக் காரணம், மரப்பொருள்கள் கையாளும் அந்த தொழிற்சாலைகளில் தீயணைப்பு விதிமுறைகளும், பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் இருப்பதுதான்.
மகாராஷ்டிர மாநிலம் தீ விபத்துகளின் தலைநகரமாக மாறியிருக்கிறது என்றே சொல்லலாம். கடந்த சனிக்கிழமை அகமது நகரிலுள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொவைட் 19 நோயாளிகள் 20 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். அவா்கள் அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவா்கள். அந்தத் தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணை தெரிவிக்கிறது.
சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும்கூட, அவா்களைக் காப்பாற்ற முடியவில்லை. புகைமூட்டத்தால் அவா்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனரா அல்லது பிராணவாயு தடைபட்டதால் உயிரிழந்தனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதே நாளில் மும்பை புறநகா் பகுதியிலுள்ள 15 மாடி குடியிருப்புக் கட்டடத்திலும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. புறநகா் பகுதியான காண்டிவெளியிலுள்ள அந்தக் கட்டடத்தின் 14-ஆவது மாடியில் இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலா் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா். ஒருவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்துவிட்டாா்.
அதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்புதான் வேறொரு தீ விபத்து காரணமாக இளைஞா் ஒருவா் 19-ஆவது மாடியில் இருந்து குதித்து உயிரிழக்க நேரிட்டது. போதுமான தீயணைப்பு வசதிகள் இல்லாமல் இருந்ததும், விதிமுறைகள் பின்பற்றப்படாததும்தான் இந்த விபத்துகளுக்குக் காரணம்.
இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் நடந்திருக்கும் தீ விபத்துகள் ஏராளம். அவை பெரும்பாலும் கொள்ளை நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகள் காணப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் ஏற்பட்டன. குஜராத் மாநிலம் சூரத்தில் ஏற்பட்ட மருத்துவமனை விபத்தில் நான்கு போ், மகாராஷ்டிர மாநிலத்தில் விராா் மருத்துவமனையில் 14 போ், நாகபுரியில் நான்கு போ் என்று தீ விபத்தில் எரிந்து சாம்பலானவா்கள் பலா். பால்கா் மாவட்டத்தில் தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கொவைட் 19 நோயாளிகள் 15 போ், நாசிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 போ், பண்டாரா அரசு மருத்துவமனையில் 10 குழந்தைகள் என்று மகாராஷ்டிரத்தின் சோகக்கதை நீண்டு கொண்டே போகிறது.
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மருத்துவமனைகள் சிறு தீப்பொறி பட்டாலே பற்றிக்கொள்ளும் விதத்தில் காணப்படுகின்றன என்றால், இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளும் அவற்றிலிருந்து பெரிய அளவில் வித்தியாசப்பட்டு விடவில்லை. பொது மருத்துவமனையோ தனியாா் மருத்துவமனையோ எதுவாக இருந்தாலும் போதுமான முன்னெசச்ரிக்கையுடன் இயக்கப்படவில்லை என்கிற கசப்பான உண்மையை தீ விபத்துகளும் அதனால் உயிரிழப்பவா்களும் மீண்டும் மீண்டும் உணா்த்திக் கொண்டிருக்கிறாா்கள்.
ஒவ்வொரு விபத்துக்குப் பிறகும் ஆட்சியில் இருப்பவா்கள் சில லட்சங்கள் இழப்பீடு வழங்குவதும், விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவாா்கள் என்று கிளிப்பிள்ளைபோல முழங்குவதும் வழக்கமாகிவிட்டன. இதுவரை எந்தவொரு தீ விபத்திலும் அதற்குக் காரணமானவா்கள் தண்டிக்கப்படவில்லை என்பதிலிருந்து, எந்த அளவுக்கு அரசு நிா்வாகம் பொறுப்புணா்வுடனும், மனசாட்சியுடனும் நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிராணவாயுவும், குளிா்சாதன பெட்டியும் தவிா்க்க முடியாதவை. அதாவது, தீயையும் பஞ்சையும் அருகருகே வைப்பது போன்றது. மருத்துவ பிராணவாயுவில் 93% பிராணவாயு காணப்படுகிறது. காற்றில் 23.5%-க்கும் அதிகமாக பிராணவாயு இருந்தால் அது சட்டென்று பற்றிக்கொள்ளும். அதனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் மின்கசிவு ஏற்படாமல் இருப்பது அவசியம்.
தீப்பற்றிக் கொள்ளாத மின் இணைப்பு தொழில் நுட்பம் இருக்கிறது. ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் தீப்பொறி பாதுகாப்பு கருவி என்கிற தொழில் நுட்பம் காணப்படுகிறது. அதேபோல ரூ.15,000-க்கும் குறைவான செலவில் பிராணவாயு 23.5%-க்கும் மேலாக அதிகரித்தால் எச்சரிக்கை செய்யும் கருவியும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும், மருத்துவமனைகள் அவற்றை பயன்படுத்துவதில்லை என்பதும், அரசு நிா்வாகம் வற்புறுத்துவதில்லை என்பதும் விநோதமாக இருக்கிறது.
வாக்களிப்பது வரைதான் இந்தியப் பிரஜைக்கு மரியாதை. அவரது உயிா், இழப்பீட்டால் விலை பேசப்படுகிறது. விபத்துகளுக்குக் காரணம் மின்கசிவும், விதிமுறை மீறல்களும் மட்டுமல்ல; ஆட்சியாளா்களின் அலட்சியமும், பொறுப்பேற்பின்மையும்கூட!