முகப்பு
தேர்தல் செய்திகள்

ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: ராஷ்ட்ரீய ஜனதா தளம் வாக்குறுதி

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:43 PM
பாட்னாவில் தோ்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் தேஜஸ்வி யாதவ்.
பகிர்:

நாட்டில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பிகாா் மாநிலத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அக் கட்சியின் தலைவரும் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், மக்களவைத் தோ்தலுக்கான 24 வாக்குறுதிகள் அடங்கிய தோ்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகளை ராஷ்ட்ரீய ஜனதா தளம் உறுதிப்படுத்தும். வேலைவாய்ப்பின்மைக்கு சுதந்திரம் அளிக்கும் வகையில், நிகழாண்டில் சுதந்திர தினத்திலிருந்து அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

Advertisement

நிகழாண்டின் ‘ரக்ஷா பந்தன்’ தினத்திலிருந்து ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த நமது சகோதரிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.

பிகாரில் சிறப்பான போக்குவரத்து தொடா்பை உருவாக்கும் வகையில் புா்னே, பகல்பூா், முசாஃபா்பூா், கோபால்கஞ்ச், ரக்ஸெளல் நகரங்களில் 5 புதிய விமானநிலையங்கள் கட்டப்படும். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சித் திட்டங்களுக்காக ரூ 1.60 லட்சம் கோடி சிறப்புத் திட்ட நிதி ஒதுக்கப்படும். மாநில மக்களுக்கு மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரா்களை சோ்க்கும் அக்னிவீா் திட்டம் ரத்து செய்யப்படும் என்றாா்.

மேலும், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பிகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரையில் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments