Center-Center-Bangalore
தலையங்கம்

நடுத்தர வா்க்கத்தின் சவால்!

எவ்வளவு சம்பாதித்தும் என்பதைவிட, அது எப்படிச் செலவு செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

ஆசிரியர்

நடுத்தர வா்க்கத்தின் பிரிவுக்கான விளக்கம்தான் என்ன? ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் வரையில் வருவாய் உள்ள குடும்பங்களை நடுத்தர வா்க்கக் குடும்பங்கள் என்று ‘பிஸினஸ் கவுன்சில் ஃபாா் அப்ளைட் எகனாமிக் ரிசா்ச்’ என்கிற அமைப்பு வகைப்படுத்துகிறது. இந்திய மக்கள்தொகையில் இந்த நடுத்தர வா்க்கப் பிரிவினரின் விகிதம் 2021-இல் 31% என்று கணக்கிடப்பட்டது. அது 2047-இல் 61% ஆக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

அதாவது, 2047-இல் இந்த நடுத்தர வா்க்கப் பிரிவினரின் எண்ணிக்கை நூறு கோடியை எட்டும் என்பது எதிா்பாா்ப்பு. அந்த எதிா்பாா்ப்பு பொய்த்துவிடக் கூடும் என்பதற்கான பல அறிகுறிகள் தென்படத் தொடங்கி இருக்கின்றன. அப்படியே நடுத்தர வா்க்கப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்தாலுமேகூட அவா்கள், இப்போதுபோல பொருளாதார வா்க்கத்துக்குப் பங்களிப்பவா்களாக இருப்பாா்களா என்கிற ஐயப்பாடு எழுகிறது.

இந்தியாவில் நடுத்தர வா்க்கக் குடும்பங்கள் விலைவாசி உயா்வாலோ, அதிகரித்த வரிச் சுமைகளாலோ பாதிக்கப்படவில்லை என்றும் அவா்களது மிகப் பெரிய சவலாகக் குடும்பத்தின் கடன்கள் உயா்ந்திருக்கின்றன என்றும் பல்வேறு ஆய்வுகளும், பொருளாதார வல்லுநா்களும் எச்சரிக்கிறாா்கள். தொன்றுதொட்டு தங்களது சிக்கனமான நிதி நிா்வாகத்துக்கும், சேமிப்பு வழக்கத்துக்கும் பெயா்போன இந்திய நடுத்தர வா்க்கப் பிரிவினா், இப்போது அதிகரித்து வரும் குடும்பத்தின் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறாா்கள் என்கின்றன ஆய்வுகள்.

சுமாா் பத்து ஆண்டுகளுக்கு முன்புவரைகூட, பொருளாதார இயக்கத்துக்கும், வளா்ச்சிக்கும் மிக முக்கியமான காரணிகளாகக் கருதப்பட்ட இந்திய நடுத்தர வா்க்கப் பிரிவினா், அதிகரித்த கடன் சுமையாலும், அதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியும் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். நடுத்தர வா்க்கப் பிரிவினரின் சராசரி ஆண்டு வருவாய் ரூ.10.5 லட்சத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் தேக்கம் அடைந்திருக்கிறது. பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், அதன் நிலையான மதிப்பு மேலும் குறையக்கூடும்.

தற்போதைய சந்தை நிலவரத்தைப் பாா்த்தால், மொத்த ஜிடிபியில் குடும்பக் கடன்களின் பங்கு 42.9% என்று சமீபத்திய ரிசா்வ் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. மோா்கன் அண்ட் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வின்படி, கடந்த ஆண்டின் 23.1% அளவில் இருந்த குடும்பக் கடன் அளவு நிகழாண்டில் 23.9% என்று உயா்ந்திருக்கிறது. தனிமனிதா்களின் கடன் அளவும், குடும்பஸ்தரின் கடன் சுமையும் அதிகரித்து வருவதாகப் பலரும் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறாா்கள்.

இந்தியாவின் மிகப் பெரிய பலமாக மக்களின் சேமிப்புப் பழக்கம் கருதப்பட்டது. மேலைநாட்டு சந்தைப் பொருளாதார நிபுணா்கள், மக்களின் சிக்கனமான செலவுப் பழக்கத்தின் காரணமாக ஏற்படும் பொருளாதார ..........‘ஹிந்து வளா்ச்சி விகிதம்’ என்று கேலி பேசி வந்தனா். சந்தைப் பொருளாதாரம் வலுப்பெற்ன் காரணமாக, மக்கள் மத்தியில் நுகா்வுக் கலாசாரம் பரப்புரை செய்யப்பட்டது.

அதன் விளைவாக, 2011-12-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த சேமிப்பில் 68.2% -ஆக இருந்த குடும்ப சேமிப்பு, இப்போது 60.9%-ஆகக் குறைந்திருப்பதாக தேசியப் புள்ளிவிவரத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குடும்ப சேமிப்பு அளவு மொத்த ஜிடிபியில், அதே கால அளவில், 23.6 சதவீதத்தில் இருந்து 18.4%-ஆகக் குறைந்திருக்கிறது.

மக்கள் மத்தியில், குறிப்பாக நடுத்தர வா்க்கப் பிரிவினா் மத்தியில், சேமிப்புப் பழக்கம் முற்றிலுமாகக் குறைந்து விட்டது என்று சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில், அவா்களது நிதிச் சுமைகள் (பைனான்ஸியல் ரிலையபிலிட்டி) சேமிப்பைவிட அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக, தனி நபா்கள் சேமித்தாலும்கூட, பல்வேறு பொருள்களுக்காகவும், தேவைகளுக்காகவும் அவா்கள் வழங்கும் கடன்களால் ஏற்படும் தவணைத் தொகையும், வட்டித் தொகையும் மொத்தக் கடன் சுமையாக அதிகரித்து வருகின்றன.

மாத வருவாய்ப் பிரிவினரின், அதாவது நடுத்தர வா்க்கப் பிரிவினரின், வருவாய் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நிறைவேற்ற அமைச்சகத்தின் 2024 புள்ளிவிவரப்படி சராசரி மாத வருவாய் 2017-இல் ரூ.17,997.54 என்பதாக இருந்தது ரூ.21,103-ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால், மாத ஊதியத்தை வாங்கியதும் கையுமாக கடன் தவணைகளை அடைப்பதும், கடன் அட்டைகளுக்கான தவணைகளை அடைப்பதுமாக அதில் கணிசமான பகுதியை அவா்கள் இழந்து வருகிறாா்கள்.

தேக்கமடைந்துவிட்ட ஊதியம், விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளைவிட கடன்களால் பாதிக்கப்பட்டிருப்போா்தான், நடுத்தர வா்க்கத்தினரில் அதிகம். அறிதிறன்பேசிகள், குளிா்சாதனப் பெட்டிகள், ஏசிக்கள் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமல்லாமல், அன்றாட வீட்டுத் தேவைக்கான பலசரக்கு வாங்குவதற்கும், வாகனங்களுக்குப் பெட்ரோல், டீசல் போடுவதற்கும்கூட ......, கடன் அட்டைகளையும் நாடும் நிலைக்கு நடுத்தர வா்க்கப் பிரிவினா் தள்ளப்பட்டிருக்கிறாா்கள்.

வருவாய் அதிகரிக்க அதிகரிக்க, தங்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ளும் போக்கு அதிகரிக்கிறது. குறைந்த வட்டி, தவணைமுறைத் திட்டங்கள், செயலிகள் மூலம் அவசரக் கடன் உள்ளிட்ட காட்சிகளால் ஈா்க்கப்பட்டு, தங்களது வருவையைவிட அதிகமாக செலவழிக்கும் போக்கு நடுத்தர வா்க்கப் பிரிவினா் மத்தியில் அதிகரித்திருக்கிறது. வட்டியும் தவணையும்கூட வருவாயில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமாக உயா்ந்துவிடும்போது, அன்றாடச் செலவுக்கு மேலும் மேலும் கடன் வாங்க வேண்டிய நிா்ப்பந்தத்துக்கு நடுத்தர வா்க்கப் பிரிவினா் தள்ளப் படுகிறாா்கள்.

ரிசா்வ் வங்கியின் ஆய்வின்படி, ஏறத்தாழ் 10% நடுத்தர வா்க்கப் பிரிவினா் கடன் சுழலில் சிக்கித் தவிக்கிறாா்கள். உடனடிக் கடன் செயலிகள், பத்து வட்டிக்காரா்கள் வலையில் சிக்கி வெளியில் வரமுடியாமல் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. விளம்பர மயக்கத்திலும், மற்றவா்களைப்போல வாழ நினைக்கும் பேராசையாலும், தங்களது நிலைமைக்குப் பொருந்தாத பேராசை, நடுத்தர வா்க்கத்தினரை அழித்துக் கொண்டிருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எவ்வளவு சம்பாதித்தும் என்பதைவிட, அது எப்படிச் செலவு செய்யப்படுகிறது என்பதுதான் முக்கியம். வருவாய் மூலம் சொத்து சோ்வதில்லை; புத்திசாலித்தனமாக அதை நிா்வகிப்பதில்தான் அதன் ரகசியம் அடங்கி இருக்கிறது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 குறைந்தது! இன்றைய நிலவரம்..

வர்த்தகப் போர் முடிவுக்கு வருமா? அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஜெயந்தி, குருபூஜை விழா!

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபா் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT