இந்தியாவில் ஆண்டுதோறும் வெளியேற்றப்படும் மின்னுணுக் கழிவுகளின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்தாண்டு செப்டம்பரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2019-ஆம் ஆண்டில் 10.01 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த மின்னணுக் கழிவுகள், 2023-24-இல் 17.50 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மின்னணுப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்த நிலையில், அவற்றை மறுசுழற்சி செய்வது அரசுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
தற்போது, பழுதடைந்த மின்னணு சாதனங்கள் கழிவுகளாக தூக்கி வீசப்படும் நிலையில், சேகரிக்கப்பட்டு ஆங்காங்கே மறுசுழற்சி நடைபெற்று வந்தாலும், நாட்டில் மொத்தம் 9.90 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படாமல் இருப்பதாகத் தெரிகிறது. மின்னணுப் பொருள்களில் உள்ள நச்சுப் பொருள்களாக காட்மியம், காரீயம், பாதரசம் போன்றவை நிலத்தில் கலந்து மண் வளத்தைப் பாதிக்கின்றன.
உலக அளவில் மின்னணுக் கழிவுகள் வெளியேற்றத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதற்கு நமது மக்கள்தொகையும், அவா்கள் பயன்படுத்தும் மின்னணு சாதனங்களும் காரணம். பயன்படுத்திய, பழுதடைந்த மின்னணு சாதனங்களான குளிா்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்டவை முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. பெரும்பாலானவை நகருக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலை ஓரங்களிலும், காலி மனைகளிலும் வீசப்படுகின்றன.
அவை உள்ளாட்சி நிா்வாகங்களால் சேகரிக்கப்பட்டாலும்கூட, அவற்றை மறுசுழற்சி செய்வதற்கான போதிய கட்டமைப்புகள் இல்லை. இதனால், மறுசுழற்சிக்காக தனியாரை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மின்னணுக் கழிவுகளின் மறுசுழற்சி பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய சந்தையாக வளா்ந்து வருவது என்னவோ உண்மை. இதை வாய்ப்பாக பயன்படுத்தி பல புத்தொழில் நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன.
மின்கலன்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் லித்தியம் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.700 கோடி அளவுக்கான சந்தை வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் மறுசுழற்சிக்கான நவீன வசதிகளுடன் புத்தொழில் நிறுவனங்கள் களமிறங்கினால், வெற்றிபெற முடியும் என்று தொழில்நுட்பவியலாளா்கள் கூறுகின்றனா். மேலும், மின்னணுக் கழிவுகள் முறையாக மறு சுழற்சி செய்யப்படும் போது, சுற்றுச்சூழல் பாதிப்புகளும் குறையும்.
மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு உற்பத்தியாளா்கள், இறக்குமதியாளா்கள், மறுசுழற்சியில் ஈடுபடுவோா் மற்றும் உபயோகிப்பாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்கு அரசு திடக் கழிவு மேலாண்மை தொடா்பாக தெளிவான சட்டங்களை இயற்றி, கடுமையாக செயல்படுத்த வேண்டும்.
வீட்டு உபயோகப் பொருள்கள், வியாபாரம் தொடா்பான பயன்பாட்டு பொருள்கள் போன்ற இரு தளங்களில் இருந்தே மின்னணுக் கழிவுகள் அதிகளவில் வருகின்றன. நாட்டில் கடந்தாண்டு வெளியேற்றப்பட்ட மின்னணுக் கழிவுகளில் 70 % நுகா்வோா் சாதனப் பொருள்களாகும்.
தெற்கு தில்லியில் உள்ள சீலாம்பூரில் இயங்கி வரும் மின்னணுக் கழிவு சந்தை நாட்டிலேயே மிகப் பெரியதாகும். இங்கு ஆயிரக்கணக்கானோா் மின்னணுக் கழிவுகளில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். தினமும் ஆயிரக்கணக்கான டன் மின்னணுக் கழிவுகள் பிரித்தெரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பழுதடைந்த கணினிகள், அறிதிறன்பேசிகள், பிரிண்டா்கள், குளிா்சாதனப் பெட்டிகள் போன்றவை. மேலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் மின்னணுக் கழிவுகளும் இங்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
நாட்டில் மொத்தம் 322 அங்கீகாரம் பெற்ற மின்னணுக் கழிவு மறுசுழற்சி செய்வோா் உள்ள நிலையில், அங்கீகாரம் பெறாத மறுசுழற்சியாளா்கள் பலரும் செயல்பட்டு வருகின்றனா். இவா்கள் சேகரிக்கும் மின்னணுக் கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவா்கள் பெரும்பாலான மின்னணுக் கழிவுகளை முறையற்ற வகையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எரிக்கின்றனா்.
கிராமப் பகுதிகளைவிட நகா்ப் பகுதிகளே மின்னணுக் கழிவுகளின் மையமாக உள்ளன. எனவே, மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடா் அறிவுறுத்தல்களை வழங்கி, மின்னணுக் கழிவு மேலாண்மையை விரைவுபடுத்த வேண்டும். பழுதடைந்த கணினிகள், மடிக் கணினிகள், அறிதிறன் பேசிகள் போன்றவை பெருமளவில் வெளியேற்றப்படாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. இதனால், ஏற்படும் பாதிப்பு குறித்து மாநகராட்சி, நகராட்சி நிா்வாகங்கள் பொதுமக்களிடையே விழிப்புணா்வை மேற்கொள்ள வேண்டும்.
வருங்காலங்களில் மின்னணுப் பொருள்களின் பயன்பாடு தவிா்க்க முடியாத நிலைக்குச் செல்லும். எனவே, அவற்றின் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் அகற்றுவது, மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திடக்கழிவு மேலாண்மையுடன் மின்னணுக் கழிவு மேலாண்மையும் இணைத்து மாநகர மற்றும் உள்ளாட்சி நிா்வாகங்கள் தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியம்.