கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் 
தலையங்கம்

போராளிக்குப் பிரியாவிடை!

சுதந்திர இந்தியா பேராளுமை மிக்க பல கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்திருக்கிறது.

ஆசிரியர்

சுதந்திர இந்தியா பேராளுமை மிக்க பல கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. அவர்களில் கடைசித் தோழராக நம்மிடம் வாழ்ந்த வி.எஸ்.அச்சுதானந்தனும் விடைபெற்று விட்டார். 101 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து அவர் மறையும்போது, அவரைப் போன்றவர்கள் தங்களது ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி வளர்த்த கம்யூனிஸ்ட் இயக்கம் தனது பழைய வீரியத்தை எல்லாம் இழந்து, ஓரிரு மாநிலங்களில் மட்டுமே அறியப்படும் அரசியல் கட்சியாகத் தொடர்கிறது என்பதுதான் வேதனை.

வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் என்ற வி.எஸ்.அச்சுதானந்தன், கம்யூனிஸம் என்ற கொள்கை வேலியைத் தவிர வேறு எந்த வேலிக்குள்ளும் அடங்கியோ ஒதுங்கியோ இருந்ததில்லை. கம்யூனிஸம் என்ற வேலிக்கு உள்ளிலும்கூட, தான் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளேயும், தான் சரியென்று கருதிய கருத்துக்காகவும், கொள்கைக்காகவும், போராடிக் கொண்டே இருந்தார். அதனால், சொந்தக் கட்சியாலேயே புறக்கணிக்கப்பட்ட நிலையில்கூட அவரது போராட்டம் தொடர்ந்தது.

சற்றும் தளர்ந்து விடாமல், எந்தவித சமரசத்துக்கும் தயாராகாமல் போராடும் வீரியம்தான் அச்சுதானந்தனை வித்தியாசமான போராளியாக உலகுக்கு அடையாளம் காட்டியது. பல நிகழ்வுகளில் கட்சியின் நிலைப்பாட்டை மீறி அவர் செயல்பட்டதும்கூட, எப்போதும் "மக்களின் பக்கத்தில்தான்' என்கிற அவரது தெளிவான சிந்தனையின் அடிப்படையிலானது.

அவரது போராட்ட வாழ்வின் பின்னணியில் அவரது குழந்தைப் பருவ சம்பவங்கள் இருந்தன என்றுகூடச் சொல்லலாம். சிறு வயதில் தனது பெற்றோரை இழந்த சிறுவனின் வாழ்க்கைப் போராட்டத்தில் தொடங்குகிறது அந்தப் போராளியின் வரலாறு.

நாலரை வயதில் தனது தாயையும், பதினான்கு வயதில் தனது தந்தையையும் இழந்த அச்சுதானந்தன், சகோதரர் நடத்தி வந்த துணிக் கடையிலும், தையல் கடையிலும் வேலை செய்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஏழாம் வகுப்பு படித்தபோது, படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரம் கடையில் சகோதரருக்கு உதவியாக இருந்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்கிற சூழல்- இதுதான் வி.எஸ். என்கிற போராளியின் தொடக்கம்.

அவர் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்களஞ்சியம் என்று வருணிக்கப்படும் குட்டநாடு பகுதியில் உள்ள சணல் திரிக்கும் தொழிலாளிகளை ஒருங்கிணைக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டான் அந்தச் சிறுவன். தோழர் பி.கிருஷ்ண பிள்ளை அந்த இளைஞனை அடையாளம் கண்டார். அந்த இளைஞனுக்குள் ஓர் அக்கினிக் குஞ்சு இருந்ததைப் புரிந்துகொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார் அச்சுதானந்தன். புன்னபரா-வயலார் போராட்டம் ஆலப்புழை மாவட்டத்தின் முன்னணித் தோழர்களில் ஒருவராக அவரை உயர்த்தியது.

வயல் வரப்புகள் வழியாகப் பயணித்து, தொழிலாளர்களின் குடிசைகளில் நுழைந்து, அவர்களை இயக்கத்தில் இணைத்து அடித்தட்டு மக்கள், சுரண்டப்படும் பாட்டாளி வர்க்கத்தினர் என்று அச்சுதானந்தனால் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குள் அழைத்து வரப்பட்டவர்கள் ஏராளம். 1948-இல் இயக்கம் தடை செய்யப்பட்டபோது தலைமறைவாகிக் கைது செய்யப்பட்டதும்; 1952-இல் ஆலப்புழை மாவட்டத்தின் செயலாளரானதும்; ஐக்கிய கேரளத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டதும்; 1957-இல் ஈ.எம்.எஸ். தலைமையில் ஆட்சி அமைந்தபோது, முன்னணி கம்யூனிஸ்ட் தலைவராக மாநிலம் முழுவதும் அறியப்பட்டதும் வரலாறு பதிவு செய்யும் தோழர் அச்சுதானந்தனின் ஆரம்பகால அரசியல் வரலாறு.

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக 1964-இல்; பொலிட் பீரோ உறுப்பினராக 1985-இல்; மாநிலச் செயலாளராக 1980 முதல் 1992 வரையில்; இடது ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக 1996 முதல் 2000 வரையில்; 2006 முதல் 2011 வரையில் முதல்வராக என்று இயங்கியதெல்லாம் அவரது பிற்கால அரசியல் வரலாறு.

கேரள மாநிலத்தில் மிக முதிர்ந்த வயதில் முதல்வரானவர் அச்சுதானந்தன்தான். தனது 82-ஆவது வயதில் முதல்வரானார் அவர். 14 ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சாதனையும் அவருடையதுதான். 2016-இல் இடது முன்னணி ஆட்சியைப் பிடிக்க அவர் தேவைப்பட்டார். தனது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு, அவர் பிரசாரத்தில் ஈடுபட்டதைப் பார்த்து உலகமே வியந்தது. அவருக்காகவே பலர் வாக்களித்தனர்.

தனது 92-ஆவது வயதில் 3,200 கி.மீ. பயணித்து 150-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டபோது, அந்த மனிதனின் கட்சியின் மீதான பற்று எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. பினராயி விஜயன் முதல்வரானபோது, மக்கள் செல்வாக்குள்ள அச்சுதானந்தனைப் புறக்கணித்ததை வரலாறு மன்னிக்காது.

"வாளித்தண்ணீர்' என்றும் "அவர் திரிபுரா முன்னாள் முதல்வர் நிருபேந் சக்கரவர்த்தியிடம் பாடம் படிக்க வேண்டும்' என்றும் சொன்னவர்கள் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, பூ வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போலித்தனத்தை அவர் பார்த்திருக்க வேண்டும்- அவருக்கே உரித்தான ஏளனப் புன்னகையைப் புரிந்திருப்பார்.

"வர்க்கப் போராட்டத்தை முன்னிறுத்தி தவறான சமூக சிந்தனைக்கு எதிராகப் போராடி சரியான பாதையில் நடத்திச் செல்ல வேண்டும் என்கிற கம்யூனிஸத்துக்காகத்தான் நான் வாழ்கிறேன்' என்பது அச்சுதானந்தனின் தன்விளக்கம். 1964-இல் மார்க்சிஸ்ட் கட்சியை கட்டமைத்த 32 மத்தியக் குழு உறுப்பினர்களில் எஞ்சி இருந்தவர் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன். இப்போது, அவரும் மறைந்து விட்டார். அவர்களுடன் 60 ஆண்டுக் கனவும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டெஸ்ட்: கே.எல்.ராகுல் அரைசதம்; வலுவான நிலையில் இந்தியா!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!

பாகிஸ்தான் வீரர்களிடம் போதிய திறமை இல்லை! - இந்திய முன்னாள் கேப்டன்

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

SCROLL FOR NEXT