கோப்புப் படம் 
தலையங்கம்

ஊழலின் விலை உயிர்ப் பலிகள்!

மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து...

ஆசிரியர்

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் இருமலுக்கான திரவ மருந்து உட்கொண்ட 22 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீசன் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் "கோல்ட்ரிஃப்' இருமல் மருந்தை உட்கொண்டதால், இந்தக் குழந்தைகள் சிறுநீரகச்

செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இந்த மருந்தை உட்கொண்ட மேலும் பல குழந்தைகள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இருமல் மருந்தை உட்கொண்டு குழந்தைகள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல, ஏற்கெனவே கடந்த 2019, 2020-ஆம் ஆண்டுகளில் ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் இருமல் மருந்தை உட்கொண்ட பல குழந்தைகள் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசத்தில் "கோல்ட்ரிஃப்' இருமல் மருந்தை குழந்தைகளுக்குப் பரிந்துரைத்த மருத்துவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்த மாநிலத்தைச் சேர்ந்த மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் இருமல் மருந்துகளை முறையான தரப் பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய, மாநில அரசுகளின் தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் தவறியதால்தான், இத்தகைய உயிரிழப்புகள் தொடர்கின்றன.

ஒவ்வொரு மருந்திலும் எந்த அளவுக்கு வேதிப் பொருள்களைக் கலக்கலாம் என்ற வரையறை உள்ளது. இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைக்கால் (டிஇஜி) 0.1% மட்டுமே கலக்கலாம். ஆனால், காஞ்சிபுரம் நிறுவன இருமல் மருந்தில் டிஇஜி 48.6% கலக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அலோபதி மருந்துகளில் கசப்புத்தன்மையைப் போக்குவதற்காக, இனிப்புச் சுவையுடைய கிளிசரின் சேர்க்கப்படுவது வழக்கம். இந்தியாவில் ஒரு கிலோ கிளிசரின் விலை ரூ.998. ஆனால், ஒரு கிலோ டிஇஜி விலை ரூ.110 மட்டுமே. இதனால்தான், கிளிசரினுக்குப் பதிலாக மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் டிஇஜி-யை இருமல் மருந்தில் கலக்கின்றனர்.

டிஇஜி மிகவும் நச்சுத்தன்மையுடைய வேதிப்பொருளாகும். பெரும்பாலும், வாகன என்ஜின்களின் சூட்டைத் தணிக்கவும், "பிரேக்' சாதனங்களில் இலகுவான தன்மையைப் பராமரிக்கவும் டிஇஜி பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைப் பயன்பாட்டுக்கான இந்த வேதிப் பொருளை இருமல் மருந்தில் மிக அதிக அளவில் கலந்து தயாரித்ததால்தான், இது நச்சுத் தன்மையுடைய கலப்பட மருந்தாக உருமாறிவிட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தில் காஞ்சிபுரம் நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் கடந்த செப்டம்பர் மாதமே பாதிக்கப்பட்டனர். ஆனால், இது தொடர்பாக மத்திய பிரதேச மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்காததால் 22 குழந்தைகள் உயிரிழக்க நேரிட்டது. இந்த இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தது குறித்து இந்த மாதம் 1-ஆம் தேதிதான் மத்திய பிரதேச மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் தமிழகத்துக்கு தகவல் அளித்தனர்.

அக்டோபர் 1, 2 அரசு விடுமுறை தினங்கள் என்ற போதிலும்,தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் உடனடியாக காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு விரைந்து சென்று, இருமல் மருந்து மாதிரிகளைச் சேகரித்து தரப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்தப் பரிசோதனையில், அந்த இருமல் மருந்தில் டிஇஜி 48.6% கலந்திருப்பது தெரிய வந்ததையடுத்து, இந்த நிறுவனம் செயல்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், மருந்துக் கடைகளில் இந்த இருமல் மருந்தை விற்பனை செய்யாமல் முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இரண்டே நாள்களில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்களைப் பாராட்டியாக வேண்டும். அதேநேரத்தில், உயிரிழப்பு நேரிட்டவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்த இந்த அலுவலர்கள், கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் ஸ்ரீசன் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து கண்காணிக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.

கடந்த 2022, ஆகஸ்டில் உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தயாரிப்பு இருமல் மருந்தை உட்கொண்ட 65 குழந்தைகள் உயிரிழந்தனர். இதேபோல, 2023-ஆம் ஆண்டில் மேற்கு ஆப்பிரிக்க நாடானகாம்பியாவில் இந்தியத் தயாரிப்பு இருமல் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவங்களால் உலக அரங்கில் இந்தியத் தயாரிப்பு மருந்துப் பொருள்கள் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. இதையடுத்து, அரசு பரிசோதனைக் கூடங்களில் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே, இந்தியா

விலிருந்து மருந்துப் பொருள்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்தியாவுக்குள் விற்பனை செய்யப்படும் மருந்துகளை அரசு பரிசோதனைக் கூடங்களில் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என்பதற்கு அரசுதான் விளக்கமளிக்க வேண்டும்.

அமெரிக்காவில் கடந்த 1937-ஆம் ஆண்டில் டிஇஜி கலக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட 105 குழந்தைகள் உயிரிழந்தனர். இதையடுத்து, இருமல் மருந்தில் இந்த வேதிப்பொருளைக் கலப்பதற்கு தடை விதித்ததோடு, இதை அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாகக் கண்காணித்தும் வருகிறது. அதனால் இத்தகைய மரணங்கள் அந்த நாட்டில் நிகழ்வதில்லை.

ஆனால், நமது நாட்டில் "உயிர்க்கொல்லி' மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்யும் மருந்து நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் சிக்காமல் செயல்படுகின்றன. ஆட்சியாளர்களையும், அரசு

அலுவலர்களையும் வசப்படுத்தி செயல்படும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு முற்றுப்புள்ளி விழாதவரை, மேலும் பல உயிர்ப் பலிகள் தொடர்வதைத் தடுக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராவல்பிண்டி சிக்கன் டிக்கா, பஹவல்பூர் நான்: விமானப் படை நிகழ்ச்சி மெனு

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

பார்மா, வங்கிப் பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

ஆந்திரத்தில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: ரூ.550 கோடி புகையிலை எரிந்து நாசம்

2-வது டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அசத்தல்; வலுவான நிலையில் இந்தியா!

SCROLL FOR NEXT