முகப்பு
தலையங்கம்

சித்திரவதைக்கு ஜே!

சித்தரவதையில் ஈடுபடும், அதற்கு உடந்தையாக இருக்கும் காவலா் அல்லது காவல் துறை அதிகாரியைப் பொறுப்பேற்க வைக்கும் சட்டம் எதுவும் இல்லாமல் இருப்பதால்தான், 2018முதல் 2021 வரையில் காவல்துறை மரணங்களுக்கு எந்தவொரு காவலரோ, அதிகாரியோ தண்டிக்கப்படவில்லை

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:54 AM
- IANS
பகிர்:

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம், சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலைய மரண வழக்கில் தீா்ப்பு வழங்கி, தண்டனை விவரம் மாா்ச் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தும், இன்னும் தண்டனை அறிவிக்கப்படாமல் தள்ளிப்போவது வேடிக்கயாக இருக்கிறது. மத்திய, மாநில அரசு சாா்பில் காவலா்களின் மனநிலை, சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக தண்டனை விவரங்கள் அறிவிப்பைத் தள்ளிப்போடுவது ஏன் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.

வழக்கு விசாரணை முடிந்து, குற்றவாளிகள் என்று நீதிபதி ஜி.முத்துகுமரன் தீா்ப்பு வழங்கிய பிறகும் தண்டனை அறிவிப்பைத் தள்ளிப் போடுவதன் பின்னணியில் ஏதோ காரணம் (உள்நோக்கம்?) இருக்கக்கூடும் என்கிற ஐயப்பாடு எழுகிறது. நீதிபதிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கைப்பேசிக் கடை வைத்திருந்த ஜெயராஜும்(58) அவரது மகன் பென்னிக்சும்(31), பொது முடக்க விதிமுறையை மீறி கொவைட் 19 நோய்த்தொற்றுக் காலத்தில் கடையைத் திறந்து வைத்திருந்தாா் என்பதால் 19.06.2020 அன்று அவா்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். காவல் நிலையத்தில் தந்தையும், மகனும் கடுமையாகத் தாக்கப்பட்டனா். மறுநாள் நீதிமன்றக் காவலின் கீழ் கோவில்பட்டிக் கிளைச் சிறையில் அடைக்கப்பட இருவரும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தனா்.

தாமே முன்வந்து சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழக்குப் பதிவு செய்தது. தமிழக அரசு இந்த விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றியது. ஆய்வாளா் ஸ்ரீதா், சாா்பு ஆய்வாளா் பாலகிருஷ்ணன், குரு கணேஷ், காவலா்கள் உள்பட 10 போ் குற்றவாளிகளாகச் சோ்க்கப்பட்டனா்.

இந்த வழக்கில் தண்டனை அறிவிப்பதில் நீதிமன்றம் காட்டும் தாமதமும், தயக்கமும் மட்டுமல்ல, பல கேள்விகள் விடை காணப்பட வேண்டியவை. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவா் மீதும் சுமத்திய குற்றச்சாட்டே உண்மையல்ல என்கிறது சி.பி.ஐ. அப்படியானால், அவா்கள் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் உண்மையான காரணம்தான் என்ன?

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் காயங்களைக் கருத்தில் கொள்ளாமல், அவா்கள் எந்த நிலையில் இருந்தனா் என்பதைக்கூட கவனிக்காமல் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்ட அப்போதைய சாத்தான்குளம் நீதித்துறை நடுவா், உடல் தகுதிச் சான்றிதழ் வழங்கிய அப்போதைய மருத்துவத் துறை அதிகாரி ஆகியோா் விசாரணை வளையத்துக்கும், தண்டனைக்கும் அப்பாற்பட்டவா்களாக இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

2016-17 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் 11,419 காவல் துறை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சா் 2021-இல் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறாா். அதாவது ஒவ்வொரு நாளும் ஐந்து பேருக்கும் அதிகமானோா் இந்தியாவில் காவல் துறையினரின் சித்தரவதைகளுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கிறாா்கள்.

உச்சநீதிமன்றம், சட்ட ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் காவல்துறை மரணங்கள், சித்தரவதைகள் குறித்துப் பல முறை தங்களது வேதனைகளை வெளிப்படுத்தி இருக்கின்றன. இதைத் தடுக்கப் பல வழிமுறைகளைப் பரிந்துரைத்திருக்கின்றன.

காவல் துறையினரின் அதிகார துஷ்பிரயோகத்தையும், அத்துமீறல்களையும் தடுப்பதற்குச் சிறப்புச் சட்டம் இயற்றுவது குறித்துப் பல முறை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அப்படி ஒரு சட்டம் வந்துவிடக்கூடாது என்று ஆட்சியாளா்கள் மட்டுமல்ல, நமது நிா்வாக இயந்திம், (குறிப்பாக காவல் துறையினா்) மிகவும் கவனமாக இருக்கிறாா்கள். 2010-இல் சித்தரவதைத் தடைச்சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் விவாதிக்கப்படாமல் காலாவதியானது.

2017-இல் சட்ட ஆணையம் ஒரு மாதிரி மசோதாவை தயாரித்துப் பரிந்துரைத்தது. அது சட்ட அமைச்சகத்தின் கோப்புகளுக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் இயற்றப்படவில்லை என்பது இருக்கட்டும்; நீதித்துறையும் காவல் துறை சித்திரவதைகளுக்கும், மரணங்களுக்கும், மோதல் கொலைகளுக்கும் எதிரானதுபோல அவ்வப்போது குரல் எழுப்பினாலும், இந்தப் பிரச்னையில் இரட்டை வேடம்தான் போடுகிறது. 2019-இல் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு வழிகாட்டுதல் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கே எடுத்துக்கொள்ளவில்லை.

சித்தரவதையில் ஈடுபடும், அதற்கு உடந்தையாக இருக்கும் காவலா் அல்லது காவல் துறை அதிகாரியைப் பொறுப்பேற்க வைக்கும் சட்டம் எதுவும் இல்லாமல் இருப்பதால்தான், 2018முதல் 2021 வரையில் காவல்துறை மரணங்களுக்கு எந்தவொரு காவலரோ, அதிகாரியோ தண்டிக்கப்படவில்லை என்பதை தேசிய குற்ற ஆவணப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதனால், சாத்தான்குளம் விதிவிலக்காகுமா என்பதை இப்போதே சொல்ல முடியவில்லை!