வருமுன் காப்பது நல்லது!
நிகழ் நிதியாண்டுக்கான வேளாண் துறையின் முன்னோட்ட வளர்ச்சி எதிர்பார்ப்பு வெறும் 2.4% மட்டுமே. தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும் வேளாண் துறை மோசமான வளர்ச்சியை எதிர்கொண்டால், அதனால் உணவு உற்பத்திக் குறைவு ஏற்படுவது மட்டுமல்ல, ஊரகப் பகுதி வேலைவாய்ப்புகளும், வருமானமும் குறையும் என்பதையும் பார்க்க வேண்டும்.
ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் மேற்காசியப் போர் நிலவரம் இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது என்றால், அத்துடன் நின்றுவிடப் போவதில்லை நமது பிரச்னைகள். செயற்கைப் பேரிடரான போர்ச்சூழலைப் போலவே, இயற்கையும்கூட இந்த ஆண்டு நம்மைப் பழிவாங்கி விடுமோ என்கிற அச்சம் எழுகிறது.
உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் மார்ச் மாத முன்னறிவிப்பு அறிக்கை, தளர்ச்சி அடையும் "லா நினா' சூழல் கடல் வெப்பத்தை அதிகரித்து "எல் நினோ' உருவாகக் காரணமாகலாம் என்று எச்சரிக்கிறது. மே மாதத்தில் தொடங்கி ஜூலை மாதத்துக்குள் "எல் நினோ' சூழல் ஏற்பட 40% வாய்ப்பு காணப்படுவதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய குறுகிய கால வானிலை முன்னறிவிப்புக்கான ஐரோப்பிய மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை நேரடியாகவே "எல் நினோ' எச்சரிக்கையை எழுப்புகிறது. 22% சூப்பர் "எல் நினோ'வுக்கும், 80% வலிமையான "எல் நினோ'வுக்கும், 98% மிதமான "எல் நினோ' வுக்கும் இந்த ஆண்டில் வாய்ப்பிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அந்த முன்னெச்சரிக்கைகள் உண்மையாகுமானால், இந்தியப் பொருளாதாரம் கடுமையான விதத்தில் பின்னடைவை சந்திப்பதுடன், விலைவாசி உயர்வையும் சந்திக்க நேரிடும் என்பதை நாம் உணர வேண்டும்.
2023 தவிர கடந்த ஐந்தாண்டுகளாக தென்மேற்குப் பருவமழைப் பொழிவு தாராளமாகவே இருந்து வந்திருக்கிறது. சராசரி மழைப்பொழிவு என்பது உறுதியாகவும், சராசரிக்கு அதிகமான மழைப்பொழிவு ஜூன் முதல் செப்டம்பர் மாத காலகட்டத்திலும் இருந்து வந்திருக்கிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் "எல் நினோ' சூழல் தென்மேற்குப் பருவமழையின் அந்த வழக்கமான மழைப்பொழிவை பாதிக்குமோ என்பதுதான் பரவலாக எழுந்திருக்கும் அச்சம்.
பசிபிக் மகா சமுத்திரத்தின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் மேற்பகுதியில் அதிகரிக்கும் வெப்பத்தின் விளைவால் உருவாகும் ஒருவித காலநிலை பாதிப்புதான் "எல் நினோ' எனப்படுவது. பசிபிக் கடலில் இந்த "எல் நினோ' ஏற்படும்போது, அதன் விளைவாக இந்தியத் துணைக் கண்டத்தில், அதாவது தெற்காசிய நாடுகளில், வழக்கத்தைவிடக் குறைவாகவோ அல்லது மிகக் குறைந்த அளவோதான் மழைப்பொழிவு காணப்படும்.
இதற்கு நேர் மாறானது "லா நினோ' என்கிற காலநிலை அல்லது சூழல். பசிபிக் மகா சமுத்திரத்தின் மேற்பகுதி குளிர்ச்சி அடைவதால் ஏற்படும் அந்தச் சூழல் உருவாகும் போதெல்லாம், தெற்காசியாவில் பருவமழைப் பொழிவு அதிகரிப்பது வழக்கம்.
"எல் நினோ' சூழல் உண்மையாக இருக்குமானால் அது நிச்சயம் மிகப் பெரிய பாதிப்புக்கு வழிகோலும். வறட்சி ஏற்பட்டாலும்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே நேரத்தில், "எல் நினோ' குறித்த தேவையில்லாத அச்சம் அண்மைக்காலமாக ஆண்டுதோறும் எழுப்பப்படுவதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. "எல் நினோ' தாக்கத்தின் அளவு மாறுபடும் என்பதுடன், எல்லா "எல் நினோ' சூழலும் இந்திய விவசாய மகசூலைப் பாதிப்பதாகச் சொல்லவும் முடியாது.
1950 முதல் இந்தியாவில் காணப்பட்ட 15 பருவநிலை மாற்றத்தால் வறட்சி உருவான ஆண்டுகளில், 10 ஆண்டுகள் "எல் நினோ' சூழல் கடுமையாகக் காணப்பட்ட ஆண்டுகள்.
மிதமான அல்லது வலுவான "எல் நினோ' ஆண்டுகளில் நீண்டகால சராசரி மழைப்பொழிவைவிடப் பருவ மழை சுமார் 15% குறைவாகவே காணப்பட்டது. இதனால், வேளாண் மொத்த கூட்டு மதிப்பு பாதிக்கப்பட்டது.
நிகழ் நிதியாண்டுக்கான வேளாண் துறையின் முன்னோட்ட வளர்ச்சி எதிர்பார்ப்பு வெறும் 2.4% மட்டுமே. தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும் வேளாண் துறை மோசமான வளர்ச்சியை எதிர்கொண்டால், அதனால் உணவு உற்பத்திக் குறைவு ஏற்படுவது மட்டுமல்ல, ஊரகப் பகுதி வேலைவாய்ப்புகளும், வருமானமும் குறையும் என்பதையும் பார்க்க வேண்டும்.
சராசரி அல்லது கடுமையான "எல் நினோ' ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலைவாசி அதிரிக்கும்; காரிஃப் பருவ சாகுபடி 6% முதல் 12% வரை குறையும். "எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள மத்தியத் தொகுப்பிலிருந்து உணவு தானியங்களை வழங்குவது, ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது, தட்டுப்பாடுள்ள வேளாண் பொருள்களின் இறக்குமதிக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.
உலகம் முழுவதும் காணப்படும் போர்ச் சூழலால் உக்ரைன் போன்ற பகுதிகளில் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது போதாதென்று, சர்வதேச சரக்குப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இறக்குமதிக்கான வாய்ப்புக் குறைவு என்பது மட்டுமல்லாமல், உரத்துக்கான தட்டுப்பாடும் காணப்படுகிறது. இந்ந நிலையில் "எல் நினோ' சூழலும் உருவானால், நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பது எளிதாக இருக்காது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பருவ மழை குறித்த முன்னோட்ட அறிவிப்பு ஏப்ரல் மாதம் வந்தால்தான், எதையும் தெளிவாகக் கூறமுடியும் என்பதுதான் இப்போதைய நிலைமை. அரசு இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும்.