தலையங்கம்

கனிம நெருக்கடி!

நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு தொடர்புடைய நவீன தொழில்நுட்பங்களுக்கு அவசியமான அரிய வகை கனிமங்களின் தேவைக்கு விரைந்து மாற்று வழியைக் கண்டறிய வேண்டிய நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ஆசிரியர்

அரிய வகை கனிமங்கள் சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறி இருக்கின்றன. சக்தி வாய்ந்த காந்தங்கள், ஒளிருதல் மற்றும் மின் வேதியியல் தன்மை கொண்ட 17 வகை குழுமத்தைச் சேர்ந்த அரிய வகை கனிமங்கள் உள்ளிட்டவை காற்றாலை இயந்திரங்கள், மின்சார வாகனங்கள், விமானங்கள், ஏவுகணைகள், ரேடார் உள்ளிட்ட கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. உயர் தொழில்நுட்பக் கருவிகளுக்கு மட்டுமின்றி அத்தியாவசியப் பொருள்களாகிவிட்ட அறிதிறன்பேசிகள், தொலைக்காட்சிகளிலும் அவற்றின் பயன்பாடு அதிகம்.

அரிய வகை கனிமங்களை பூமியிலிருந்து வெட்டி எடுக்கவும், அவற்றைச் சுத்தப்படுத்தவும் பெருமளவு முதலீடு மட்டுமின்றி நவீன தொழில்நுட்பமும், உள்கட்டமைப்பு வசதிகளும் தேவை. உலக உற்பத்தியில் 61 சதவீதத்தையும், சுத்திகரித்தலில் 92 சதவீதத் திறனையும் கொண்டுள்ள நாடாக சீனா இருந்து வருகிறது.

அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதிக்கு சீனா பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா 30% வரியை விதித்தபோது, அதற்குப் பதிலடியாக கடந்த ஏப்ரலில் ஏழு அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்தது. இப்போது சீனா கூடுதலாக சில கட்டுப்பாடுகளை விதித்திருப்பது அமெரிக்காவை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. இதற்கு எதிராக சற்றும் எதிர்பார்க்காத வகையில் சீனப் பொருள்களுக்கு மேலும் 100% வரி விதிப்பை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனாவில் பூமிக்கு அடியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் அரிய வகை கனிமங்களை கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் சீன அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். அரியவகை கனிம தாதுக்களை வெட்டி எடுத்தல் மற்றும் சுத்தப்படுத்துதலில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கும் அரசின் அனுமதியைப் பெற வேண்டும். அதோடு, ராணுவ உபகரணங்களில் பயன்படுத்தப்படும் உலோகங்களுக்கான எந்தவொரு ஏற்றுமதி கோரிக்கையும் ரத்து செய்யப்படுவதாக சீனா அறிவித்துள்ளது.

அரிய வகை கனிமங்களைக் கொண்டுள்ள உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் இருந்தாலும் தற்போது வரை உள்நாட்டுத் தேவைக்கு 95% இறக்குமதியையே சார்ந்துள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு தொடர்புடைய நவீன தொழில்நுட்பங்களுக்கு அவசியமான அரிய வகை கனிமங்களின் தேவைக்கு விரைந்து மாற்று வழியைக் கண்டறிய வேண்டிய நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா தனது தேவைக்கு சீனா, ஹாங்காங், ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து அரிய வகை கனிமங்களை இறக்குமதி செய்கிறது. சீனாவிலிருந்துதான் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரலில் சீனா சில கட்டுப்பாடுகளை விதித்தபோதே அதன் தாக்கத்தை இந்தியா உணரத் தொடங்கியது.

எனவேதான் உள்நாட்டில் அரிய வகை கனிமங்களைக் கண்டறிவது, சுரங்கங்களை அமைப்பது, சுத்திகரிப்புக்கு முதலீடு செய்வது என பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அரிய வகை கனிமச் சுரங்கங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு அவசியம் இல்லை என கடந்த செப்டம்பரில் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அறிவித்ததன் பின்னணியும் இதுதான்.

அரிய வகை கனிம ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் ஒன்றாக இந்தியாவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் அவற்றை உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. சீனா மட்டுமல்லாமல் அமெரிக்காவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியப் பொருள்களுக்கு கூடுதலான வரி விதிப்பு செய்துள்ளது.

கனிமங்களைச் சுத்திகரித்தோ அல்லது வேறு ஏதேனும் வடிவத்திலோ அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இந்தியாவுக்கு கனிமங்களை வழங்க முடியும் என்று சீனா கூறுகிறது. ரஷியாவிலிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து அதைச் சுத்திகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டுவதுபோல கனிமங்களை அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துவிடக்கூடாது என்பதுதான் அதன் நோக்கம்.

தொடர்ந்து தற்சார்பை வலியுறுத்திவரும் பிரதமர் மோடி, அரிய வகை கனிமங்களின் உள்நாட்டுத் தேவையை நிறைவு செய்ய மேற்கொள்வதற்கான முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுத்தால் மட்டுமே வருங்காலத்தில் சீனா உள்ளிட்ட நாடுகளை அரிய வகை கனிமங்களுக்கான இறக்குமதிக்கு சார்ந்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்க முடியும். சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கை வளங்கள் அழிப்பு உள்ளிட்ட விமர்சனங்களை கம்யூனிஸ சர்வாதிகார சீனாவைப்போல ஜனநாயக நாடான இந்தியா கடந்து போக முடியாது.

இந்த மாத இறுதியில் தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச இருக்கிறார்கள். அப்படி சந்தித்துப் பேசும்போது, தனது தரப்பு பேரத்தை வலுவாக்கிக் கொள்ள சீனா மேற்கொண்டுள்ள ராஜதந்திர முடிவாக அரிய வகை கனிமங்களின் மீதான கட்டுப்பாடுகள் இருக்கக்கூடும். அமெரிக்காவைப் பணிய வைக்க சீனா மேற்கொண்டுள்ள ராஜதந்திர முடிவாக இருந்தாலும் அதனால், கடுமையாகப் பாதிக்கப்படுவது இந்தியாவாக இருக்கும். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

SCROLL FOR NEXT